ஞாயிறு, 31 மார்ச், 2013

தோற்றுப் போகும் தேவதைகள்

சொல்லு தீபு! வணக்கம்!”

வணக்கம் . . .”

என் பெயர் தீப்தி குமரன்

என் பேரு தீப்தி குமதன்!”

பேரு இல்லடி, பெயர்!”

பெயர்

என் பெயர் தீப்தி குமதன், ஏம்மா மை நேம் ஈஸ் தீப்தின்னு சொல்லிடறேனே!”

அதெல்லாம் சொல்லக் கூடாது!”

ஏம்மா?”

அப்படி சொன்னா ப்ரைஸ் கொடுக்க மாட்டாங்க! சரி அடுத்தத சொல்லு!”

நான் பாலர் வகுப்பில் படிக்கிறேன்!”

பாலர் வகுப்புன்னா என்னம்மா?”

நீ படிக்கிறியே அது தான்! கேள்வி கேட்காம சொல்லு! நான் பாலர் வகுப்பில்

அம்மா எனக்கு அந்த சிப்ஸ் கொஞ்சம் கொடேன்!”

நீ முதல்ல ஒழுங்கா சொல்லு!”

ஏன் வசந்தி, குழந்த தான் கேட்குதே! கொடேன், சாப்பிட்டுட்டு சொல்லட்டும்!”

நீங்க சும்மா இருங்க! இப்ப கொடுத்தா சாப்பிறதுல கவனம் போயிடும்! இதை சீக்கிரம் படிச்சு முடிக்கணும். அடுத்த வாரம் போட்டி!”

நாலு வயசு குழந்தைக்கெல்லாமா போட்டி வைக்கிறாங்க?”

இது ஏழு வயசுக்குக் கீழேயான பிரிவு!”

அப்ப ஆறு வயசு பிள்ளைங்க கூட போட்டிக்கு அனுப்பறியா!”

இதுக்கும் அதுக்கும் ரெண்டு வயசு தானேங்க வித்யாசம்!”

குழந்தைய போட்டு படுத்தாதே!”

மூணு வயசுலேயே அதது என்னென்னமோ பண்ணுது! டீவிய பாருங்க! போன வாரம் சூப்பர் சிங்கர்ல என்னம்மா பாடுச்சு தெரியுமா ஒரு குழந்தை! அதுமூணு வயசுலேயே பாட்டு கத்துக்க ஆரம்பிச்சுதாம்! இது ரொம்ப லேட்!”

“ 'தாளம்ல க்ளாஸ்க்கு கேட்டுட்டு வந்திருக்கேன். அடுத்த மாசம் தான் சேர்த்துக்க முடியும்ன்னு சொல்லிட்டாங்க!”

என்ன க்ளாஸ்?”

டேன்ஸூம், பாட்டும்! ரெண்டும் ஒரே நாள்ல, டேன்ஸ் முடிச்சுட்டு ஒரு மணி நேரம் ப்ரேக் அப்புறம் பாட்டு

இதுக்காக லிட்டில் இந்தியா போய்வரப்போறியா?”

குழந்தைக்காக இது கூட பண்ணலைன்னா எப்படிங்க?”

குழந்தைன்றத ஞாபகம் வச்சிக்கோ!”

உங்கள எதுக்கும் டிஸ்டர்ப் பண்ணமாட்டேன்! கவலைப்படாதீங்க!”

நீ சொல்லுடா! யாரைக் கேட்கிறாய் வரி?”

யாரை கேத்கிறாய் வதி?”

என்னோடு வயலுக்கு . . .”

என்னோவயல்க்கு . . .”

வந்தாயா ?”

வந்தியா!”

இல்லம்மா! வந்தா தா தா சொல்லு!”

தா தா . . .”

கரெக்ட்! வந்தாயா சொல்லு!”

குமரனுக்கு கவலையாய் இருந்த்து!

