வியாழன், 5 டிசம்பர், 2019

பற்று

அங்கிருந்து இரண்டு நிமிட நடைத் தொலைவில் NTUC Fairprice. பிரதான சாலையைத் தாண்டினால் முருகன் ஸ்டோர்ஸ். லாபகரமான வியாபாரத்திற்கேற்ற இடம் அதுவல்ல என்று யாராலும் சொல்லிவிட முடியும்.
சாம்பிராணி புகைக்கிடையே, கடைக்கு வெளியே இருக்கும் கூடையில் உருளைக்கிழங்குகளை அடுக்கி வைத்துக் கொண்டிருந்தார் வெள்ளை வேட்டியணிந்த அந்த முதியவர். இந்த ஊருடன் இன்னமும் ஒட்டியிராத அன்னியத்தன்மை அவரது உடல் மொழியில். இந்திய அரசாங்க வேலையில் இருந்து ஓய்வு பெற்றவராக இருப்பார் என்று தோன்றியது.
இந்த ஊரில் தடம் பதிப்பதற்கான தொடக்க முயற்சியாக அவரது மகன் அக்கடையைத் துவக்கியிருக்க வேண்டும். Emotional supportக்காக ஊரிலிருந்து தந்தையை வரவழைத்திருக்க வேண்டும்.
வாடிக்கையாளர் பொறுக்கி எடுத்து, பின்னர் வேண்டாம் என்று விட்டுவிட்டுச் சென்ற உருளைக்கிழங்குகளை மீண்டும் அவர் சீராய்த் தட்டில் அடுக்கிய பாங்கில் மகன் தொழிலில் முன்னேறிவிட வேண்டும் என்ற வேண்டுதலுடன் கூடிய நம்பிக்கை தெரிந்தது.
அவரது அந்த நம்பிக்கை மெய்யாக வேண்டும் என்று மனம் அனிச்சையாக வேண்டிக்கொண்டது.

செவ்வாய், 12 நவம்பர், 2019

உவன்கதை ஒன்று

   மங்கிய பீச் பழத்தோலின் நிறத்திலிருக்கும் சிறுவன் உவன். உவனின் வீடு இளம்பச்சைச் சுவர்களையும், பழுப்பு கதவு ஜன்னல்களையும், அடர் சிவப்பு கூரையையும் கொண்டிருந்தது. அந்தக் கூரையின் பக்கவாட்டிலிருந்த புகைப்போக்கி, சிக்கலாகிவிட்ட கம்பியைப் போலச் சுருண்டு செல்லும் புகையை எந்நேரமும் கக்கியபடி இருந்தது. உவனுடைய வீட்டிற்கு முன்னால் இருந்த செங்கற்படிகள் சிதைந்திருந்தாலும், வெப்பச் சலனங்களால் விரிசல் விட்டு, நாளடைவில் துண்டுகளாகி மண்ணில் புதைந்து தட்டையாகிவிட்டிருந்த அதன் கற்கள் உவன் தவ்வி குதிக்க ஏதுவானதாய் அமைந்திருந்தன.  

   உவனது வீட்டுக் கூரையின் கிடைமட்டக் கோட்டிற்கு 47 டிகிரி சாய்மானத்தில், ஆறு கதிர்களுடன் எப்பொழுதும் மிதந்து கொண்டிருந்த சிவப்புச் சூரியன் இரவு பகல் பாராமல் வெயிலை அந்த இடம் முழுக்க பரப்பிக் கொண்டிருந்தது. அதற்கு இரண்டு பக்கமும் வெண்குன்றுகளாய் பம்மிய ஓரங்களுடன் படர்ந்திருந்த மேகங்களில் ஒன்று மல்லார்ந்து படுத்தபடி கால்களை மேல் நோக்கி நீட்டியிருக்கும் மூன்று கால் பூனை போல இருந்தது.

   வீட்டின் முன்புறம் இருந்த புல்தரை தான் உவனுடைய விளையாட்டு மைதானம். சில சமயங்களில் அந்தப் புற்களில் ஒன்றை விரல்களால் கிள்ளியெடுத்து, அதன் உச்சியில் மொட்டாய்  அமர்ந்திருக்கும் பனித்துளியைச் சுவைத்துப் பார்ப்பான். புல் வாடை படர்ந்த குளிர்ந்த பனிக்கூழாய் கரைந்து அரைநொடியில் காணாமல் போகும் அந்தத் துளியை, என்றேனும் ஒருநாள் தன் தொண்டை நனையும் வரை உள்ளிழுத்துச் சுவைக்க வேண்டும் என்ற பேராசை உவனுக்கு உண்டு. ஆனால் ஒவ்வொரு துளியும் எச்சிலுடன் கரைந்து தொண்டையை அடையும் பொழுது குளுமையின் சுவடே தெரியாமல் போய்விடும்.  
அந்தப் புல்வெளியில் இரண்டு கைகளாலும் கால்களைக் கட்டிக் கொண்டு ஒரு முனையிலிருந்து மறுமுனைக்கு உடலின் பகுதிகள் நிலத்தில் பதிய, உருண்டு செல்லும் விளையாட்டு உவனுக்குப் பிடித்தமான ஒன்று. அந்தப் புல்தரையின் மீது படர்ந்திருக்கும் பனித்துளிகள் உவன் உடையைத் தாண்டி தோலை நனைத்த போது எழும் சில்லிப்பில் உவனுக்கு விருப்பமிருந்தது. அப்படி உருள்வதால் சட்டை அழுக்காகும் என்று அம்மா உவனை என்றுமே தடுத்ததில்லை. உவனது அம்மா எப்பொழுதும் வீட்டு  வேலைகளைச் செய்தபடியே இருந்ததால் உவனுக்கு விளையாடுவதற்கு வீட்டின் பின்புறமிருந்த குளத்தில் மிதக்கும் மஞ்சள் வாத்தையும் அதன் குஞ்சையும் தவிர வேறு யாருமில்லை. அந்த வாத்துகள் வளைந்த நூலைப் போன்ற அலட்சியமான நீர்க்கோடுகளைத் தங்களின் கீழ் இழுத்தபடி தண்ணீரில் நீந்திச் செல்பவை. குளத்தின் நடுவில் வட்ட இலைகளுக்கிடையே பூத்திருந்த செந்தாமரையை நெருங்கும் போதெல்லாம் அதைத் தன் சிவந்த அலகால் முத்தமிட்டுச் செல்பவை.
சீரான இடைவெளியில் சுற்றிலும் நடப்பட்டிருந்த பழுப்பு மரக்கட்டைகள் தான் உவர்கள் வீட்டின் வேலி. உவனது வீட்டின் புல்வெளியில்  அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சிதறிக்கிடக்கும் வெள்ளைப் பூக்கள், அந்த வேலியோரமாக உயர்ந்து நிற்கும் பைன் மரங்களின் கீழ் உதிர்ந்து கிடப்பவை. அம்மரங்களுக்கு மேல் கறுத்த வளைகோடுகளாய் இறகை அசைத்துப் பறந்தபடியிருக்கும் பறவைகள் கவ்வியிழுத்து போட்டவை.
இது நாள் வரையில் அந்த வேலியைத் தாண்டி உவன் சென்றதே இல்லை. அந்த வேலிக்கு அப்பால் சரிந்து செல்லும் பசிய வெளியை மட்டுமே அங்கிருந்து உவனால் பார்க்க முடிந்தது. அதற்கு அப்பாலிருக்கும் உலகம் எத்தகையதாக இருக்கும் என்று அங்கிருந்த பைன் மரங்களில் ஒன்றின் கீழ் படுத்தபடி கற்பனை செய்வது உவனது பொழுது போக்குகளில் ஒன்று.

   சில சமயம், அந்த சரிவைச் சுற்றி சரிகையாய் ஒரு ஆறு ஓடுவதாகவும் அதிலிருக்கும் ஆரஞ்சு நிற மீன்கள் தன் வீடிருக்கும் குன்றைச் சுற்றிச் சுற்றி வருவதாகவும் நினைத்துக் கொள்வான். மற்றொரு முறை அந்தச் சரிவு முடியும் இடத்தில் ஒரு ரயில் தண்டவாளம் இருப்பதாகவும் அதில் எப்பொழுதும் பெரிய எஞ்சின் பகுதியும், போகப் போகச் சிறுத்து வாலாய்த் தேயும் பெட்டிகளையும் கொண்ட மஞ்சள் ரயில் ஒன்று கரும்புகையைக் கக்கியபடி  சுற்றிவருவதாகவும் கற்பனை செய்து கொள்வான். உடனே ரயிலாக மாறி வேலியின் உட்புறமாக சுற்றிச் சுற்றி ஓடுவான். அப்படி ஓடும் போது உவன் எழுப்பும் கூவென்ற ஒலியில் குளத்தில் இருக்கும் வாத்துகள் தன் பச்சை வளையம் கொண்ட கழுத்தைத் திருப்பி உவனைப் பார்க்கும். 

