சனி, 26 அக்டோபர், 2013

அப்பா ஒரு நாய் வளர்க்கிறார்

 
அப்பா வீட்டிற்கு ஒரு நாய்குட்டியைக் கொண்டு வந்திருப்பதாக அம்மா ஃபோனில் சொன்னாள். அதிலும் வேலையற்று சுற்றிக் கொண்டிருந்த ஒரு தெரு நாய்க்கு சொந்தமானதை.
இதைச் சொல்லும் போது அவள் குரலில் எந்த ஒரு மிகைப்பட்ட உணர்ச்சியும் இல்லை. பால் வாங்க கடைக்குச் செல்கிறேன் என்பது போல் மிக சாதாரணமாய்ச் சொன்னாள். அவளின் குணமே அப்படிதான். அப்பா மேற்கே போகிறேன் என்றால் சரி என்பாள். இல்லையில்லை தெற்கே போகிறேன், அந்தப் பக்கம் தான் சூரியன் உதிக்கிறது என்றால் அதற்கும் தலையாட்டுவாள்.
என்னை பொறுத்தவரை எனக்கு இது ஒரு அதிர்ச்சியான செய்தி. அப்பாவிற்கும் நாய்க்கும் பொதுவாய் ஒத்துப் போனதில்லை. அதைக் கண்டால் அவருக்கு பிடிப்பதில்லை அல்லது பிடிக்கும் என்றும் வைத்துக் கொள்ளலாம்.
 
அம்மாவிற்கு என் தங்கையின் தலைப்பேனின் மீதுள்ள ஆர்வம் போல அப்பாவிற்கு நாய். அவர் நாயை அடிப்பதை ஒரு அழகிய சம்பிரதாயமாய்க் கருதி, அதை ரசித்து செய்வதாக தோன்றும். தெருவில் நாயைப் பார்த்தவுடன் உற்சாகத்திற்கு இணையான ஒரு உணர்ச்சி அவர் முகத்தில் தெரியும், ரகசியமாய் யாருக்கோ தெரியாமல் குறும்புத்தனம் செய்யப் போகும் குழந்தையைப் போல அந்தப் பக்கமும் இந்தப் பக்கமும் நோட்டமிட்டபடி, நாயின் கவனத்தை கவனமாய் தவிர்த்து, அரைச் செங்கல்லாக பார்த்து ஒன்றை எடுத்துக் கொள்வார். இது வரை அவர் முழுக்கல்லால் நாயை அடித்து நான் பார்த்ததில்லை. அதைப் பிடிப்பதில் ஏற்படக்கூடிய வசதியின்மை காரணமாய் இருக்கக் கூடும்.
அந்த செங்கல், அவர் கைப்பட்டதும் மட்டையில் அடிப்பதற்காக பிடிக்கப்பட்ட பந்தைப் போன்ற தோற்றத்தைக் கொண்டுவிடும். அதன் கனத்தை அளவிடுவது போல மெதுவாய் இரண்டு மூன்று முறை ஊஞ்சலாட்டுவது போல ஏற்றி இறக்குவார். அதன் பிறகு கையை பின்தள்ளி விசையோடு கல்லை முன்னோக்கி வீசினாரென்றால், அது நாயை ஏதேனும் ஒரு பகுதியில் தாக்காமல் கீழே விழாது.
ராமருக்கு பாணம் போல அப்பாவிற்கு அரைக்கல். நாயைக் கண்டால் கல்லைக் காணோம் என்ற வழக்கே அவர் அகராதியில் கிடையாது. அரைக்கல் கிடைக்கும் போதெல்லாம் அதை வீட்டின் இடப்பக்கத்தில், நான் பிறப்பதற்கு முன்பே எதற்காகவோ தோண்டப்பட்டு காரியம் முற்றுபெறாத்தால் பாதியிலேயே கைவிடப்பட்ட பள்ளத்தில், போட்டு வைத்திருப்பார். அங்கே மட்டுமின்றி வீட்டைச் சுற்றி அங்கொன்றும் இங்கொன்றுமாய் சிலவற்றைப் போட்டும் வைத்திருப்பார். எதிர்பாராத நேரத்தில், எதிர்பாராத இடத்தில் நாயைச் சந்தித்தால் எடுப்பதற்கு வசதியாய் அப்படி போட்டு வைத்திருந்திருக்க வேண்டும்.
 
நாயை அடிப்பது அப்போது அவருக்கு ஒரு விருப்பமான பொழுது போக்கென்றே தோன்றியது. அவரது குறிக்கு இலக்காவது தெருவில் அநாதையாய் திரியும் நாய்கள் மட்டுமே! ஏனோ வளர்ப்பு நாய்களை முறைப்பதோடு நிறுத்திக் கொண்டார். அது அவற்றின் முதலாளிகள் மீது அவர் வைத்திருந்த மரியாதைக்காகவோ அல்லது வீண் வம்பு வளர்க்க விரும்பாத காரணத்திற்காகவோ இருக்கக் கூடும்.