போட்டி நடக்கவிருக்கும் அந்த ஹால் களைகட்டிக் கொண்டிருந்தது. பெற்றோர்கள் தத்தம் பிள்ளைகளை கண்ணகியாகவோ, தேவர்களாகவோ, உபதேவதைகளாகவோ உருமாற்றிக் கொண்டிருந்தார்கள்.
குதித்துக் கொண்டிருந்த பாஞ்சாலியை அம்மா அடக்கிக் கொண்டிருந்தார். உடலில் நீல சாயம் தீட்டப்பட்டுக்கொண்டிருந்த கிருஷ்ணர் சிணுங்கினார். ஆஞ்சனேயர் மெக் டொனால்ட்டிலிருந்து வாங்கிய பிரெஞ்ச் ஃப்ரைஸை சாப்பிட்டுக் கொண்டிருந்தார். திருவள்ளுவர் பொய்த் தலைமுடிக்குள் கைவிட்டு சொறிந்துக் கொண்டிருந்தார். நாரதர் தூக்க கலக்கத்தில் அம்மா மீது சாய்ந்துக் கொண்டிருந்தார்.

தீப்திக்கு வீரபாண்டிய கட்டபொம்மன் வேடத்தை அணிவித்துக் கொண்டிருந்தாள் வசந்தி.

அம்மா, இந்த ட்ரெஸ் குத்துதும்மா!”

டேய் குட்டி! கொஞ்ச நேரம்டா! நீங்க மேல போயி அதோ இருக்கு பாருங்க மைக், அதுல அழகா பேசிட்டு வாங்க! எல்லாத்தையும் கழட்டிட்டு ஜாலியா கே.எப்.சி போகலாம்!”

இதுக்குள்ள காலை விடு!”

அம்மா இந்த செயினெல்லாம் வேண்டாம்மா! வெயிட்டா இருக்கு!”

உனக்கு எது தான் வேணும்னு சொல்லேன்! நல்லது எதுவுமே வேண்டாம். இதுல மட்டும் அப்பாவக் கொண்டிருக்க! வாழ்க்கையில மேல போகணும்ன்ற எண்ணமே கெடையாது!”

அம்மா! இந்த தொப்பி அரிக்குதும்மா!”

கொஞ்ச நேரம் சும்மாயிருக்கியா! சும்மா 'நையி நையி'ன்னுகிட்டு! இந்தா இத கையில போடு!”

அதோ பார் அந்த அண்ணன் வாலையெல்லாம் வச்சிகிட்டு உட்கார்ந்திருக்கிறான்! அவன் ஏதாவது சொல்றானா பார்த்தியா!”

சரி! சரி! அழாதே! ஐ லைனர் கரைஞ்சிடப்போகுது! பிறகு முகத்தை கழுவிட்டு முதல்லேருந்து ஆரம்பிக்கணும்!”

கூட்டம் அதிகமாகிக் கொண்டிருந்து.

கிட்டத்தட்ட எழுபது பேர் போட்டி போடறாங்களாம்! தெரியுமா!” என்றாள் பக்கத்திலிருந்த பெண். வசந்திக்கு பயமாயிருந்தது. இந்தப் பெண் மேலே ஏறி ஒழுங்காய் பேச வேண்டுமே! ஆஞ்சனேயருக்கு வடைமாலை சாத்துவதாய் வேண்டிக் கொண்டாள்.

தீப்தி பக்கத்திலிருந்த ராமருடன் விளையாடிக் கொண்டிருந்தாள்.

“தீபு சைலெண்டா உட்காரு இல்லைன்னா எல்லாம் கீழ விழுந்திடும்!”

“ 'ட்ரெஸ்சிங்'க்கு நாற்பது மார்க்காம்! நடிப்புக்கு நாற்பது மார்க்காம்! பேசறதுக்கு இருபது மார்க்காம்!” என்றாள் ராமரின் தாய், வசந்தியிடம்.