உவனுக்கு இருப்பதெல்லாம் ஒரே ஒரு ஆசை தான். தன்னுடன் புல்வெளியில் உருண்டு விளையாட ஒரு சிறுமி. பலவண்ண பூக்கள்  போட்ட ப்ராக் அணிந்திருக்கும் அவள் தன் கூந்தலை இரு பின்னல்களாக்கி அதன் நுனியில் ரிப்பன் கட்டிக் கொண்டிருப்பவளாக இருப்பதை உவன் விரும்பினான். இதற்காக உவன் இன்று மீண்டும் ஒரு முறை கடவுளை வேண்டிக் கொண்டான்.

கதை இரண்டு

   நிதிலனின் தங்கை, அவள் கேட்ட நாய்க்குட்டியை அப்பா வாங்கித் தரவில்லை என்ற வருத்தத்துடன் நிதிலனின் அறைக்குள் நுழைந்தாள். கையில் பென்சிலுடன் உட்கார்ந்து யோசித்துக் கொண்டிருந்த அண்ணனைப் பார்த்ததும் அவளுக்கு நாய்க்குட்டி மறந்து போனது. ஆவலுடன் அவனுக்கு முன்னாலிருந்த தாளை எட்டிப் பார்த்தாள். அதில் அவன் தீட்டியிருந்த சித்திரம் அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது. இன்று தன்னை வரையும் படி அவனை மிகவும் கெஞ்சிக் கேட்டுக் கொண்டாள்.
நிதிலன், அவளை அருகிலிருந்த முக்காலியில் அமரச் சொன்ன போது, கொஞ்சம் இரு என்று சொல்லிவிட்டு, ஓடிப்போய் தன் டெட்டி பேரை எடுத்துக் கொண்டு வந்து அமர்ந்தாள். அவளது முகத்தைப் பார்த்தபடி தாளில் இருந்த புல்வெளிக்குச் சற்று மேலாக அந்தரத்தில் ஒரு வட்டமிட்டான் நிதிலன். அதனுள் மேலும் இரண்டு சிறு வட்டங்களைப் போட்டு அதற்குள்ளிருந்த பாதி வெளியைக் கருப்பாகி அதைக் கண்களாக்கினான். அதற்குக் கீழே ஆங்கில எழுத்து சியைக் கால்நீட்டி படுக்க வைத்தது போல வாயை வரைந்தான். பின்னர் மெலிந்த கழுத்தும், முன்பக்கம் பட்டன் வைத்த சட்டையும் பூக்கள் அலங்கரித்த அவளது அரைப் பாவாடையையும் வரைந்தான். தாளில் மொட்டைத் தலையுடன் நின்றிருந்த தன் தங்கையின் சிரத்தின் உச்சியில் கருப்பு வளை கோடுகளை இழுத்து அதை குதிரைவாலாக்கினான். தன் அம்மா வைத்திருப்பதைப் போன்ற ரப்பர் பேண்ட் ஒன்றை வரைந்து அதனால் அவளது கூந்தலை முடிச்சிட்டான். பின்னர் மெலிந்த கால்களை வரைந்து, அதன் மேல் அவள் வைத்திருந்தது போலத் தொடைகளின் மீது பதிந்திருக்கும் கைகளையும் அதிலிருக்கும் டெட்டி பேரையும் வரைந்தான். அவனது தங்கைக்கு அந்தப் படம் மிகவும் பிடித்திருந்தது.

மீண்டும் கதை ஒன்று

   தூங்கியெழுந்த போது தன் வீட்டிற்கு முன்னாலிருந்த புல்வெளியில் பூப்போட்ட பாவாடையையும் பொத்தான் வைத்த சட்டையும் அணிந்து உட்கார்ந்திருந்த அந்த மூக்கில்லா சிறுமியைக் கவனித்தான் உவன். மஞ்சள் நிறத்திலிருந்த உவளின் கைகள் உவனுடையதைப் போலவே மெலிந்திருந்தன. உவள் கூந்தலை உச்சியில் முடிச்சிட்டிருந்தாள். உவளது கைகளில் வைத்திருந்த கரடிப் பொம்மை உவனுக்கு மிகவும் பிடித்திருந்தது. கடவுளுக்கு நன்றி சொல்லி விட்டு, இரண்டு கால்களாலும் எம்பி எம்பிக் குதித்தபடி உவளை நோக்கி ஓடத் துவங்கினான் உவன்.
(அரூ இணைய இதழ் ஜனவரி 2019)