அம்மாவிடம் ஒரு முறை கேட்டதற்கு அப்பத்தா நாய் கடித்து இறந்ததிலிருந்து அப்பா நாய்களை அடிப்பதாகக் கூறினாள். இச்செயலை அப்பா செய்ததால் அதில் நூறு சதவிகிதம் நியாயம் இருப்பதாகவே நம்பினாள். நான் அதிகமாக நீதிக்கதைகளைப் படித்து வளர்ந்ததால் உயிரைத் துன்புறுத்துவது பாவம் என்று கருதினேன். இதன் காரணமாக தெரு நாய்களின் மீது அளவிற்கு அதிகமான அன்பு இல்லையென்றாலும் ஒருவித பரிதாபம் தோன்றியது.
இத்தகு பெருமைகளைக் கொண்ட அப்பாவின் நாயடி தொழில் நான் வளர வளர சற்றே தேய்ந்தாலும், அதன் மீது பாசம் வைத்து வளர்க்கும் அளவிற்கு எதிர்வினையாற்றியிருக்கும் என்று என்னால் நம்ப முடியவில்லை. நாய் குட்டியின் வருகைக்குப் பின் அவருக்கும் எனக்குமான உறவு கூட சற்று தளர்ந்து போயிருந்தது.
 
பொதுவாய் ஒவ்வொரு வாரமும் தொலைபேசும் போது, ஊரில் நடந்த அந்த வார நிகழ்ச்சிகளையெல்லாம் தொகுத்து வைத்து சொல்வார் அப்பா. நாயின் வருகைக்குப் பின் அது குறைந்து போனது.
அடுத்தடுத்த நாட்களில், நாயை தன் அருகில் படுக்க அனுமதிப்பது, அதற்கென்று கீழத் தெருவிற்கு போய் மாட்டுக் கறி வாங்கி வருவது போன்ற அப்பாவின் நாய் வளர்ப்பு பிரதாபங்கள் தொலைபேசி வழியாக காதில் விழுந்து, நம்பிக்கையின்மையை மேலும் அதிகமாக்கியதால் எனக்கு அவரது மனநிலையைப் பற்றிய சந்தேகம் ஏற்பட்டது. அது தந்த கவலையில், ஜீன் விடுமுறையில் ஊருக்கு செல்ல விமான நுழைவுச் சீட்டுகளை ஏற்பாடு செய்தேன்.
 
வீட்டிற்குள் நுழையும் போதே, அங்கே புன்னகையுடன் எதிர் கொண்ட அம்மாவை முந்திக் கொண்டு ஓடி வந்து கால்களை நக்கி வரவேற்க முயன்றது இளம் நாயாக வளர்ந்திருந்த நாய்குட்டி. சங்கீதா சட்டென்று திண்ணையின் மீது தவ்வி உட்கார்ந்து கால்களை மடித்துக் கொண்டு அதை அசூயையுடன் பார்த்தாள். ரேணு தாயின் மடியில் அமர்ந்தபடி நாயை சந்தேகமாய் பார்த்தது. நாய், யாரென்று அறிந்துக் கொள்ளும் ஆர்வத்தோடு மூச்சிறைக்க என்னை சுற்றி வந்துவிட்டு, திண்ணையில் அமர்ந்திருந்த அவர்களை அண்ணாந்து பார்த்தது.

அம்மா சிரித்தபடி, “ராமு கடிக்க மாட்டான். தைரியமா வாங்க” என்றாள். அதைத் தூக்கிக் கொண்டாள். எனக்கு தெரிந்து என் தெருவில் வளரும் மூன்றாவது ராமு இது. இதனோடு தான் தங்க வேண்டுமா என்று விழிகளாலேயே கேட்டாள் சங்கீதா. அவளின் கண் பேசும் வார்த்தைகளின் அர்த்தம் தெரியாமல் திகைக்கத் தேவையின்றி, இந்த ஆறு வருடங்களில் அதை புரிந்துக் கொள்ளும் ஆற்றலைப் பெற்றிருந்தேன். பதிலேதும் சொல்லாமல் அம்மாவின் பக்கம் பார்வையைத் திருப்பி அவளைப் பின் தொடர்ந்தேன்.
 
அப்பா தோட்டத்தில் இருந்த நாய் வீட்டை செப்பனிட்டுக் கொண்டிருந்தார். “வாப்பா! நல்லாயிருக்கியா, பயணமெல்லாம் நல்லாயிருந்ததா?” என்று கேட்டுவிட்டு பதிலை எதிர்பார்க்காமல்,
“இவ்வளவு நேரமா வெளிய தான் இருந்தேன். இப்பத்தான் இதை முடிச்சுடலாம்ன்னு வந்தேன். இன்னும் கொஞ்சம் தான்! உள்ள உட்காருங்க, வந்திடறேன்” என்றுவிட்டு தன் பணியைத் தொடர்ந்தார்.
சாப்பிடும் போது ரேணுவிடம், ராமுவின் விளையாட்டுகளையும் பயங்களையும் பற்றி சொல்லிக் கொண்டிருந்தார். அவரது தற்குறிப்பேற்றிய பேச்சில் ரேணு மயங்கி, அடுத்து வந்த நாட்களில், நாயின் ஒவ்வொரு அசைவிற்கும், குரைப்பிற்கும் அர்த்தம் கண்டுபிடிக்க தொடங்கி, ஐந்து நாட்களில் ஒரு சொற்பொருள் அகராதி போடுமளவு முன்னேறியிருந்தாள்.
ராமுவிற்கு பேருக்கு தான் தோட்டத்தில் வீடு, அதன் இருப்பு முழுவதும் நாங்கள் புழங்கிய எங்கள் வீட்டிற்குள் தான். சமையலறையிலிருந்து படுக்கையறை மெத்தை வரை அனைத்தையும் பயன்படுத்த முழு உரிமையையும் பெற்றிருந்தது அது.
 