கிட்டத்தட்ட அனைத்து பிள்ளைகளுக்கும் அம்மாக்கள் வேஷம் கட்டிக் கொண்டிருக்க, அப்பாக்கள் உதவி செய்துக் கொண்டிருந்தார்கள். ஒரு தந்தை சிரத்தையாய் தன் பிள்ளைக்கு பஞ்சகட்சம் கட்டிக் கொண்டிருந்தார். வசந்திக்கு தன் கணவரின் மீது கோபமாய் வந்தது.

அதென்ன ஞாயிற்று கிழமைன்னு பார்க்காம இன்னிக்கு கூட வேலை! சரி போட்டி ஆரம்பிக்கும் போதாவது வந்து சேர்ந்தால் சரி!’

குமரன் வந்து சேர்ந்த போது ஹால் நிரம்பி வழிந்தது.

ஏம்மா! இத்தினி பேரு கூடவா போட்டி!”

ஆமாங்க! எழுவது பேர், அதுல ஆறு பேருக்கு ப்ரைஸ்!”

இதெல்லாம் தேவையில்லாத வேலை வசந்தி! குழந்தைய இன்னிக்கு கூட தூங்கவிடாம, காலைல ஆறு மணிக்கெல்லாம் எழுப்பி, ஜீராங் ஈஸ்டிலிருந்து டேம்பனிஸ் வரைக்கும் கூட்டிட்டு வந்து, மணி இப்ப பன்னிரெண்டு ஆகப்போகுது! இன்னும் ஆரம்பிக்கல!”

இல்லைங்க! இதோ இப்ப ஆரம்பிக்க போறாங்களாம்! 'ஜட்ஜீ'க்காக வெயிட் பண்ணிகிட்டிருக்காங்க!”

“அம்மா! எனக்கு பர்கர்”

“இப்ப சாப்பிட்டா மேக்கப் அழிஞ்சிடும்! வாயைத் திற இந்த ஜீஸை ஊத்தறேன்!”

சற்று நேரத்தில் ஆரம்பித்த போது, முதலில் கதை சொல்லும் போட்டி என்றார்கள்.

சற்றே பெரிய குழந்தைகளுக்கான போட்டி அது.

ஒவ்வொரு குழந்தையும் ஏற்ற இறக்கத்தோடு கதை சொல்லிக் கொண்டிருந்தது. கிழவனைப் போல, கடவுளைப்போல என்று குரலை மாற்றி பேசி, பாடி, ஆடி அசத்திக் கொண்டிருந்தார்கள். அவர்கள் பேச்சும், நடிப்பும் ஆச்சரியப்பட தக்கதாய் இருந்தது. பெரியவர்களால் செய்யமுடியாத்தைக் கூட அனாயாசமாய் செய்துக் கொண்டிருந்தார்கள்.

அதற்குள், மேல் சட்டை அணிந்துக் கொள்ளாமல் ஏர்கான் குளிரில் அமர்ந்திருந்த ஆஞ்சனேயருக்கு பொறுமை போய்விட்டது.

அம்மா! வீட்டுக்கு போகலாம்மா!” என்று அழ ஆரம்பித்தான் அந்த சிறுவன்.

பாரதியார் அம்மாவின் மடியில் தூங்கிவிட்டிருந்தான்.

கர்ணன் சாக்லேட் கேட்டு அடம்பிடித்தான்.

கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் கழித்து மாறுவேடப் போட்டி ஆரம்பித்தது. அதற்குள் பிள்ளைகள் அனைவரும் சோர்ந்து போயிருந்தார்கள்.

தீபு! மேல ஏறினதும் பயப்படக் கூடாது! மஞ்சள் அரைத்து-வ நல்லா சொல்லனும்! நீ நல்லா சொன்னா தான் ப்ரைஸ் கொடுப்பாங்க! சரியா!”

தூக்க கலக்கத்தில் தலையை ஆட்டினாள் தீப்தி.

அடுத்து தீப்தி குமரன், வீர பாண்டிய கட்டபொம்மனாக வேடமேற்று வருகிறார்!”

தீப்திக்கு மேலே ஏறி கூட்டத்தைப் பார்த்தும் அம்மா சொல்லிக் கொடுத்ததெல்லாம் மறந்து போய்விட்டது.