வியாழன், 31 அக்டோபர், 2019

இரைச்சல்     இரவு பதினோரு மணிக்கு கை தட்டி கூப்பிடத் தொடங்கிவிட்டான் வில்லியம். சமீப நாட்களாய், இரவு பதினோரு மணி, ஒரு மணி, விடியற்காலை நான்கு மணி என்று சீராய் அதிகரித்த இடைவெளிகளில் கேட்ட அவனது கைதட்டல்களாலும் அதைத் தொடர்ந்து அவன் நிகழ்த்திய உரையாடல்களாலும் தூக்கத்தை இழக்கத் துவங்கியிருந்தேன். ஒருமுறை அதிலிருந்து தப்பிக்க முயன்று, எப்பொழுதும் ஒன்பதரை மணிக்கே உறங்கச் சென்றுவிடும் நான், தூக்கம் கண்களைச் சுழற்ற கூடத்திலேயே அமர்ந்திருந்தேன்.
என்ன இன்னமும் முழிச்சிருக்கே?” என்று கேட்ட ராகுலிடம் உள்ளுக்குள் இருந்த விதிர்விதிர்ப்பைக் காட்டாமல் கவனமாய் புன்னகைத்து, வசந்தம் தொலைக்காட்சியின் நாடகத்திற்கு முகத்தைத் திருப்பினேன்.
     சிலீரென எதுவோ விழுந்து உடையும் சத்தமும். அதைத் தொடர்ந்த ஶ்ரீநிதியின் அழுகையையும் கேட்டு திடுக்கிட்ட போது தான், நான் அமர்ந்தபடியே உறங்கிவிட்டது புரிந்தது. எழுந்தோடிச் சென்று பார்த்த போது சுவரில் மாட்டியிருந்த புகைப்படச் சட்டம் கீழே விழுந்திருந்தது. மணி சரியாக பதினொன்று ஒன்று. அன்று வில்லியம் தனக்கு ஏற்பட்டிருந்த கோபத்தை ஒரு மணி கைதட்டலை ஓங்கியடித்து வெளிப்படுத்தினான். 
என்னைக் கவனிக்காமல் இருந்துவிட நினைக்கிறாயா?”
அது வரை கைதட்டலில் மட்டுமே அறிமுகமாகியிருந்த அவன், அன்றிலிருந்து தான் என்னுடன் பேசத் துவங்கினான்.
இல்லையே!’ என்று ராகுலிடம் சொல்வது போல வில்லியமிடம்  இன்றைய தினம் வரை பொய் சொல்ல முடிந்ததேயில்லை. நான் நினைப்பது அவனுக்குத் துல்லியமாய் தெரிந்துவிடுகிறது.
முதன்முதலாய் குரல் கேட்ட அதிர்ச்சியில் பயந்து போய், பக்கத்தில் படுத்திருந்த ராகுலை எழுப்ப முயற்சித்தேன். உடலையோ குரல் வளையையோ அசைக்க முடியவில்லை.
என்னை விட்டு விலக நினைத்தால் அதற்குத் தண்டனை ஹாஹாஉனக்குத் தான் தெரியுமே!”
ஆம் என்பது போல் என் உள்மனம் நடுங்கியது.
     மறுநாள் ஶ்ரீநிதியின் முதுகில் காணப்பட்ட அழுத்தமான கீறல்கள், என்னை எச்சரிப்பதற்காக வில்லியம் போட்டது என்றே நம்பினேன். அது எரிகிறது என்று நிதி அழுததை என்னால் தாங்க முடியவில்லை.
வேலைக்குக் கிளம்பிக் கொண்டிருந்த ராகுலிடம்,
கொஞ்சம் லேட்டா போயேன் ராகுல், கோவிலுக்குப் போய் அர்ச்சனை செய்துட்டு வரலாம்
முதல்ல குழந்தைக் கையிலே இருக்கற நகத்தை வெட்டுஎன்று சிரித்தான் அவன்.
மூன்று வயது பெண்ணால், கைகளைப் பின்னால் மடித்து அவ்வளவு தூரத்திற்குக் கீறிக் கொள்ள முடியுமா என்ன? நான் மட்டும் நிதியை அழைத்துக் கொண்டு, தண்டாயுதபாணி கோயிலுக்குச் சென்று கும்பிட்டு, விபூதியை அவளின் நெற்றியில் பூசினேன். அன்று முழுவதும், குற்றவுணர்வு எழும்போதெல்லாம் அவளை இழுத்துத் தேங்காய் எண்ணெய்யைத் தடவி விட்டபடியிருந்தேன். மிகவும் கவனமாய் அன்றிரவு பத்து மணிக்கெல்லாம் படுத்துவிட்டேன்.
சமர்த்து ஜென்னி! இந்த வில்லியமிற்கு உன்னை இது போன்ற சமயங்களில் தான் மிகவும் பிடிக்கும்!” அன்று பதினோரு மணிக்கு இதை அவன் சொன்ன தொனியிலிருந்து விடுபடமுடியாமல் ஶ்ரீநிதியைக் கட்டிக் கொண்டேன்.
அந்த நிலையிலும் வில்லியம் எழுத்துத் தமிழில் என்னுடன் உரையாடுகிறான் என்பதைக் கவனித்தேன். உரையாடல் என்றால், சத்தமாக நீங்களும் நானும் பேசுவது போல இல்லை. மனதோடு மனம் ரகசியம் சொல்லிக் கொள்வது போல, எனது மூளைக்குள் அவன் நினைப்பதைத் தமிழில் மாற்றி, நேராய் கொண்டு வந்து வைப்பதைப் போல. எனக்கு மட்டும் கேட்கும் அந்த கைதட்டல் ஒலிகூட அப்படித் தான், மூளைக்குள் கைவிட்டு அறையும் சப்தம்.
     அன்றைய தினத்திற்குப் பின்னர் வில்லியம் என்னிடம் நிறைய பேசத் துவங்கினான்.
ஜப்பானியனிடம் எனக்கு மிகவும் பிடித்தது எது தெரியுமா? எவரைப் பற்றியும் கவலைப்படாத மனத்தைரியம். எனக்கு இருந்த அதே குருட்டுத் தைரியம். நட்ட நடு ராத்திரியில் சிறிய படகுகளில் வந்து ஊரைப் பிடிக்க கொள்ளைத் தைரியம் வேண்டும். அவன் இங்குக் கொடியை நாட்டியதே நம்புவார்களா என்பதைப் பற்றி கவலைப்படாமல் சொன்ன பொய்களால் தான்.”
அவன் இதையெல்லாம் என்னிடம் சொல்வதற்கான அர்த்தம் எனக்குப் புரிவதில்லை. இருந்தும் வலுக்கட்டாயமாய் சொற்களை என் மனதினுள் திணித்துக் கொண்டிருந்தான் அவன்.
அச்சொற்களின் அழுத்தம் தாளாமல் வெடித்துவிடுவேன் என்றுணர்ந்த நாளில் ராகுலிடம் எனக்குப் பயமாயிருக்கிறது என்றேன். ஷூ லேஸின் முடிச்சைப் போட்டுவிட்டு நிமிர்ந்த அவன்,
பி.டி.சாமி கதைகளைப் படிக்கிறதை நிறுத்தினா எல்லாம் சரியாப் போகும்என்று சொல்லிவிட்டு பணிக்குக் கிளம்பினான்.
நீ சொன்னால் அவன் நம்பமாட்டான்என்றான் வில்லியம், என் நினைவுகள் சென்ற திசையைப் பின்பற்றி. அவன் பகலிலும் என்னுடன் பேசத் தொடங்கியிருந்தான்.
அவனை விட நான் உன் மீது வைத்திருக்கும் அன்பு அதிகம் தெரியுமா? ஜென்மாந்திரங்களாய்த் தொடரும் அன்பு
உன் பின்னால் நான் சுற்றி வந்த நாட்கள் நினைவிருக்கிறதா? முயற்சித்துப் பாரேன்!”
வேண்டாம்!”
அப்படிச் சொல்லக் கூடாது ஜென்னி! என் தங்கமே!”
ராகுல், நிச்சயமா ஏதோவொன்னு இங்க இருக்கு, என்கிட்ட என்னென்னவோ சொல்லுது! எனக்குக் கொஞ்சம் கூட பிடிக்கலை.”
அதெல்லாம் பிரமைஎன்றான் ராகுல்.
கொலம்பேரியத்துக்குப் பக்கத்தில வீடு வாங்கினது தப்பான்னு தெரியலை!”
எதுக்க இருக்கற பள்ளி பிள்ளைங்க கூட அங்க பேய் சுத்தறதா சொல்றாங்களாம். லலிதாவோட பையன் சொன்னான்!”
லூசு மாதிரி பேசாத! இப்படி சொல்லிகிட்டேயிருந்தா ஐ.எம்.எச்சுக்குத் தான் போகணும்
     அன்றிரவின் பதினோரு மணி கைதட்டல், பொளேர் என்று தலையில் அடித்தது.
உன் அம்மா என்னிடம் வாங்கிய ஐந்து கட்டி அரிசியைத் திருப்பிக் கொடுஎன்றான் வில்லியம்.  
என்னைப் பிடிக்கலைன்னு நீ சொன்னதால தான், உன் அப்பா ஜப்பானியர்களுக்கு எதிரா காசு திரட்டியதா தகவல் கொடுத்தேன். இன்னமும் அதே தப்பை செய்யற!”
கோபத்தில் அவன், பேச்சுத் தமிழுக்கு மாறியிருந்தான்.
தண்ணீர் பைப்பை அவர் வாய்க்குள்ள விட்டு, வயிறு நிறைய தண்ணீரைப் பீய்ச்சியடித்து, பூட்ஸ் காலோட வயிறு மேலே ஏறி நின்னு தொப்புன்னு குதிச்சான் பாரு!” என்று சொல்லிவிட்டு அவன் சிரித்தது, சிலீரென முதுகுத்தண்டில் இறங்கியது.
     ராகுலிடம் வில்லியம் பற்றி சொல்லி நம்ப வைக்கும் முயற்சியை அன்றுடன் கைவிட்டேன். தினமும் இரவில் வில்லியம் பேசும் வார்த்தைகள் வெளியேற வழியின்றி, மூளை மடிப்புகளில் பதிந்தன. அவன் உதிர்த்த இரைச்சலான சொற்களுக்குள் இழுபட்டுச் செல்வதை என்னால் தவிர்க்க முடியவில்லை. அச்சொற்களின் நீட்சி போல், மெல்ல மெல்ல, ஓரங்கள் வெளிறிய வெண்ணிற வில்லியம் என் கண்களுக்குப் புலப்படத் துவங்கினான்.
உனக்கும் என் மேல் காதல் இருந்தது ஜென்னி. இப்போதும் இருக்கிறது. உன் கண்களுக்குத் தெரிகிறேன். இதை விட என்ன சாட்சி இருந்துவிட முடியும்! நீ என்னுடன் வந்துவிடு! தோல்வி, பொறாமை எதுவுமற்ற உலகம்.”
பயமில்லை, ஐயமில்லை எங்களிடத்தில் தயக்கமில்லை, தூக்கமில்லை
துக்கம் கொஞ்சமும் இல்லவே இல்லை
சம்பந்தா சம்பந்தமின்றி அவன் பேசிக் கொண்டே என் பின்னால் வருவது காதுகளுக்குள் வண்டுகள் ரீங்காரமிடுவது போலத் தொடர்ந்தது கேட்டது. வேறுவழியின்றி, மெல்ல மெல்ல, வில்லியமின் இருப்பைப் பழக்கிக் கொள்ளத் துவங்கினேன்.
ஜப்பானியன் எளிதில் யாரையும் நம்புவதில்லை. ஆனால் நம்பிக்கையைப் பெற்றுவிட்டால், வெகுமதிகள் தாராளமாய் கிடைக்கும். கிடைக்காதது நீ மட்டுமே. உன்னைத் தேடி அகண்ட வெளிக்காடுகளில் அலைந்து திரிந்து தாகத்தால் அழிந்தேன். நாம் இணையும் காலம் சந்திக் காலம்இப்படி சுலோகம் போல சரம் சரமாய் அவனிடமிருந்து வெளிப்பட்ட வார்த்தைகள் ஒரு ஸ்ருதியில் சேரும் போது தூக்கத்திற்குள் விழுவேன். திடீரென தூக்கி வாரிப்போட்டு எழுந்திருக்கும் போது வில்லியம் எதையோ சொல்லி முடித்துவிட்டு சத்தமாய் சிரித்துக் கொண்டிருப்பான், அல்லது அறையின் ஓரத்தில் நிசப்தமாய் மிதந்து கொண்டிருப்பான்.
     சிலநாட்களில், அவனது வார்த்தைகள் மனதில் தீட்டிய வரைபடத்திற்குச் சொந்தமான உலகிற்குள் சஞ்சரிக்கத் தொடங்கினேன். அவனது சொற்கள் மரங்களையும், தெருக்களையும், வீடுகளையும், கத்தியால் மனிதத்தலையைச் சீவும் ஜப்பானியனையும் தத்ரூபமாய் வரைந்தன. எதிரே தோன்றிய ஜப்பானியனை உடல் வளைத்து வணங்கினேன். தூரத்தில் தெரிந்த ஆட்களிடம் பேச நினைத்து விரைந்தேன். அவர்கள் வேகமாய் நடந்து மறைந்தார்கள். திடீரென கடையொன்றிலிருந்து வெளிப்பட்ட வில்லியம் என்னைத் துரத்தத் தொடங்கினான். அணிந்திருந்த நீளப்பாவாடையைத் தூக்கிப் பிடித்துக் கொண்டு, வீடுகளுக்கிடையே இருந்த சந்துகளில் புகுந்து ஓடத் துவங்கினேன். அடுத்த சாலைச் சந்திப்பில் நின்றிருந்த நீலச்சட்டை அதிகாரிகள் என்னை நிறுத்தினார்கள்.
வெளியே திரியாதே, அவர்களின் கண்களில் பட்டுத் தொலைப்பாய் என்று திரும்பத் திரும்பச் சொன்னேனே! கேட்டாயா?” சீன மொழியில் ஒரு பெண் குரல் கண்டித்தது. பதறிப்போய் சட்டெனத் திரும்ப, அங்கிருந்த வீடுகளும், மனிதர்களும், வில்லியமும் எங்கோ ஒளிந்து கொண்டு விட்டார்கள். மரங்கள் நிறைந்த சாலையில், அந்த அதிகாரிகளுடன் தனித்து நின்றிருந்தேன். எதற்காக மண்டாய் சாலையில் தனியே நிற்கிறேன் என்று அவர்கள் கேட்ட கேள்விக்கு என்னால்  பதில் சொல்ல முடியவில்லை.
     ராகுல் அவர்களிடமிருந்து என்னை மீட்டெடுக்க வந்த போது கடும் கோபத்திலிருந்தான். ஶ்ரீநிதி எனக்காகப் பள்ளி முடிந்து நெடுநேரம் காத்திருந்திருக்கிறாள். ஆசிரியர்கள் நான் கையில் வைத்திராத என் தொலைப்பேசிக்கு அடித்துப் பார்த்துவிட்டு, ராகுலை அழைத்திருக்கிறார்கள்.
     வீட்டிற்கு வந்த போது ஶ்ரீநிதி அழுத களைப்பில் ஆழ்ந்து தூங்கிக் கொண்டிருந்தாள். எனக்கு மிகவும் கவலையாக இருந்தது. அவள் பக்கத்தில் என் அம்மா. அம்மா கேட்ட கணக்கில்லாத கேள்விகளுக்குஎனக்குப் பயமா இருக்குதும்மா!” என்று மட்டும் திரும்பத் திரும்பச் சொன்னேன். கோவிலுக்குப் போய் அர்ச்சனை செய்து விட்டு வந்தோம். சற்றே மனம் தெளிந்தது
அந்த அதிகாரிகள் ஜப்பானியர்களைப் போன்றவர்கள் இல்லை. அதனால் எனக்கு அவர்களைப் பிடிப்பதில்லைஎன்று நான் தூங்கியெழுந்ததும் சொன்னான் வில்லியம். அவன் அழைத்துச் செல்லும் இடத்திற்கு நான் போகப் போவதில்லை என்ற மனவுறுதியுடன் அன்று இருந்தேன். அவனும் என்னை அதிகம் தொல்லை செய்யவில்லை. அடுத்த நாள், “இனியும் என்னால் காத்திருக்க முடியாது! என்னுடன் வந்து விடு!” என்றான் வில்லியம். நான் அசைந்து கொடுக்கவில்லை.
சொல்வதை அலட்சியப்படுத்தினால் ஜப்பானியனின் கோபம் எனக்கும் வரும் தெரியுமா?”
பதறிய உள்மனதை இழுத்துப் பிடித்து அமர்ந்திருந்தேன்.
     மறுநாள் ராகுல் ஓட்டிச் சென்ற வாகனம் விபத்திற்குள்ளானது. பலத்த சிராய்ப்புகளுக்குள்ளான அவனை மருத்துவமனைக் கண்காணிப்பில் இரண்டு நாட்கள் இருக்கும் படி சொல்லி விட்டார்கள்.
உனக்குப் பாடம் கற்பிப்பதற்காக மட்டும் என்பதால் அவன் உயிர் தப்பித்தான். நீ என்னுடையவள், எனக்கானவள் மட்டுமே! என்னை விட உனக்கு முக்கியமாகத் தோன்றுபவர்களை ஒவ்வொருவராய் பிடுங்கியெடுப்பேன்.” என்றான் வில்லியம்.
     அன்றிரவு முழுவதும் அழுது கொண்டிருந்தேன். மறுநாள் காலை தெளிவான முடிவிற்கு வந்திருந்தேன். இனியும் நான் எதையும் இழக்கத் தயாராயில்லை. வில்லியமிற்குக் கோபத்தை உண்டாக்காமல் இருக்க என்னென்ன செய்ய முடியுமோ அத்தனையையும் செய்யத் துவங்கினேன். கணவன் மனைவியாய் எங்களுக்குள்ளான உறவை இனியும் தன்னால் பொறுத்துக் கொள்ள முடியாது என்று கூறிவிட்டிருந்தான் வில்லியம். ராகுலுக்கு உடல் நலமில்லாத காரணத்தையொட்டி கூடத்தில் படுத்துக் கொள்ளத் துவங்கினேன். ஶ்ரீநிதி அம்மாவுடன் மற்றொரு அறையில் படுத்துக் கொண்டாள். மறுபடியும் முன் போல வில்லியமுடன் அவனது உலகிற்குள் செல்லத் தயாரானேன்.
உங்கள் வீட்டுத் தோட்டத்தில் திருட்டுத்தனமாய் தோண்டியெடுத்த வள்ளிக்கிழங்கைத் துண்டுகளாக்கி உப்பிட்டு வேக வைத்துச் சாப்பிடுவது என்ன ருசி தெரியுமா?”
     நட்சத்திரம் மின்னும் வானிற்குக் கீழேயிருந்த கிழங்குச் செடிகளுக்கு மத்தியில் அமர்ந்திருந்தேன்.
ஜென்னி, இருட்டில் அமர்ந்து என்ன செய்து கொண்டிருக்கிறாய்?” சீன மொழிக் குரலில் பதறிப்போய் அது வந்த திசையில் நடந்து, கதவைத் திறந்து, மிகவும் பழகிப் போன ஜன்னல்களைக் கொண்ட அறைக்குள் நுழைந்தேன். என் கால்கள் நடந்த தரையின் மேடு பள்ளங்கள் எனக்கு நன்கு அறிமுகமாகியிருந்தன.
ஏற்கனவே உன் அண்ணனைக் காணவில்லை என்று ஊர் முழுவதும் தேடிக் கொண்டிருக்கிறேன். உனக்குக் கொஞ்சமாவது கவலை இருக்கிறதா? அந்த ராட்சதர்கள் கண்ணில் பட்டுத் தொலைத்தால் என்ன ஆகும். முதல் வேளையாக உன் முடியைக் கத்தரித்துத் தள்ள வேண்டும். நாளை முதல் இந்தப் பாவாடையையெல்லாம் தூக்கி வீசிவிட்டு, அண்ணனின் உடைகளை அணியத் துவங்கு, சொல்லிவிட்டேன்!” என்று அதட்டலாய் பேசியபடி வந்த அம்மா, மனதின் ஆழத்தில் ஜன்னல்களைப் போல, தரையின் மேடு பள்ளங்களைப் போல பழகிப் பதிந்து போயிருந்த அம்மா, அப்படியே உட்கார்ந்து அழத் துவங்கினாள்
மைக்கேல் கடைசியாக வேனில் ஏற்றப்பட்டதை செங் யோங் பார்த்திருக்கிறான். எங்குக் கொண்டு சென்றார்கள் என்று தெரியவில்லை. நாளைச் சென்று விசாரிக்க வேண்டும். பெட்டியிலிருந்து உன் அண்ணனின் புகைப்படத்தை எடுத்துக் கொடு!” சொல்லிவிட்டு மறுபடி அழத்தொடங்கிய அவளது உருவம் கலைந்தது. வேகமாய் உலுக்கப்பட்டதில் திகைத்துத் திரும்ப ராகுல்! இருவரும் மூடப்பட்டிருந்த அந்த தேவாலயத்திற்கு வெளியே நின்றிருந்தோம்.    