“நாம வேணுமானால் அதோட வீட்டிற்கு போயிடலாம்!” என்றாள் சங்கீதா நக்கலாக.
வீட்டு விருந்தாளி என்ற மரியாதைக் காரணமாகவோ என்னவோ அது அவளை மட்டும் அவ்வளவாக சீண்டுவதில்லை. எனக்கு அதன் இருப்பு பழகிவிட்டது என்றாலும், அது எப்போதும் காலை நக்க முயற்சிப்பது மட்டும் சங்கடமாய் இருந்தது.

ரேணு அதனோடு நன்றாக சினேகமாகி விட்டிருந்தாள். அப்பா எங்கே போனாலும் உடன் ரேணுவும் ராமுவும் போய்வந்தார்கள். அவர்கள் மூவரும் ஒரு சிறந்த கூட்டணியை அமைத்துவிட்டதாய் தோன்றியது. அப்பா ஊரில் அனைவருக்கும் பெருமையாய் பெயர்த்தியைக் காட்டினார். ராமுவும் ரேணுவைக் காணும் போதெல்லாம் வாலை வேகமாய் ஆட்டி மகிழ்ச்சியைக் தெரிவித்தான். ரேணுவிற்கு எங்கள் ஊர் பெட்டிக் கடைகளில் விற்ற தேன்மிட்டாய்களை மிகவும் பிடித்து விட்டது. வீட்டிற்கு வரும் போது கைநிறைய மிட்டாய்களை அள்ளி வருவாள். அதன் சுகாதாரத்தைப் பற்றிய சந்தேகத்தில் சங்கீதா மறுப்புக் குரல் எழுப்பியது கூட அவளை பாதிக்கவில்லை.
 
கொஞ்சம் நாட்களில் ராமு என்னை சலனப்படுத்தாத அளவிற்கு மாறிப் போயிருந்தான். அல்லது நான் அவனுக்கேற்றார் போல மாறிவிட்டேன். அப்பா சுறுசுறுப்பாய் சுற்றி வந்ததே, எனக்கு ராமுவைப் பிடிக்க போதுமான காரணமாய் இருந்தது. சங்கீதாவும் அதைப் பற்றி பெரிதாய் அலட்டிக் கொள்ளாமல் கிளம்பும் போது எடுத்துச் செல்ல மிளகாய்த் தூளும், சாம்பார்ப் பொடியும் அரைத்து பேக் செய்வதில் கவனம் செலுத்தி, ராமுவைப் பற்றிய கவலைகளைக் குறைத்துக் கொண்டிருந்தாள்.

ஊருக்கு செல்லும் நாள் நெருங்க நெருங்க நெஞ்சிலிருந்து கவலைப் பந்து மேலெழுந்து தொண்டையை அடைக்க ஆரம்பித்தது. அம்மா, அப்பாவின் முகங்களிலும் வேதனையைக் காணமுடிந்தது. மறுநாள் விமானத்திற்கு பெட்டியெல்லாம் கட்டி கூடத்தின் ஒரு மூலையில் வைத்துவிட்டு திண்ணையில் அமர்ந்த போது அப்பா பக்கத்தில் அமர்ந்தார். ரொம்ப நாட்கள் கழித்து அப்படி அமர்வது மனதிற்குள் சொல்ல முடியாத ஒரு உணர்ச்சியை ஏற்படுத்தியது. மற்றவர்களெல்லாம் உள்ளே படுத்துவிட்டிருந்தார்கள். அந்த நேரத்து மௌனத்தைக் கலைக்க மனமின்றி நான் மரங்களுக்கிடையே மறைந்திருந்த நிலவைத் தேடிக் கொண்டிருந்தேன்.
 
திடீரென்று, “ஏம்ப்பா! ரொம்ப சிரமப்பட்டு வேலை செய்யாத! வீட்டில கொஞ்சம் நேரம் செலவழிக்கணும்ப்பா. இல்லைன்னா வாழ்க்கைக்கு அர்த்தமே இல்லாம போகும்” என்றார் அப்பா .
சங்கீதா நான் ஓவர் டைமில் மூழ்கிக்கிடப்பதை மாமனார் மாமியாரிடம் சொல்லியிருக்கிறாள்!
“இந்த வயசுல குழந்தையோட நேரத்தை செலவு செய்யலைன்னா, பின்னால நினைச்சா கூட அதுக்கு வாய்ப்பு வராதுப்பா!”
அதை ஆமோதிப்பது போல மௌனமாய் இருந்தேன்.
பிறகு என்ன நினைத்தாரோ,
‘நீ வேலைக்குன்னு ஊரவிட்டு கிளம்பி போயிட்ட பிறகு வெறிச்சுன்னு போயிடுச்சுப்பா! நீ சின்னதா இருந்தப்ப நான் வேலைய விட்டு வீட்டுக்கு வந்தா, நான் வரத எப்படி தெரிஞ்சுப்பியோ, ஓடி வந்து வாசல்ல நிப்ப. நானும் அதை எதிர்பார்த்து எதையாவது வாங்கிட்டு வருவேன்”
அவர் என்ன வாங்கி வருவார் என்ற ஆர்வம் மேலோங்க உள்ளும் புறமும் அலைந்தது எனக்கு நன்றாய் நினைவிருந்தது.
“பெரிசா ஆக ஆக ஓடி வரலைன்னாலும் என்னோட வரவ நீ மனசுக்குள்ள எதிர் பாக்கறது நல்லா தெரியும். பக்கத்துல உட்காருவ அன்னிக்கு பள்ளியில என்ன நடந்ததுன்னு சொல்லுவ . . .”

