வெள்ளி, 17 ஆகஸ்ட், 2012

சிறுகதைப் போட்டிகள்


சிறுகதைப் போட்டிகளுக்கு  கதை அனுப்புவதைப் பற்றி யோசித்து வருகிறேன்.

பொதுவாய் இவ்வகைப் போட்டிகள் எழுத்தாளர்களின் கதைகளுக்கு ஒரு அங்கீகாரத்தைக் கொடுக்கிறன.

என்னால் கூட கதையெல்லாம் எழுத முடியுமா என்ற சந்தேகம் வந்ததே, நான் எழுதிய முதல் கதை  ஊக்கப் பரிசை பெற்ற போது தான். அதற்கு முன் எழுத வராது என்று திடமாய் நம்பியிருந்தேன்.

அதைத் தொடர்ந்து எழுதிய போட்டிகளிலும் பரிசு கிடைக்கவே அவநம்பிக்கை கொஞ்சம் கொஞ்சமாய் குறைந்தது. நிற்க!

போட்டிகளில் வெற்றி என்பது நீதிபதிகளின் கருத்தைப் பொறுத்து மாறுபடுகிறது என்று இப்போது தோன்ற ஆரம்பித்திருக்கிறது. நீதிபதி எதை கதைக்கான அமைப்பு என்று நினைக்கிறாரோ அது போன்ற கதைகளே வெற்றி பெறுகின்றன.

மிக சமீபத்தில் கலந்துக் கொண்ட போட்டி ஒன்றில், முடிவை ஒட்டியே கதையின் ஆரம்பம் இருக்க வேண்டும் என்று கூறிய நீதிபதியின் கருத்தை என்னால் ஒப்புக் கொள்ள முடியவில்லை.
அதை ஒரு எழுதும் முறையாக கொள்ளலாமே  தவிர, அதையே அடிப்படையாய் வைத்து வெற்றியைத் தீர்மானித்ததில் எனக்கு  இசைவில்லை.

அப்படி பார்த்தால் ஒரு சம்பவமோ அல்லது ஃப்ளேஷ்பேக் கொண்ட கதையோ தான் சிறு கதையாக முடியும். அப்படியல்லாத நிறைய பிரபல கதைகளை நான் படித்திருக்கிறேன்.

அந்த போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்றால் நான் அவரின் கருத்தை ஒட்டி கதை எழுத வேண்டும்.
எனக்கு அவரின் கதைகளைப் பிடிக்கும். நான் அவரது கதைகளையும், அனுபவத்தையும் மதிக்கிறேன் என்பது வேறு விஷயம்.
ஆனால் அதற்காக என் கதைகளை மாற்றி எழுதுவதில் சம்மதமில்லை. அந்த போட்டி சம்பந்தப்பட்ட யார் இதை படித்தாலும் மன்னிக்கவும், இது என் தனிப்பட்ட கருத்தே!

ஒரு தேக்கரண்டி எண்ணை விட்டு, அரை தேக்கரண்டி கடுகு  தாளித்து, பெரிய எலுமிச்சையளவு புளியை 250கிராம் தண்ணீரில் கரைத்து, அரை தேக்கரண்டி மிளகாய் தூளும், ஒரு தேக்கரண்டி உப்பும் சேர்த்து சமைப்பதில் எனக்கு நம்பிக்கையில்லை.

இதிலிருந்து எனக்கு என்ன புரிகிறது என்றால், ஒரு எழுத்தாளனின் நம்பிக்கை மேம்படுவதற்கு, ஆரம்ப சந்தேக காண்டத்தைக் கடப்பதற்கு போட்டிகள் உதவுகின்றன.

அவர்களுக்கென்று தனி கருத்து உருவான பின் அவை அவ்வளவாக தேவைப் படுவதில்லை.

அதனால் இனி போட்டிக்கு எழுதுவதை குறைத்துக் கொள்ள எண்ணியிருக்கிறேன். குறைத்து மட்டுமே! ஆசை யாரை விடுகிறது .  

கல்கி சிறுகதைப் போட்டி 2012ல் என் கதை பிரசுரத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது. சினேகிதியே . . . என்ற அந்த கதையை அச்சில் பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறேன்.

13 கருத்துகள்:

Ramani சொன்னது…


இதிலிருந்து எனக்கு என்ன புரிகிறது என்றால், ஒரு எழுத்தாளனின் நம்பிக்கை மேம்படுவதற்கு, ஆரம்ப சந்தேக காண்டத்தைக் கடப்பதற்கு போட்டிகள் உதவுகின்றன.//


இதிலிருந்து எனக்கு என்ன புரிகிறது என்றால், ஒரு எழுத்தாளனின் நம்பிக்கை மேம்படுவதற்கு, ஆரம்ப சந்தேக காண்டத்தைக் கடப்பதற்கு போட்டிகள் உதவுகின்றன.