சொல்லுங்கள், ஏன் நள்ளிரவு நேரத்தின் அங்குச் சென்றீர்கள்?”
தெரியலை, டாக்டர்!”
உங்களுக்கும் உங்கள் கணவருக்கும் ஏதாவது பிரச்சனையா?”
அப்படியெல்லாம் இல்லை டாக்டர். நாங்க ரெண்டு பேரும் காதலித்துத் திருமணம் செய்து கொண்டோம்.”
ராகுல் என் கைகளை ஆதரவாய்ப் பற்றிக் கொண்டான்.
முன்பு ஒரு முறை இதே மாதிரி சம்பந்தமில்லாமல் மண்டாய் ரோட்டில நின்று கொண்டிருந்தீர்களாமே!”
நீங்கள் என்னிடம் எதையும் தைரியமாகச் சொல்லலாம். ராகுல், சற்று வெளியே இருங்கள்!”
நான் தயங்கினேன்
நடப்பதையெல்லாம் மருத்துவரிடம் கூறினால்….’
உன்னைப் பைத்தியக்காரி என்பார்!” என்றான் வில்லியம்.
கொஞ்சம் யோசித்து பின்னர் பேசத் துவங்கினேன்.
     மருத்துவர் தந்த மாத்திரைகளைச் சாப்பிட்டுவிட்டு மருத்துவமனையில் தங்கியிருந்த நாட்களில் வில்லியம் ஒளியிழந்து காணாமல் போகத் தொடங்கினான். அவனது குரலும் தன் சக்தியை இழந்தது போல என்னை விட்டு விலகியிருந்தது.
அவன் திரும்ப வந்தால், பிடிச்சி சாங்கி ஜெயில்ல போட்டுடுவோம்ன்னு சொல்லுங்க!” என்று சொல்லியிருந்தார் மருத்துவர்.
வெகுநாட்களுக்குப் பிறகு ஓய்வைக் கண்ட மூளையுடன் மாத்திரைகளின் தாக்கமும் சேர, இரவு பகல் என்ற கணக்கின்றி தூங்கினேன்.
மீண்டும் என் வீட்டிற்குச் செல்ல வேண்டும், மகளை அணைத்துக் கொள்ள வேண்டும், ராகுலுடன் கை கோர்த்து நடக்க வேண்டும் போன்ற ஆசைகள் மட்டுமே இப்போது மனதிற்குள். அப்படிப்பட்ட சந்தோஷத்தைக் கொண்டுவரும் நாளை எதிர் நோக்கி நாட்களை நகர்த்தத் துவங்கினேன் நான்.