அப்போதெல்லாம் அப்பாவுடன் எல்லாவற்றையும் பகிர்ந்துக் கொள்ள வேண்டும் என்ற ஆசை. என் சாதனைகளைச் சொல்லி அவரை ஆச்சரியபடுத்த முயற்சித்திருக்கிறேன்.
“நீ சிங்கப்பூருக்கு கிளம்பி போன பிறகு இனி வாழ்க்கையில என்ன இருக்குன்னு தோண ஆரம்பிச்சுது.”
ஆரம்பத்தில் தினமும் தொலைபேசி பிறகு வேலைப்பளுவில் இரண்டு நாட்களுக்கு ஒரு முறையாக குறைத்து, திருமணத்திற்கு பின் வாரம் ஒருமுறையாக மாறிப்போனது.
“ராமு வந்த பெறகு சித்த பரவாயில்லை!” என்று தனக்குள் சொல்லிக் கொண்டார் .
எனக்கு பேசமுடியாமல் தொண்டையை அடைத்தது.

மறுநாள் வாடகைக் காரில் ஏறுகையில் ராமுவிடம்,
“பை சொல்லுடா ராமு!” என்றார் அப்பா. ராமு உடல் பதற வாலை ஆட்டிக் கொண்டிருந்தான்.
ரேணு ராமுவிற்கு கை காட்டிவிட்டு உள்ளே ஏறினாள்.
கார் நகர ஆரம்பித்ததும்,
“ஏம்ப்பா நாம இவங்களையெல்லாம் கூட்டிட்டு போகக்கூடாது?” என்றாள்.
பதிலேதும் சொல்லாமல் நான் பின்னால் திரும்பிப் பார்த்தேன். அப்பாவும் அம்மாவும் ராமுவும் தூரத்தில் கலங்கலாய் தெரிந்தார்கள்.
                                                                             
                                                                                           திண்ணை.com   23/9/2013
                                                                                           படம் இணையத்திலிருந்து
                                                                                                     

வெள்ளி, 6 செப்டம்பர், 2013

மொட்டுக்கும் மனசு உண்டு 
அப்பல்லாம் அப்பா வீட்டுக்கு சீக்கிரமா வந்திடுவார். என்கூட நிறைய விளையாடுவார். கண்ணாமூச்சி, பேட் மிட்டன் அப்புறம் . . .  எனக்கு அப்பா கூட பந்து விளையாட ரொம்ப பிடிக்கும். பந்த என்கிட்ட தூக்கிப் போட்டார்ன்னா சரியா பிடிச்சுடுவேன்.   நான் ஜெயிக்கும் போதெல்லாம் சமத்து குட்டின்னு சொல்லிகிட்டே என்னை தலைக்கு மேல தூக்கிப் போட்டு பிடிப்பார். அவர் சட்டை, முகம், தலைன்னு பார்த்துகிட்டே மேலே போய்,  திரும்ப கீழ வரும் போது வயித்துக்குள்ள  சிலீர்ன்னு இருக்கும். கண்ணை கெட்டியா மூடிப்பேன். பயமா இருந்தாலும் திரும்ப அப்பிடி போகணும்னு ஆசையா இருக்கும்.  

 

       ராத்திரி தூங்கும் போது, நரி நீல சாயத்துல விழுந்துடுமே . . . ! எல்லா மிருகமும் அத பார்த்து பயப்படுமே . . . ! அந்த கதையெல்லாம் சொல்லுவார். மந்திரவாதி கதைய சொல்லும் போது, இருட்டில அவன் என் பக்கத்திலேயே நிக்கிற மாதிரியே இருக்கும். அப்பாவுக்கு கிட்டக்க போயி படுத்துக்குவேன். அப்பா என்னைய தூக்கி அவர்  மேல படுக்க வச்சுகிட்டு கதைய தொடர்ந்து சொல்லுவார். ‘டடக் டடக்குன்னு ரயில் ஒடற மாதிரி அவரோட இதயம் துடிக்கிறது நல்லா கேட்கும். அப்புறம் பயமாவே இருக்காது. அம்மாகாலைல வேலைக்கு போகணும் சீக்கிரம் படுங்கன்னு திரும்ப திரும்ப சொல்லிகிட்டே இருப்பாங்க.