கூட்டத்திற்குள்ளாக அம்மாவைத் தேடினாள். பயமாய் இருந்தது. அழுகையாக வந்தது.

சொல்லும்மா!” என்றாள் மைக்கைப் பிடித்திருந்த பெண்.

அதற்குள் அம்மாவைக் கண்டுபிடித்துவிட்டாள். அம்மா அங்கிருந்து ஜாடை செய்ய அவளைப் பார்த்துக் கொண்டே,

“மை நேம் ஈஸ் தீப்தி குமதன். பாலர் வகுப்பில் பதிக்கிறேன். நான் வீர பாந்திய கத்தபொம்மன்.
கித்தி, திரை, வரி, வத்தி..!
யாரைக் கேத்கிறாய் வதி . . .
என்னோடு வயல்க்கு வந்தியா . .
நாத்து த்தியா . . .
கலை பறிச்சியா . . .
இல்லை மஞ்சளறைத்துக் கொடுத்தியா . . .
மாமனா மச்சானா மானங்கெத்தவனே!” என்று அபிநயத்தோடு சொன்ன போது கூட்டம் கைதட்டியது.

வசந்திக்கு பெருமையாய் இருந்தது.

ஆனால் பரிசு பெற்ற பெயர்களை அறிவித்த போது தீப்தியின் பெயர் அதில் இல்லை. வசந்தி அழுதேவிட்டாள்.

“குழந்தை எவ்வளவு கஷ்டப்பட்டு சொன்னா! ஆனா ப்ரைஸ் கொடுக்கலையே!” என்றாள் குமரனிடம்.

“விடும்மா! இது போட்டி தானே! எல்லோரும் ப்ரைஸ் வாங்க முடியுமா!”

“இல்லைங்க! எவ்வளவு பேர் கை தட்டினாங்க! அவங்க முன்னவே யாருக்கு கொடுக்கணும்னு முடிவு செஞ்சுட்டாங்க போல இருக்கு!”

“அம்மா! எனக்கு ஏன் ப்ரைஸ் கொடுக்கல? மை நேம் ஈஸ் தீப்தின்னு சொன்னேனே அதுக்காகவா! சாரிம்மா மறந்து போச்சு! ஆனா மத்ததெல்லாம் கரெக்டா சொன்னேனே! கொஞ்சம் ப்ரைஸாவது கொடுக்கணும், இல்லையா!”

“சரி! விடு! குழந்தை டயர்டா இருக்கா பார்! வீட்டுக்கு போகலாம்!”

“இல்லீங்க! நான் போய் கேட்டுட்டு வரேன்!”

ஜட்ஜ் காபி குடித்தபடி கேட்டார்.

“உங்க பிள்ளை என்னவா நடிச்சுதும்மா?”

“வீரபாண்டிய கட்ட பொம்மன்!”

“ஓ! அதுவா வெரி க்யூட்! அழகா பேசுனா! ஆனா அடுத்தமுறை உச்சரிப்புல கொஞ்சம் கவனம் எடுத்துக்கோங்க! ‘ர’ ‘ற’ இதெல்லாம் கவனமா பாருங்க. இன்னும் 'ட' வெல்லாம் நல்லா உச்சரிக்கணும். கண்டிப்பா ப்ரைஸ் கிடைக்கும்!”

“பாருங்க! அடுத்த மாசம் யீஷீன்ல ஒரு போட்டி இருக்கு! கண்டிப்பா ப்ரைஸ் வாங்கிக் காட்டறேன்!” என்று கணவனிடம் சவால் விட்டபடி, சோர்ந்திருந்த குழந்தையின் கையை பற்றிக் கொண்டு, வீட்டிற்கு கிளம்பினாள் வசந்தி.

9 கருத்துகள்:

புலோலியூர் கரன் சொன்னது…

ம்ம் நன்று..

s suresh சொன்னது…

குழந்தைகளை குழந்தையாக இருக்க விடாமல் படுத்தும் பெற்றோர்களுக்கு உறைக்க வேண்டும் இதை படித்தாவது! அருமையான கதை! நன்றி!