வியாழன், 31 ஜனவரி, 2019

ஒனோடாவும் முடிந்து போன இரண்டாம் உலகப் போரும்


இரண்டாம் உலகப் போர் முடிந்து கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகள் வரைப் போர் முடிந்ததையே அறியாமல் ஜப்பானின் சார்பில் அமெரிக்காவுடன் சண்டையிட்டுக் கொண்டிருந்த ஒனோடாவைப் பற்றி அறிந்த போது ஆச்சர்யமாக இருந்தது. இணையத்தில் ‘No Surrender’ என்ற அவரது சுயவரலாற்று புத்தகத்தைத் தேடி வாசித்த போது அந்த மனிதர் தன் நாட்டின் மீது கொண்டிருந்த பற்றும் நம்பிக்கையும் வியப்பளித்தது.
1922ல் பிறந்த ஒனோடா இரண்டாம் உலகப் போரின் சமயம் இராணுவத்தின் கொரில்லா படையில் சேர்கிறான். பொதுவாக, அப்போதிருந்த ஜப்பானிய வீரர்கள் தோல்வி என்ற வார்த்தையை ஏற்றுக் கொள்பவர்கள் இல்லை. அப்படி பின்னடைய நேர்ந்தால் கூட தற்கொலை செய்து கொள்ளவே அவர்களுக்குப் பயிற்றுவிக்கப்பட்டிருந்தது.
ஒனோடாவிற்கு அளிக்கப்பட்ட பயிற்சி அதிலிருந்து மாறுபட்டது. அதில் தற்கொலை என்ற பேச்சுக்கே இடமில்லை. தனித்து ஒருவனாய் நின்றால் கூட ஒளிந்திருந்து தன்னால் இயன்ற அழிவை எதிரிகளுக்கு ஏற்படுத்த வேண்டும் என்று அவனுக்குப் போதிக்கப்படுகிறது.
டிசம்பர் 1944ல் பிலிப்பைன்ஸிலிருக்கும் லுபாங் தீவிற்குப் பணி நிமித்தமாகச் செல்கிறான் ஒனோடா. அங்கு, தன்னுடையதிலிருந்து மாறுபட்ட கொள்கைகளைக் கொண்டிருந்த ஜப்பானிய வீரர்களுடன் இணைந்து வேலை செய்வது அவனுக்குச் சிரமமாயிருக்கிறது.
அந்த நேரம் இரண்டாம் உலகப்போரில் ஜப்பானுக்குப் பின்னடைவு ஏற்படுகிறது. அதை ஏற்றுக் கொண்டு தற்கொலை செய்து கொள்ளவோ அல்லது சரணடையவோ தயாராகும் மற்ற வீரர்களை அவன் வெறுக்கிறான்.
ஒனோடா தன் கொள்கையுடன் ஒத்துச் என்ற மூன்று வீரர்களுடன் பிலிப்பைன்ஸ் காடுகளுக்குள் தஞ்சம் கொள்கிறான். அங்கிருந்து தனது போராட்டங்களைத் தொடர்கிறான்.
சிறிது நாட்களில் காடு அவன் வயப்படுகிறது. அங்கிருக்கும் இடங்கள் அவனுக்கு பழகிப் போகின்றன. அதுவே அவனுடைய பலமாகவும் எதிரிகளின் பலவீனமாகவும் மாறுகிறது.
காட்டிற்குள் ஜப்பானியர்களைத் தேடிவரும் காவலர்களை அவனும் அவனது சகாக்களும் துப்பாக்கிகள் கொண்டு வீழ்த்துகிறார்கள்.
இப்படி காட்டிற்குள்ளாகவே திரிந்ததால் 1945 ஆகஸ்டு மாதம் ஹிரோஷிமா மற்றும் நாகசாகியின் மீது குண்டு வீசப்பட்டதோ, அதனைத் தொடர்ந்து ஜப்பான் சரணடைந்ததோ அவனுக்குத் தெரியாமலே போகிறது. அவனும் அவனது சிறுகுழுவும் நேசநாடுகளுக்கு எதிராகப் போராடியபடி இருக்கிறார்கள்.
ஒருநாள் மரங்களுக்கிடையேயிருந்து, போர் முடிந்துவிட்டது காடுகளிலிருந்து வெளியே வாருங்கள், என்ற தகவல் கொண்ட துண்டுத்தாளை அவன் கண்டெடுக்கிறான். அது தன்னை ஏமாற்ற அமெரிக்கா செய்யும் சதி என்று நினைக்கும் அவன் தனக்குள்ளாக சிரித்துக் கொள்கிறான்.
1945 தாம் ஆண்டின் முடிவில் ஜெனரல் யமாஷிடா கையெழுத்திட்ட சரணடையும் ஆணை காட்டிற்குள் வானூர்தி மூலமாக போடப்படுகிறது. அதை ஆய்வு செய்யும் அவனும் அவனுடைய சகாக்களும், அமெரிக்கா தோற்கும் நிலைக்குச் சென்று விட்டது, அதனால் தான் இவ்வளவு தீவிரமாக தங்களை ஏமாற்றி, காட்டை விட்டு வெளியேற்ற முயற்சி செய்கிறது என்ற முடிவுக்கு வருகிறார்கள்.
தன் மேலதிகாரிகள் போர்க்கைதிகளாய் தண்டனைப் பெற்று இறந்து போனதை அவர்கள் அறியவேயில்லை.
அவர்கள் நால்வரும் காட்டிற்குள்ளாக வாழ பழகிக் கொள்கிறார்கள். உணவு குறைந்த போதெல்லாம், காட்டிற்கு அருகிலிருக்கும் கிராமங்களுக்குச் சென்று அரிசி மூட்டைகளைத் திருடி வருகிறார்கள்.
ஓரிடத்தில் தங்கியிருந்தால் அமெரிக்க வீரர்கள் தம்மை எளிதாகப் பிடித்துவிடுவார்கள் என்று எண்ணும் அவர்கள், சில நாட்களுக்கு ஒரு முறை தங்கள் இருப்பிடத்தை மாற்றியபடி காட்டைச் சுற்றி வருகிறார்கள். சிரமமான வாழ்க்கை முறை அவர்களுக்கு மிகவும் களைப்பைத் தருகிறது. ஆனாலும் அவர்கள் தொடர்ந்து இயங்குகிறார்கள்.
1949 ஆம் ஆண்டு, அவர்களுடனிருந்த Yuichi Akatsu சரணடைந்து விடுகிறான். இதனால் தங்கள் பாதுகாப்பிற்குப் பங்கம் ஏற்பட்டுவிட்டதாய் நினைக்கும் மீதமிருந்த மூவரும் விழிப்புடன் இருக்க முடிவுசெய்கிறார்கள்.
1952ல் அவர்களின் குடும்பங்களின் புகைப்படங்கள் இணைத்து காட்டிற்குள் போடப்பட்ட கடிதங்கள் அவர்களுக்குக் கிடைக்கின்றன. நெகிழ்ந்து போகிறார்கள். ஆனாலும் அதுவும் எதிரிகளின் சதி என்றே எண்ணுகிறார்கள்.
அடுத்த சில மாதங்களில் ஒனோடாவின் சகாக்கள் இருவரும் சண்டையின் போது துப்பாக்கி சூட்டில் இறந்து போகிறார்கள். ஒனோடா தனியொருவனாகிறான்.
ஜப்பானும் பிலிப்பைன்ஸும் இணைந்து எவ்வளவு முயற்சித்தும், தனது நாடு தோற்றுப் போகாது என்ற அவனது நம்பிக்கையை மாற்ற முடியவில்லை.
1974ஆம் ஆண்டு Norio Suzuki என்ற சற்றே மூளைக் கலக்கமடைந்த ஜப்பானிய ஆடவன் Lieutenant Onoda, a wild panda, and the Abominable Snowman இவர்களை அதே வரிசையில் கண்டுபிடிக்கப்போவதாகச் சொல்லி புறப்படுகிறான். நான்கு நாட்களில் ஒனோடாவைக் கண்டுபிடித்து விடும் அவனாலும் கூட ஒனோடாவைச் சமாதானப்படுத்த முடியவில்லை.
தனது மேலதிகாரி வந்து தன்னை பொறுப்பிலிருந்து விடுவித்தாலே தவிர தன்னால் அங்கிருந்து வெளியேற முடியாது என்று சொன்ன ஒனோடாவுக்காக, அவனுக்கு மேலதிகாரியாய் இருந்துவ் அப்போது புத்தக விற்பனையாளராக மாறிவிட்டிருந்த Major Yoshimi Taniguchi யை பிலிப்பைன்ஸூக்க்கு அனுப்புகிறார்கள்.
அவர் சொன்ன தகவல்களைக் கேட்ட ஒனோடா உடைந்து போய் அழுகிறான். Yoshimi Taniguchi, அவனைப் பொறுப்பிலிருந்து விடுவிப்பதாகச் சொன்ன பின்னரே அவன் தன்னிடமிருந்த ஆயுதங்களைக் கொடுத்துவிட்டு சரணடைகிறான்.
போர் நடந்து கொண்டிருந்ததாக நம்பியே அவன் அதுவரை கொலைகளைச் செய்தான் என்பதால் அவனுக்கு மன்னிப்பு வழங்கப்பட்டு விடுகிறது.
ஜப்பானுக்குத் திரும்பும் அவன் மிகவும் பிரபலமாகிவிடுகிறான். ஆனால் இப்போது ஜப்பான் அவனுக்கு அந்நியமாகியிருக்கிறது. அது தனது இரண்டாம் உலகப்போர் காயங்களை துடைத்தெறிந்து விட்டு மேற்கத்திய கலாச்சாரத்திற்கு மாறத் துவங்கியிருக்கிறது.
மேற்கத்திய நாடுகளை எதிர்த்துப் போராடிய தன்னுடைய முப்பதாண்டுக் கால உழைப்பிற்கு எந்தவொரு பலனும் இல்லை என்பதை உணர்ந்து வருந்தும் ஒனோடா பிரேசிலுக்குச் சென்று விடுகிறான்.
திரைப்படங்களில் வருவது போன்றவொரு வாழ்க்கை ஒனோடாவினுடையது. ஒனோடாவின் நோக்கம் சரியா தவறா என்பதையெல்லாம் தாண்டி தன் நாட்டின் மீது அவன் கொண்டிருந்த பற்று அவன் மீது ஒரு வாஞ்சையை உருவாக்கவே செய்கிறது.