அம்மா எப்பவுமே அப்படி தான்! அம்மாவுக்கு சமையல் மட்டும் தான் பிடிக்கும். எப்பவும் எதையாவது துடைச்சுகிட்டோ, சமைச்சுகிட்டோ தான் இருப்பாங்க. என்னைய எந்த நேரமும் சாப்பிடு சாப்பிடுன்னு சொல்லிகிட்டே இருப்பாங்க. எனக்கு தான் அந்த ப்ரொக்கோலியையும், முட்டையையும் பார்த்தா பிடிக்கவே பிடிக்காது. பச்சையா இருக்கிற மரக்கறின்னாலேய்யக்க்’. ஆனா கோழியோ, மீனோ பொரிச்சா யம்ம்மி. அத செவப்பு நிறமா அம்மா  பொரிச்சு தர வரைக்கும் என்னால  பசிய   தாங்கவே   முடியாது.

     அப்பா சாயங்கால நேரத்துல பேண்டையும் முழுக்கை சட்டையையும் போட்டுகிட்டார்ன்னா எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கும். நானும் அம்மாகிட்ட  உடுப்ப  மாத்திக்க  ஓடுவேன்.
சின்ன குட்டிக்கு மூக்கிலே வேர்த்துடுச்சா!’ன்னு சிரிச்சிகிட்டே  மாத்திவிடுவாங்க. அப்பாவோட  ஜாலியா   கெளம்பிடுவேன்.

           சில நேரம்  நான் வேலையா போறேம்மா, உனக்கு கண்டிப்பா ஏதாவது வாங்கிட்டு வறேன்ன்னு சொல்லிட்டு, வரும்போது கேட்பரீஸ் சாக்லேட்டோ, சாக்லேட் வேஃபஸ்ஸோ, சாக்கோ சிப்ஸ் பிஸ்கட்டோ வாங்கிட்டு வருவார். ரொம்ப நேரம் ஆயிட்டா டி.வி. பார்த்துகிட்டே,     அதோ அந்த சோஃபாவுல தூங்கிடுவேன். காலைல பார்த்தா படுக்கையில இருப்பேன். ஆச்சரியமா இருக்கும்!

 

     அப்ப எல்லாம், இப்படீ நடந்து, ரோட தாண்டி ப்ளாக் 106 வழியா போனா வருமே, அந்த பள்ளியில படிச்சிகிட்டிருந்தேன். மெய் ஹீவா, வாசன், ப்ரியா, ஷெரீன் எல்லாம் என்னோட கூட்டாளிங்க. பள்ளி முடிஞ்சி  டீச்சர்  கதவ திறக்கும் போது  எனக்காக அம்மா வெளியே நிப்பாங்க. இல்லன்னா அழுகை வந்துடும். அம்மாட்ட சண்டை போடுவேன். ரொம்ப அடம்   பிடிக்கிறேன்னு   திட்டுவாங்க   அம்மா.

     இந்த வருஷம் ப்ரைமரி ஸ்கூலுக்கு வந்துட்டேன். காலைல சீக்கிரமா எழுந்திரிக்கணும். தூக்கம் தூக்கமா வரும். மணியடிச்ச பிறகு போனா லேட் கம்மர்ஸ்  என்  பேர எழுதிடுவாங்க. மேடம் லிம் ஏசுவாங்க!  

மிஸ் எலிசா தான் என்னோட ஃபார்ம் டீச்சர். ரொம்ப நல்லவங்க. புத்தகத்துல நிறைய  ஸ்டாரெல்லாம் ஒட்டுவாங்க. முன்ன இருந்த பாலர் பள்ளியில நெறைய எழுத வேண்டாம். கலர் தான் அடிப்போம். இந்த பள்ளியில அப்படியெல்லாம் இல்ல. எல்லா நாளும் வீட்டுப் பாடம் எழுதணும்.

 

     இன்னிக்கு காலைல நான் வீட்டுப் பாடம் பண்ணிகிட்டு இருந்தேன். ‘தெனமும் காலைல தான் இதெல்லாம் செய்யறதா? பள்ளி விட்டு வந்ததுமே முடிக்கிறதுக்கென்ன?ன்னு அம்மா வழக்கம் போல ஏசினாங்க.

     அம்மா சொல்லும் போது அப்படியே செய்யணும்னு தோணுது, ஆனா சாயங்காலம் மறந்துடுது. ஆக்டோலஸ்பாஞ் பாப்பாக்கணும்னு தோணுது, நேத்திக்கிநம்ம குடும்பத்துல ராதா ஆன்ட்டி காடி முன்னால விழுந்தாங்களே! என்ன ஆனாங்கன்னு பார்க்கத் தோணுது, ஆனா வீடுப்பாடம் செய்யணும்னு  மட்டும் ஞாபகம் வர மாட்டேங்குது.

 

ம்ம்ம். . . எங்க விட்டேன்?