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

கதையா...? நடந்த உண்மையா...?

ராமலக்ஷ்மி சொன்னது…

கவலையளிக்கிறது இன்றைய பெற்றோரின் போக்கு. நல்ல கதை.

இராஜராஜேஸ்வரி சொன்னது…

அடுத்து தீப்தி குமரன், வீர பாண்டிய கட்டபொம்மனாக வேடமேற்று வருகிறார்!”

வீர பாண்டிய கஷ்ட்டபொம்மன்...!

sury Siva சொன்னது…

இதை விட ஒரு தத்ரூப வர்ணனையை பார்க்க கேட்க முடியாது.

ரன்னிங் காமென்டரி மாதிரி ... சூபர். கங்க்ராட்ஸ்.

இந்த உச்சரிப்பு விவகாரம் பத்தி இரண்டு வார்த்தை சொல்லணும்.

என் பேத்தி கூட, மூணு வயசுலே ஸ்கூல்லே பாடும்போது
முரளிதர...கோபாலா... அப்படின்னு பாடணும்.
முதலிவட போடாலா....என்றாள்.

இதற்கு ஜெனடிக் ஃபாக்டரும் ஒரு காரணம்.

கூடப்பிறந்த பத்து பேர்லே எனக்கு மட்டும் சுட்டு போட்டாலும்
அந்த ல, ள, ழ, ற, ர எதுவுமே வராது.

எதைச் சொன்னாலும் ஹ சௌன்ட் தான் கேட்கறதாம்.

நான் என்னவோ சரியாத்தான் ப்ரொனௌன்ஸ் பண்றதா நினைச்சுக்குவேன்.
புதுசா கேட்கரவங்களுக்கு எல்லாமே நான் பேசறதே புரியாது.

இது ஒருவிதமான டங் டைட். கன்டிஷன். இப்போ இதுக்கெல்லாம் ஒரு சின்ன ப்ரொசிஜர் இருக்கு.

அந்தக்காலத்துலே இதெல்லாம் கிடையாது.

அன்னிலேந்து இன்னி வரைக்கும் நான் சூரி இல்லை. சூஹி.

சுப்பு தாத்தா.
www.subbuthatha.blogspot.in
www.vazhvuneri.blogspot.in
www.pureaanmeekam.blogspot.com

ஹேமா (HVL) சொன்னது…

மிக்க நன்றி புலோலியூர் கரன், s suresh, ராமலஷ்மி.

@ திண்டுக்கல் தனபாலன்
உண்மை தாங்க! இந்த கேள்விக்கு ஒரு பதிவு எழுதுமளவிற்கான பதில் இருக்கிறது என்னிடம்.

@இராஜராஜேஸ்வரி
:):) மிக்க நன்றிங்க!

@ sury Siva
//முதலிவட போடாலா//
மழலை புன்னகைக்க வைக்கிறது.
நானும் ட வராத, வளர்ந்த பிள்ளைகளைப் பார்த்திருக்கிறேன். அவர்களும் இது போல தானோ! தகவலுக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி.

Geetha Sambasivam சொன்னது…

குழந்தையைக் குழந்தையாக இருக்க விடாமல் படுத்தும் பெற்றோர்கள். அதுவும் இந்தத் தொலைக்காட்சிக் கலாசாரம் வந்ததிலிருந்து குழந்தைகளுக்குப் பிடிச்சது சனியன். :((((

கோமதி அரசு சொன்னது…

குழந்தைகள் பாடு கஷ்டம் தான்.மாறுவேடபோட்டி நடக்கும் போது குழந்தைகளுக்கு சீக்கிரம் வைத்துவிட வேண்டும். அவர்களுக்கு தூக்கம், பசி, அந்த உடைகள், நகைகள் கொடுக்கும் தொந்திரவுகள் என்று எவ்வளவு விஷயங்கள் .
அழகாய் சொன்னீர்கள்.