புதன், 14 நவம்பர், 2018

என்னுள்ளே என்னுள்ளே


‘என்னுள்ளே என்னுள்ளே’ பாடலை இன்று கேட்ட போது இருபத்தைந்து ஆண்டுகள் பின்னோக்கி ஶ்ரீவள்ளி மற்றும் ப்ரபாகர் சார் நினைவுகளில் விழுந்தேன். ஆம், அப்போது மிண்ட் ஸ்ட்ரீட்டிலிருந்து வந்த ஹிந்தி சாரின் பெயர் ப்ரபாகர் என்று தான் நினைவு. அவருக்கு அன்று இருபத்தெட்டு வயது இருந்திருக்கும் என்று கணிக்கிறேன்

பத்தாவது முடித்த லீவில் டைப்ரைட்டிங்கும் ஹிந்தியும் கற்றுக் கொள்வது அப்போதைய ட்ரெண்ட். அப்படித் தான் கிருஷ்ணா இன்ஸ்ட்டிட்யூட்டில் ஹிந்தி க்ளாஸ் சேர்ந்தேன். மூக்கிலிருக்கும் வியர்வையை அடிக்கடி கர்ச்சீப்பால் துடைத்துவிட்டுக் கொள்ளும் மெலிந்த உயரமான ஶ்ரீவள்ளியை அங்கு தான் சந்தித்தேன்.

பயங்கர ஆர்வக்கோளாறு கொண்டிருந்த சமயம் அது. ஆம், ஆத்மி என்று சில வார்த்தைகளையும் ஒரு வாக்கியத்தை எப்படி அமைப்பது என்ற அடிப்படையையும் கற்றுக் கொண்ட நாளில் என் கற்பனை சிறகடிக்கத் தொடங்கியது. ஒரு சிறுகதை எழுதிக் கொண்டு போய் ப்ரபாகர் சாரிடம் காட்டினேன்.

என் ஆர்வத்தைப் பார்த்து புன்னகைத்த அவர், கொஞ்சம் பொறுக்கச் சொல்லி அன்றைய வகுப்பில் ஒரு வாக்கியத்தை இன்னும் முறையாக எப்படி எழுதுவது என்று கற்றுக் கொடுத்தார். (என் முதல் சிறுகதை முயற்சி ஹிந்தியில் இருந்திருக்கிறது) மறுநாள் அதைத் திருத்தி கொண்டுபோய் மீண்டும் காட்டினேன். மீண்டும் புன்னகைத்தார். என்ன நினைத்துப் புன்னகைத்திருப்பார் என்று இப்போது புரிகிறது.

ப்ராத்மிக் பாஸாகி மத்யமாவிற்குச் சென்ற நாட்களில் சிறு மாற்றம். நாங்கள் வகுப்பிற்குச் செல்லும் போது, முன்பே வந்திருக்கும் ஶ்ரீவள்ளியுடன் ப்ரபாகர் சார் பேசிக் கொண்டிருப்பார். நாங்களும் அதைப் பற்றி அதிகம் யோசிக்கவில்லை.

ஒருநாள் நாங்கள் வகுப்பிற்கு வரும் போது ஶ்ரீவள்ளி அங்கு இல்லை. ப்ரபாகர் சாரும் தலையெல்லாம் கலைந்து போய் அயர்ன் பண்ணாத சட்டையுடன் அன்று லேட்டாக வந்தார். வகுப்பு முடிந்ததும், நாங்கள் ‘என்ன சார் ஆச்சு?’ என்று கேட்க, அவரது கண்கள் கலங்கி விட்டன. அதுவரை ஆண்கள் கலங்கி நான் பார்த்ததில்லை.

‘நேற்று ஶ்ரீவள்ளியோட மாமாக்கள் வந்து என்னை அடிச்சுட்டாங்க’ என்று பிசிறு தட்டிய குரலில் சொல்லி கட்டை விரலைக் காட்டினார்.
அப்பொழுது தான் இருவரும் காதலித்திருக்கிறார்கள் என்று என் களிமண் மண்டைக்கு உறைத்தது. அப்பொழுதெல்லாம் காதலென்பது எங்கள் அகராதியில் கெட்ட வார்த்தை. திகைத்துப் போனோம்.

அதன் பிறகு ஷேவ் செய்யாத கலைந்த உருவமாய் வந்து போனார் ப்ரபாகர் சார். பழைய கலகலப்பான சாரைப் பார்க்க முடியாத வருத்தத்தில் நாட்கள் சென்றன.

