வியாழன், 21 ஜூலை, 2011

தானாகவே எரியும் மனிதர்கள் - 2

தானாகவே எரியும் மனிதர்கள் - 1


 

 
 மனித உடல் எக்காரணமும் இன்றி தானாகவே பற்றிக் கொண்டு, முற்றிலும் எரிந்து போவதை Spontaneous Human Combustion என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

உடல் இப்படி தானே எரியக் காரணம் என்ன?

எந்த காரணமும் இன்றி உடல் எரிகிறது என்பதை ஒப்புக் கொள்ளாத சிலர்,
எரிந்து போனவர் சிகரெட் பிடித்தபடியே தூங்கிப் போயிருக்கலாம். அந்த விபத்து சிகரெட் தீயினால் ஏற்பட்டிருக்கலாம் என்று கூறினார்கள். 

ஆனால் எலும்பையும் சேர்த்து சுத்தமாய் எரிப்பதற்கு சிகரெட் தீ போதுமானதாக இருக்க வாய்ப்பு இல்லை!

வேறு சிலர், விபத்திற்குள்ளானவர் அளவிற்கு அதிகமாய் குடித்திருக்கலாம். வயிற்றினுள் ஆல்கஹாலின் அளவு அதிகமாகி தீப்பிடித்துக் கொண்டிருக்கலாம் என்று கூறினர். ஆனால் அப்படி நேர்வதற்கு வயிற்றினுள் ஒரு சிறு தீப்பொறியாவது தேவை! 

சில மனிதர்களின் வயிற்றில் எரியக் கூடிய வாயுப் பொருளான பாஸ்ஃபேன் இருப்பதாக விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கின்றனர். இதுவும் Spontaneous human combustionக்கு காரணமாக இருக்கக் கூடும் என்கிறார்கள்.

சற்றே வித்தியாசமாய், டாக்டர் ஹான் என்பவர் இப்படி நேர்வதற்கான காரணத்தை wick effect என்று கூறி பயங்கரமாய் விவரிக்கிறார்.

அதாவது உடலில் இருக்கும் அதீதமான கொழுப்பு உருகி, உடலிலுள்ள எலும்பையே திரியாய் பயன்படுத்தி (கிட்டத்தட்ட ஒரு மெழுகுவர்த்தியைப் போல)எரியத் தொடங்குகிறது என்கிறார்.

இதற்கு ஆதாரமாக, இவ்வகை விபத்துகளில் உருகிய கொழுப்பின் மிச்சங்கள் மஞ்சள் நிற திரவத் திட்டுகளாய் கண்டெடுக்கப் பட்டிருக்கின்றன.
ஒரு பன்றியின் உடலை வைத்து சோதித்து பார்த்து இதை உறுதிபடுத்தினார் டாக்டர் ஹான்.

எது எப்படியோ! இது போன்ற சம்பவங்கள் அதிகம் நிகழ்வதில்லை என்பது மிகப் பெரிய ஆறுதல்!