ஆங். . .நான் காலைல வீடுப்பாடம் செய்யும் போது, அப்பா தேத்தண்ணி குடிச்சுகிட்டே, அடுப்படி ஜன்னல் பக்கத்தில நின்னு போன் பேசிகிட்டிருந்தாரா!? அப்ப  அடுப்பில இருந்த கடாய்ல கூட ஏதோ கொதிச்சுகிட்டு இருந்தது. நேத்து ராத்திரி சாப்பிட்ட சாம்பார் வாசனை அடிச்சது. நான் கணக்கு பாடத்தை முடிச்சுட்டு, கையெழுத்து புத்தகத்துல எழுதிகிட்டு இருந்தேன் . அப்ப,

 என்ன காலைலயே ஆரம்பிச்சாச்சா?ன்னு அம்மா சத்தமா கத்தினாங்க. கத்தும் போது அம்மாவோட குரல் க்ரீச்சுன்னு கேட்டுச்சி.  நிமிர்ந்து அம்மாவ பார்த்தேன். ‘புசு புசுன்னு வேகமா மூச்சு விட்டுகிட்டே அப்பாவை முறைச்சிகிட்டு இருந்தாங்க. கண்ணு செவப்பா கலங்கியிருந்தது.

அப்பாவுக்கு கோபம் வந்திருச்சி. போன அணைச்சிட்டு,

ஏன் சும்மா காலையில எழுந்ததும் கத்தற? அடுப்பில வச்சத பார்க்காம நான் என்ன பண்ணறேன்றதிலேயே இரு!ன்னு வேகமா சொன்னார். அம்மா மாதிரி சத்தமா இல்லன்னாலும் கோபமா தான் பேசினார்.

ஏன் நாந்தான் பாக்கணுமா? நீங்க இங்க தானே நிக்கறீங்க. நிறுத்தக் கூடாதா? நாள் முழுக்க தானே பேசறீங்க! இதையெல்லாம் வெளிய போன பிறகு வச்சிக்கக் கூடாதா?’ன்னு பதிலுக்கு கத்தினாங்க அம்மா.

ச்சே! தெனமும் காலைல இதே ரோதனையாப் போச்சு! நிம்மதியா ஒரு தேத்தண்ணி கூட குடிக்க முடியல!ன்னு சொல்லிகிட்டே  கையில இருந்த கோப்பய சுவத்துல தூக்கி அடிச்சார் அப்பா. அது துண்டு துண்டா ஒடஞ்சி தரையெல்லாம் சிதறிடுச்சு. சுவரெல்லாம் தேத்தண்ணி!

 

     எனக்கு பயத்துல காலெல்லாம் கடகடன்னு ஆடுச்சி. சடக்குன்னு அம்மாவ பார்த்தேன். நல்ல வேள! அம்மா மேல படல. எழுந்து ஓடிப்போய் அம்மாவ கட்டி புடிச்சுகிட்டேன். அம்மாவுக்கு உடம்பெல்லாம் லேசா நடுங்கிகிட்டிருந்தது. ‘பள்ளிக்கு கிளம்புன்னு  சொல்லி என்னை உள்ள அனுப்பிட்டாங்க.


    நாற்காலிய இழுத்துப் போட்டு, மேல ஏறி நின்னு பல்லை தேய்க்கிறப்போ, குளியலறைக்குள்ளே சோப் போட்டு முகத்த தேக்கிறப்போவெல்லாம் அம்மாவும் அப்பாவும் சத்தமா பேசிகிட்டு இருந்தாங்க.


நான் இருக்கறது தானே எடஞ்சலா இருக்கு! நான் செத்து போயிடுறேன். நீங்க சந்தோஷமா இருங்க!’ன்னு சொல்ற அம்மாவோட குரல் கேட்டுச்சி.

முதுக தேச்சிவிட அவங்க வரல, நானும் கூப்பிடல. நானே தேச்சிகிட்டேன். பெரிய பொண்ணாகிறேன் இல்லயா!

 

        சீருடை போட்டுகிட்டு வெளிய வந்தப்ப, அப்பா அங்க இல்ல. அவருக்காக மேச மேல வச்சிருந்த ரொட்டி அங்கேயே இருந்துச்சி. அம்மா கண்ணெல்லாம் வீங்கி புசுபுசுன்னு  இருந்திச்சு. ‘நான் செத்து போயிடுறேன்ன்னு அவங்க அப்பாகிட்ட சொன்னது ஞாபகம் வந்திச்சு.  அவங்கள விட்டுட்டு பள்ளிக்கு போக பயமா இருந்திச்சு.

    மிஸ் எலிசா இன்னைக்கு கணக்குல, நேரம் பாக்குறதப் பத்தி சொல்லிக் கொடுத்தாங்க. அது எனக்கு முன்னவே தெரியும். அம்மா சொல்லிக் கொடுத்திருக்காங்க. டீச்சர்  வைட் போர்டில கடிகாரம் வரைஞ்சு மணி என்னன்னு கேட்டப்போ, நான் தான் எய்ட் க்ளாக்ன்னு சரியா  சொன்னேன். டீச்சர் வெரி குட் சொன்னாங்க.


     ஆர்ட் க்ளாஸ்ல எங்களுக்கு வாழ்த்து அட்டை செய்ய கத்து கொடுத்தாங்க. எனக்கு எப்பவுமே இந்த வகுப்பு ரொம்ப பிடிக்கும். ஆனா இன்னிக்கு  டீச்சர் சொல்றத முழுசா கேட்க முடியல! மனசுக்குள்ள அம்மாவுக்கு எதுவும் ஆயிடக் கூடாதுன்னு சாமிகிட்ட வேண்டிகிட்டே இருந்தேன். சின்ன பசங்க கேட்டா சாமி கண்டிப்பா செய்வார்ன்னு எங்க

கடலூர் பாட்டி சொல்லியிருக்காங்க.