ஒரு நாள் வகுப்பு முடிந்ததும், என்னிடமும் லலிதாவிடமும் அவரது தொலைப்பேசி எண் எழுதியிருந்த தாளைக் கொடுத்து ஶ்ரீவள்ளியின் வீட்டிற்குச் சென்று அதைச் சேர்த்துவிட முடியுமா என்று கேட்டார். பயமாயிருந்தது. ஆனாலும் சரி என்றோம்.

அவருக்கு உதவவேண்டும் என்ற எண்ணத்தை விட, அப்போது டெக்கில் பார்த்த சின்ன தம்பி முதலிய படங்கள் கொடுத்த அசட்டுத் துணிச்சலும், அதிலிருந்த த்ரில்லுமே எங்களை நகர்த்தியிருக்க வேண்டும் என்று இப்போது தோன்றுகிறது.

ஶ்ரீவள்ளியின் வீட்டில் அவளைப் பார்க்க எங்களுக்கு எந்தத் தடையும் இருக்கவில்லை. அவளது அம்மா நன்றாகப் பேசினார். ஆனால் அம்மா சென்று விட்ட பிறகும் கூட ஶ்ரீவள்ளியின் தம்பி எங்களுடனே தொக்கி நின்றான். எப்படியோ, அந்தத் தாளை ஶ்ரீவள்ளியிடம் சேர்த்துவிட்டுத் திரும்பினோம். அதன் பிறகு நாங்கள் அவளைப் பார்க்கவே இல்லை. எங்கள் ஹிந்தி சாரும் மாறிவிட்டார்.

மத்யமாவிற்குப் பின்னர் நான் ஹிந்தி க்ளாஸ் போகவில்லை. ஹிந்தி பேசும் நல்லுலகமும் ஒரு நல்ல சிறுகதையாசிரியரை இழந்தது.
அடுத்த சில மாதங்களில் ஶ்ரீவள்ளிக்கு அவளது மாமாவுடன் திருமணம் நடந்து விட்டதாகக் கேள்விப்பட்டோம்.

வள்ளி படத்தின் குறிப்பிட்ட அந்தப் பாடலைக் கேட்கும் போதெல்லாம், அவர்கள் இருவரையும் பார்த்துப் பேச வேண்டும் என்ற ஆசை மனதிற்குள் எழுந்தபடியிருக்கிறது. அதை ஶ்ரீவள்ளி நிச்சயம் விரும்பமாட்டாள், ஆனாலும் சார் எழுதிக்கொடுத்த அந்தத் தாளின் நினைவுகளையும் அதைச் சுமந்து வந்த எங்களையும் ஶ்ரீவள்ளி  மனதின் மூலையில் ரகசியமாய் இன்னமும் ஒளித்து வைத்திருப்பாள் தானே!

வெள்ளி, 9 மார்ச், 2018

வசந்தா மிஸ்

“என் மகள் Mathsல ரொம்ப வீக்” என்று தயக்கத்துடன் தொடங்கும் அம்மாக்களின் அழைப்புகள் என் கால்களைப் பிடித்திழுத்து பால்யத்தில் குப்புறத் தள்ளிவிடும்.

ஒருகாலத்தில் என் கணக்கும் அப்படி தான் ஆட்டம் கண்டு கொண்டிருந்தது. அன்றைக்கு என் படிப்பு 35 மதிப்பெண்களைக் குறி வைத்தே இருந்தது. அப்பொழுதெல்லாம் வகுப்பிற்கு வெளியே தரையில் உட்கார்ந்து பேடை மடியில் வைத்து பரீட்சை எழுதுவோம்.
12 X 44 X 6 X 0 =?
இது என் பரீட்சையில் ஒரு கேள்வி.
பென்சிலை மடியில்  வைத்துவிட்டு, பள்ளித் திடலில் குடை விரித்திருந்த மரத்தைப் பார்த்தபடி கொஞ்சம் நேரம் யோசித்தேன். பின்னர் நாக்கைத் துருத்தியபடி குனிந்து,
12 X 44= 528,
520 X 6= 3120
செய்த Transfer Errorஐக் கவனிக்காமல் மேலும் தொடர்ந்தேன்.
3120 X 0 = ம்ம்ம் . . .
இவ்வளவு பெரிய நம்பரை ஜீரோவால் பெருக்கினால் ஜீரோ என்பதை நம்ப மனமின்றி, எண்காருணிய அடிப்படையில் 3120வையே விடையாகப் போட்டு, அந்தக் கணக்கிற்கு, பூஜ்ஜியம் மதிப்பெண்களைப் பெற்றேன். அந்த அளவிற்கான பொது அறிவே அன்றைக்கு எனக்கு இருந்தது.

இப்படியாகத் தட்டுத் தடுமாறி ஒன்பதாம் வகுப்பில் நுழைந்த போது, செந்தூரத்தால் நீளமாய் ஒற்றை நாமமிட்டு, தளர்வான பின்னலுடன்  வஸந்தா மிஸ் வகுப்பாசிரியராய் வந்தார். கணக்கே வராத எனக்கு,  ஏனோ முதல் பார்வையிலேயே அவரைப் பிடித்துவிட்டது. அந்த பிடித்தல் அதிகமாகி பின்நாட்களில், ‘த’வின் வாலைக் கூடுதலான ஒரு வளைவுடன் இழுத்து விடும் அவரின் ஸ்டைலை நானும் முயற்சித்து தமிழாசிரியரிடம் திட்டு வாங்கினேன்.

கணக்குப் பாடத்தின் முதல் நாள் . . .
கணக்கைச் சொல்லிக் கொடுத்து விட்டு, யாராவது ஒரு மாணவர், கணக்கை போர்டில் செய்து காட்டுங்கள் என்று அவர் சொல்ல, ஏதோ ஒரு உந்துதலில் சட்டென கையைத் தூக்கி, கரும்பலகைக்கு அருகில் சென்றேன். அங்கு சென்று நின்ற போது தான் தன்நிலையை அடைந்தேன். அங்கிருந்து பார்க்கையில் வகுப்பே வித்தியாசமாகத் தெரிந்தது. அதுவரை புரிந்தது போலத் தோன்றிய கணக்கு அந்நியமாகியிருந்தது. எதையோ எழுதிவிட்டு, ‘உனக்கு எதுக்கு இந்த வேலை?’ என்று கேட்ட பெண்ணின் பக்கத்திலிருந்த என் இடத்தில் அமர்ந்தேன். உலகம் மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பியது. தவறாகிப் போன கணக்கையும் மீறி, ஆசிரியரிடம் என்னை அடையாளப்படுத்திக் கொண்டது மகிழ்ச்சியாய் இருந்தது.
எல்லோரிடமும் சகஜமாய் பழகிய வசந்தா மிஸ்ஸின் வீட்டு விலாசத்தை வாங்கி, அந்தத் தீபாவளிக்கு, ரோஜாப்பூக்கள் கொண்ட ஒரு வாழ்த்து அட்டை கூட அனுப்பி வைத்தேன்.
தீபாவளி முடிந்து வகுப்பிற்கு வந்த அவர், அந்த அட்டையைக் கையில் எடுத்துக் கொண்டு என்னிடம் வந்தார். புன்னகைத்தபடி அவர் நீட்டிய வாழ்த்து அட்டையை எட்டிப் பார்த்தால், அதில் என் தோழியின் பெயரை எழுதி வைத்திருந்தேன். அவருக்கும் என் தோழிக்கும் ஒரே நேரத்தில் வாழ்த்தை எழுதி, விலாசம் மாற்றி அனுப்பி வைத்திருக்கிறேன்! அதைச் சொல்ல மீண்டும் அவரிடம் புன்னகை.

டியூஷன் எடுப்பதற்காக எங்கள் விடுதிக்கு அவர் வந்த போது, எங்க மிஸ் என்று எனக்குப் பெருமையாக இருந்தது. வெள்ளைத் தாட்கள் வைத்து அப்பா தைத்துத் தந்த லாங் சைஸ் ரஃப் நோட்டில் மார்ஜின் வரைந்து வைத்து, அவர் வருகைக்காகக் காத்திருக்கத் தொடங்கினேன். மார்ஜின் வரைந்து வைத்திருந்ததற்காகவே, என் நோட்டை வாங்கி அதில் தான் கணக்கைப் போட்டு சொல்லித் தருவார் அவர். இது மற்ற மாணவிகளுக்குத் அதிருப்தியைக் கொடுத்தாலும், எனக்கு அவருடனான நெருக்கத்தை அதிகப்படுத்தியது. அவர் கொடுக்கும் சவாலான கேள்விகளுக்கு என்னைத் தயார் படுத்திக் கொள்ள அதிக நேரம் பயிற்சி செய்தேன். மூலையில் யாரோ கசக்கிப் போட்டத் தாளில் கணக்குக் கேள்வி இருக்க, எடுத்து அதை சால்வ் செய்து அவரிடம் காட்டி சரியா என்று கேட்டேன். இப்படியாக, மெல்ல மெல்ல அவருக்கு விருப்பமான மாணவியானேன். பத்தாவது பொதுப் பரீட்சையின் போது, கணக்குப் பரீட்சைக்கு முன்தினம், எனக்கு நல்ல ஜூரம்.
‘அதெல்லாம் கவலைப்படாதே! இத்தனை நாள் செய்த பயிற்சி வீணாகப் போகாது, நீ நன்றாகச் செய்வாய்!’ என்று சொல்லி அனுப்பினார்.