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

விரைவில் கல்கி சிறுகதைப் போட்டியில் வர வேண்டுமென வாழ்த்துக்கள்...

இடி முழக்கம் சொன்னது…

உங்கள் இந்த கட்டுரையை படித்த பின் எனக்கும் கதை எழுதலாமோ என்று தோன்றுகிறது...

ஹேமா (HVL) சொன்னது…

@ Ramani
புரிகிறது! மிக்க நன்றிங்க.

@திண்டுக்கல் தனபாலன்
உங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி!

@இடி முழக்கம்
எழுதுங்க. வாழ்த்துகள்!

தனிமரம் சொன்னது…

அச்சில் விரைவில் வரட்டும் சினேகிதி ! வாழ்த்துக்கள்.

சிந்தனை சொன்னது…

ஸலாம்


//கல்கி சிறுகதைப் போட்டி 2012ல் என் கதை பிரசுரத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது. சினேகிதியே . . . என்ற அந்த கதையை அச்சில் பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறேன்.//

விரைவில் அச்சில் வர வாழ்த்துக்கள் ...

எனக்கு ஒரு நண்பர் இருக்கிறார் .. அவங்க பெயர் ஹேமலதா ...

ஹேமலதா பெயருக்கு தமிழ் அர்த்தம் என்ன ? தெரிந்தால் சொல்லுங்களேன் ப்ளீஸ் ...

ஸ்ரீராம். சொன்னது…

இந்த வாரம் கல்கி வந்ததும் வேகமாக எடுத்துப் புரட்டி உங்கள் கதை வந்திருக்கிறதா என்று பார்த்தேன். சிறுகதை எழுதுவது எப்படி என்று சுஜாதா கூட எழுதி இருக்கிறார்.
ஹேமலதா என்ற பெயருக்கு அர்த்தம்...

//ஹேமலதா பெயருக்கு தமிழ் அர்த்தம் என்ன ?//

நானும் சொல்லலாமா...என் அம்மா பெயரும் அதேதான்... பொற்கொடி என்று பொருள். ஹேமம் என்றால் தங்கம்/பொன் லதா என்றால் கொடி!

அப்பாதுரை சொன்னது…

நடுவில் வந்த சமையல் குறிப்பு புரியவில்லையே? (பெரிய எலுமிச்சையளவு புளி பயமுறுத்துதே?)

கதை எழுதுவது ஒரு release. சிலருக்குக் கவிதை, பாட்டு, வீணை, ஓவியம், நடனம் போல. தடையில்லாத இயற்கையான releaseல் கிடைக்கும் நிறைவு, போட்டிகளில் கிடைப்பதில்லை. போட்டி அங்கீகாரம் போன்றவை சொல்லாமல் சொல்லப்படும் வரம்புகள்.

ஹேமா (HVL) சொன்னது…
@ தனிமரம்
மிக்க நன்றிங்க!

@ஸ்ரீராம்
தொடர்ந்த உங்கள் ஆதரவிற்கு மிக்க நன்றி! பெயர் காரணத்திற்கும்.

@அப்பாதுரை

எடையில் நிறுத்துப் பார்க்காமல், ரசித்து செய்யும் சமையலிலேயே எனக்கு விருப்பம் அதிகம்ன்னு சொல்ல வந்தேன்! எதையோ மிஸ் பண்ணிட்டேன் போல!
உங்கள் கருத்தை ஒப்புக் கொள்கிறேன். வருகைக்கு மிக்க நன்றி

எல் கே சொன்னது…

ஆரம்பகட்டங்களில் ஒரு அங்கீகாரம் கிடைக்க போட்டிகள் உதவும். அதன் பின் அவை தேவை இல்லை. சில சமயம் சில நடுவர்கள் இப்படி செய்வதுடுண்டு. அதனால் எல்லோரும் அப்படித்தானே என அர்த்தம் கொள்ள வேண்டாம்

ஹேமா (HVL) சொன்னது…

ஒப்புக்கொள்கிறேன். உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி!

விமலன் சொன்னது…

வாழ்த்துக்கள்,கல்கியில் பிரசுரமாகப்போகும் தங்களது சிறுகதைக்கும்,தங்களுக்கும்/

ஹேமா (HVL) சொன்னது…

மிக்க நன்றி, விமலன்!