 

    ப்ரேக்ல நான் இன்னைக்கு தனியா தான்  சாப்பிட்டேன். ‘நேத்திக்கி எங்க அம்மா, அப்பாவோட படத்துக்கு போனோமே, கே.எப்.சி போனோமேன்னு வனிதாவோ, திவ்யாவோ சொல்லும் போது, என்னால பதிலுக்கு எதுவும் சொல்ல முடியறது இல்ல. கஷ்டமாயிருக்கு! அதனால  இப்பல்லாம் அவங்க கூட   சேர்றதே   இல்ல.  


    தமிழ் வகுப்புல, வீட்டுப்பாடம் எழுதலன்னு தமிழாசிரியை என்னை ஏசினாங்க. தீபா, உஷா, வனிதா, திவ்யா எல்லாம் என்னையே பார்த்தாங்க. கஷ்டமா இருந்துச்சி. ‘இரண்டு நாட்களாக வீட்டுப் பாடம் செய்யவில்லைன்னு எழுதி அம்மாகிட்ட கையெழுத்து வாங்கிட்டு வரச் சொன்னாங்க. வகுப்பு முடிஞ்சதும் கமலேஷ் என்னய பார்த்து சிரிச்சான். எனக்கு அழுகையா வந்துச்சி!

 

        பள்ளி முடிஞ்சதும் இப்பல்லாம் நானே வீட்டுக்கு வந்துடறேன். வீடு ரொம்ப கிட்டயே இருக்கறதால அம்மா வரதில்ல. இன்னிக்கு வீட்டுக்கு வரும் போது பயமா இருந்தது. ‘சாமி அம்மாவுக்கு எதுவும்  ஆயிருக்கக் கூடாதுன்னு திரும்ப திரும்ப வேண்டிகிட்டேன். நல்லவேள அம்மா இருந்தாங்க. வெளிய போகும் போது போடுற புது சட்டய போட்டுகிட்டிருந்தாங்க. வீட்டுக்குள்ள நுழையும் போது மீன் சம்பல் வாடை வந்துச்சு.

               

                  டி.விய போட்டுகிட்டு சாப்பாட்டு மேசையில உட்கார்ந்துகிட்டேன். ‘டாம் அண்ட் ஜெர்ரிஓடிகிட்டிருந்தது. அம்மா மீன முள்ளில்லாம எடுத்து தட்டுல வச்சாங்க. மீனை பொரிச்சிருந்தா  இன்னும் நல்லாயிருந்திருக்கும்னு தோணிச்சு.   ஆனா    சொல்லல!
    

       எனக்குஜெர்ரி ரொம்ப பிடிக்கும். அவ்வளவு பெரிய டாம், ஜெர்ரிகிட்ட ஏமாந்து நிக்கிறத பாக்கும் போது சிரிப்பா வரும். ஜெர்ரி தான் ஜெயிக்கும்னு தெரிஞ்சாலும் சில நேரம் மாட்டிக்குமோன்னு பயமா இருக்கும்! டாம், ஜெர்ரிய துரத்திகிட்டே போயி கதவுல இடிச்சிகிட்டப்போ,

இனிமே இதெல்லாம் சரிபடாதுல்லா, கொஞ்ச நாள் தவிக்க விட்டாத் தான் இதுக்கெல்லாம் புத்திவரும். அவ கூட எத்தினி நாளைக்கி குடும்பம் நடத்தரார்னு பாக்கறேன்!’ ன்னு செல்போன்ல பேசிகிட்டே வெளிய போனாங்க அம்மா. நல்லவேள ஜெர்ரி பொந்துக்குள்ள ஓடிடுச்சி. ஆனா டாம் விடலை. பொந்துக்குள்ல கைய விட்டு ஜெர்ரியோட வால பிடிச்சு இழுத்தது.

 

    ராத்திரி ரொம்ப நேரம் ஆயிடுச்சி. எப்படியும் நைன் ஓ க்ளாக் இருக்கும். படுக்கையில படுத்துகிட்டே  அப்பாவுக்கு வெயிட் பண்ணுறேன்.  தூக்கம் தூக்கமா வருது. டெட்டிக்கு குட்நைட் சொல்லிட்டு, அத கட்டிபிடிச்சுகிட்டேன். இந்த டெட்டி போன பிறந்த நாளைக்கு கமலா ஆன்ட்டி வாங்கிக் கொடுத்தது. வீட்டுல என்னோட கூட்டாளி அது தான். அது கிட்ட தான் எல்லாத்தையும் சொல்லுவேன். இப்பவும் அதுகிட்ட என்னோட பயத்தை மெதுவா சொல்றேன்.