‘நீ கணக்கில 100 மார்க் எடுத்திட்ட தெரியுமா?’ என்று சொல்லி, மதிப்பெண் தாளை வாங்க நுழைந்த என்னை வரவேற்றவரும் அவர் தான். அன்று தான் அவரைக் கடைசியாகப் பார்த்தது.

பின்னர் பள்ளி மாறிவிட்டேன். அவ்வப்போது அவரை நினைத்துக் கொள்வேன். சென்று பார்க்க வேண்டும் என்று தோன்றும். பள்ளி இருந்தது தி.நகர் என்பதால் சென்னைப் போகும் போதெல்லாம் அந்தப் பக்கம் போகவும் செய்வேன். ஆனாலும் ஏதோவொரு தயக்கத்தில் பள்ளியை வெளியிலிருந்து பார்த்துவிட்டு திரும்பிவிடுவேன். இரண்டு வருடங்களுக்கு முன், சென்னை சென்றிருந்த நேரம், பள்ளி, பழைய மாணவிகளுக்கு பொதுவாய் ஒரு informal அழைப்பு விடுக்க, நானும் சென்றேன். உள்ளே நுழைந்தவுடன் எனது முன்னாள் ஆங்கில ஆசிரியரான பாகீரதி மிஸ் கண்ணில் பட்டார். வசந்தா மிஸ் திருச்சி பக்கம் சென்றுவிட்டதாகவும், தற்போது அவருடன் தொடர்பில் இல்லை என்றும் சொன்னார். ஏமாற்றத்துடன் திரும்பினேன்.

‘எனக்குக் கணக்கு வராது!’ என்று சொல்லிக் கொண்டு வரும் மாணவர்களைப் பார்க்கும் போது எனக்குள் வசந்தா மிஸ் வந்து அமர்ந்துவிடுகிறார். உடனே நான் கணக்கு மருத்துவராய் மாறி விடுகிறேன். அந்த மாணவருக்கு கணக்குப் பாடத்தில் எங்குப்  பிரச்சனை துவங்குகிறது என்பதை முதல் வகுப்பில் ஆராய்ந்து, அதைப் போக்கும் வழிகளை அவருக்கேற்ப உருவாக்குகிறேன். மீண்டும் மீண்டும் பயிற்சி கொடுத்து, கணக்கைப் பார்க்கும் போதெல்லாம் துப்பறியும் நிபுணர்களாய் மாறக் கற்று கொடுக்கிறேன். சிதறிக் கிடக்கும் தடயங்களை வைத்து விடை கண்டுபிடிக்கும் வேலையை ரசனையுடன் அவர்கள் செய்வதைப் பார்த்து திருப்தி கொள்கிறேன். என்றேனும் ஒரு நாள் வசந்தா மிஸ்ஸை சந்தித்து, அவர் தான் இதற்குக் காரணம் என்று சொல்லியே ஆகவேண்டும். முடியுமா என்று தான் தெரியவில்லை!

வியாழன், 8 மார்ச், 2018

அஃறிணைக் கடவுள்


‘இன்றாவது என்னைக் கட்டுப்படுத்திக்கொண்டு மன உளைச்சலினால் யாரிடமும் கத்தக்கூடாது’ என்று அவன் நினைத்துக் கொண்டிருந்த போதே, ‘வள்’ என்றது நிக்கி. அதன் ‘வள்’ளலில் எள்ளல் பாவம் தொக்கி நின்றதாய்த் தோன்றியது. ரத்தம், நாளங்களுள் வேகமாய் பரவி, நிக்கியைக் காலால் எத்திவிடும் ஆவலைத் தூண்டியது.
‘ஓம் சாந்தி ஹி!’
‘உன்னால் என் திடத்தை உடைக்க முடியாது, போ நாயே!’
தன் உடலின் கடைப் பகுதியை அவனுக்குக் காட்டியபடி அறைக்குள் சென்றது நிக்கி.
பொதுவாய் எரிச்சலை ஏற்படுத்தக் கூடிய காரணிகள் அனைத்தும் நேற்றைய பிரம்ம முகூர்த்தத்தில் விமானமேறி பத்திரமாய் சென்னையை அடைந்துவிட்டன.
‘நானாவது… கத்துவதாவது?'
மேசையிலிருந்த காயாவை எடுத்து, அதன் மீது ஒட்டியிருந்த ஒன்றிரண்டு எறும்புகளை நசுக்காமல் தட்டிவிட்டான். எறும்புகளே! நான் உங்கள் கடவுள். உங்களைக் கொல்லாமல் ரட்சித்தேன். இதை ஒரு கவிதையாக்கி முகநூலில் போட்டால் இருபது லைக்குகளாவது பெரும் என்று தோன்றியது.
‘கணவா! உனக்கு எவ்வளவு பவர் வேணுமானாலும் இருக்கட்டுமே! அதெல்லாம் வேலையிடத்துல மட்டும் தான்! ஒரு நாள், ஒரே ஒரு நாள் நீ கத்தாம இருந்துட்டா, என் பேரை கட்டெறும்புன்னு மாத்திக்கறேன்!’
அவள் பெயரை சிற்றெறும்பு என்று மாற்றுவதில் கூட அவனுக்கு ஆர்வம் இல்லை. ஆனால் என்ன திமிர்!
காயாவை மீண்டும் அங்கே வைத்த போது, இன்னும் சில எறும்புகள்…. துணியை எடுத்து அவற்றை லாவகமாகத் தள்ளிவிட்டு மீண்டும் கடவுளானான்.
கணினியில் ஆங்கிலப் படம் ஒன்றைச் சத்தமாய் ஓடவிட்டான்.
‘காலையில எழுந்து இதில உட்கார்ந்துகிட்டா, மத்த வேலையெல்லாம் எப்படி நடக்கும்!’
சுவாரஸ்யமான படத்தின் நடுவில், கட்டெறும்பின் குரல் காலைக் கடிக்க, சினம் சர்ரென நரம்புகளுள் ஊடுருவியது. கடித்தது மனைவியின் குரல் அல்ல, நிஜ எறும்பு.
அதை அழுத்தமாய் அதே சமயம் உயிர் போய்விடாதபடிக்குப் பற்றித் தூர வீசினான். பிடித்த பிடியில் தன் கோபத்தை உணர்த்தி விட்டதாய் நினைத்தான். ஆனால் இன்று அவனுக்குச் சுரணையற்று போய்விட்டதாக எண்ணிய அவ்வெறும்பு, காதில், பின் கழுத்தில், முதுகின் கைக்கெட்டாத பகுதியில் என்று மாறி மாறி ஊரத் துவங்கியது. ஆத்திரத்தில் தெய்வ குணத்தைத் துறந்து, அதைப் பிடித்து நசுக்கினான். இருந்தும் பிரச்சனை தீரவில்லை. எழுந்து விளக்கைப் போட்டுவிட்டு பார்த்த போது, எறும்புப் படையே தன்னைக் குறி வைத்திருப்பதை உணர்ந்தான்.
எறும்புகள் வந்த திசையை ஆராய்ந்ததில், மானசி புதைத்து வைத்திருந்த சாக்லேட் துண்டு கிடைத்தது. அதைத் தூக்கி வீசி, எறும்புகளைப் பெருக்கி, நாற்காலியைத் துடைத்த போது, மலையைத் தூக்கி மறுபக்கம் வைத்த அயற்சி ஏற்பட்டிருந்தது. கணினியை அணைத்துவிட்டு அப்படியே சோஃபாவில் சாய்ந்தான். அவனுக்குச் சுகமாய் உறக்கம் வந்த நேரம் எறும்புகள் விழித்துக் கொண்டன. தலையில் கிரீடம் அணிந்து கடவுளாகி, பன்னிரண்டாவது மாடியிலிருந்து வீசுவதற்காக அவனைத் தூக்கிச் செல்லத் துவங்கின. “விட்டா, நீங்க பாட்டுக்குப் போயிட்டே இருக்கீங்க! என்னோட பவர் உங்களுக்குத் தெரியாது! உங்களை…..!” என்று கத்தியவாறு எழுந்தவனை, மூலையில் படுத்திருந்த நிக்கி அலட்சியமாய்ப் பார்த்துவிட்டு மறுபுறம் திரும்பிக் கொண்டது.