      நல்லா தூங்கிட்டேன் போல! திடீர்ன்னு பெரிசா ஏதோ சத்தம் கேட்டிச்சு. பயந்து போயி டெட்டிய இறுக்கமா பிடிச்சுக்கறேன். எழுந்திருக்கலை!
நான் அப்பிடித்தான் இருப்பேன்! இருக்க இஷ்டமில்லன்னா ஓடிப் போயிடுன்னு அப்பா சத்தமா சொல்றார், அம்மா கிட்ட தான். பயமாயிருக்கு! கண்ண கெட்டியா மூடிக்கறேன்.

அம்மாஎனக்கு மட்டும் உங்க கூட இருக்க ஆசையா? போறேன்!”ன்னு பதிலுக்கு கோபமா சொல்றாங்க.

       

அப்ப அப்பா சொன்னா மாதிரி அம்மா ஓடப் போறாங்களா! அம்மா ஓடும் போது நானு? என்னால அம்மா கூட அவ்வளவு வேகமா ஓட முடியுமான்னு சந்தேகமா இருக்கு. ஆனா ஓடிட்டா நாளைக்கு ஸ்கூல் போக வேண்டாம், அம்மாகிட்ட கையெழுத்து வாங்க வேண்டாம்

தமிழாசிரியைட்ட அத காட்டவேண்டாம்! ம்ம்ம். . .
இனி டிவோர்ஸ் தான், ஒன்னோட குடும்பம் நடத்த யாரால முடியும்ன்னுகத்தறார் அப்பா.

டிவோர்ஸா!!!

எனக்கு மட்டும் பிடிச்சிருக்கா? எல்லாம் என் தலையெழுத்து. வேண்டாம்னு எவ்வளவோ சொன்னாங்க! நான் கேட்கலையே!”ன்னு அம்மா அழறாங்க. எனக்கு திக்குன்னுது.

     

          என் கூட படிக்கிற சோஃபியாவோட அப்பாவும் , அம்மாவும் கூட டிவோர்ஸ் தான் பண்ணிகிட்டாங்க. இப்போ வேற வேற வீட்டுல இருக்கறாங்க. அப்பா இன்னொரு அம்மா கூட இருக்கறாரு. அப்பா வீட்டில ஒரு குட்டி தம்பி கூட புதுசா வந்திருக்கறதா சொன்னா. சனி, ஞாயிறுல மட்டும் போயி    இருந்துட்டு    வராளாம்.

     இப்ப அப்பா, அம்மா ரெண்டு பேரும் வேற வேற வீட்டுக்கு போகப் போறாங்களா? அப்பாவ சனி, ஞாயிறுல தான் பார்க்க முடியுமா?

அப்புறம் யார் கூட விளையாடுறது? யார் கதை சொல்றது? யார்கிட்ட சாக்கலேட் வேஃபல்ஸ் கேக்கறது? எனக்கு அழுகையா வருது! போர்வைய முழுசா இழுத்து போர்த்திக்கிறேன். பயமா இருக்குது.
அம்மாவுக்கு ஏதாவதுன்னா நான் என்ன செய்யறது? அன்னிக்கி மஞ்சள் துணியெல்லாம் தொங்கவிட்டு, ப்ளாக் கீழே வச்சிருந்தாங்களே அந்த பாட்டி மாதிரி, அம்மா சாமி கிட்ட போயிட்டா என்ன செய்யறது? வீட்டுல யார் சமைக்கிறது? பயமா இருந்தா யார் கிட்ட போயி படுத்துக்கிறது?
சத்தம் போடாம அழறேன். முன்னெல்லாம் சத்தமா தான் அழுவேன். அம்மாவப் பார்த்து தான் இப்பிடி அழ கத்துகிட்டேன்.

 

           அப்பா ஏன் இப்படி சத்தமா பேசணும்? அம்மாவாவது சும்மா இருக்கலாம் இல்லையா? ஏன் அவங்களும் திருப்பி பேசறாங்க! அதுவும் இந்த அம்மா ஏன் காலையில சண்டை போடறாங்க? அதனால தானே அப்பாவுக்கு இன்னிக்கு கோபம் வந்தது.  இப்படி எல்லாத்தையும் யோசிச்சு பார்த்துகிட்டே இருந்ததுல அம்மாவும் அப்பாவும் ஏன் சண்ட போட்டாங்கன்னு எனக்கு புரியற மாதிரி இருக்குது!

      நான் சாயங்காலம் வீட்டுப் பாடம் செய்யாம, காலைல செய்யறதால தானே! கரெக்ட் அதுவா தான் இருக்கணும். அதனால தானே தெனமும் காலைல சண்ட போடுறாங்க! எனக்கு என்ன செய்யறதுன்னு இப்ப தான் புரியுது. நான் இனி நல்ல பிள்ளையா நடந்துக்கப் போறேன், என் வேலைகளை சரியா முடிச்சுட்டா, இவங்க சண்டை போடுக்க மாட்டாங்க தானே!

   

      காலைல எழுந்ததும் ஆர்ட் க்ளாஸ்ல செஞ்ச வாழ்த்து அட்டைய ரெண்டு பேருக்கும் கொடுத்து, இன்னியிலிருந்து நான்குட் கேர்ள்ன்னு சொல்லப்போறேன். இப்போ பயம் போயிருச்சி. தூக்கமா வருது. பக்கத்தில இருக்கற டெட்டிக்கு ரெண்டாவது முறையா குட் நைட் சொல்றேன்.