வெள்ளி, 2 டிசம்பர், 2016

அவ்வுலகமும் ஆன்மாக்களும் - 6


     Image result for white light soul  
ஆன்மா இருண்ட சுரங்கப் பாதையிலிருந்து வெளியேறியதும் இருக்கும் அவ்வெளி, வெள்ளையின் பல ஷேடுகளில் நெய்யப்பட்ட ஒளி அடுக்குகளைப் போலக் காட்சியளிக்கிறது . 

அது உள்ளிருந்து விளிப்புறமாக விரியும் ஒரு கண்ணாடி கோளத்தைப் போல இருக்கிறது. அதாவது ஆன்மா பயணிக்கும் பகுதி ஏற்கனவே அது இருந்த பகுதியை விட விரிவானதாய் இருக்கிறது.   

இதில் பயணிக்கும் போது, ஆன்மா தான் சரியான திசையில் இழுக்கபடுவதாய் உணர்கிறது. 
அந்நேரம் tuning forkகின் resonance போல அல்லது wind chimes ஒலி போன்ற இதம் தரும் ஒலியை ஆன்மாவால் உணர முடிகிறது. 
இதை அவ்வுலகமும் ஆன்மாக்களும் 3ம் அத்தியாயத்தில் சொன்ன ஓம்காரத்துடனும் தொடர்பு படுத்திக் கொள்ளலாம்.

Michael newton மனிதன் A வை ஹிப்னாடிஸத்திற்கு உட்படுத்தியதில் அவர் அளித்த பதில்களிலிருந்து:

சுரங்கத்தை விட்டு வெளியேறிய மனிதர் Aவின் ஆன்மா முதலில் அப்பரந்த வெளியைப் பார்த்து வியந்து போகிறது. அவ்வெளி ஒரு ப்ரம்மாண்ட ஐஸ் மாளிகை போல இருப்பதாய் உணர்கிறது. Image result for dream
இவ்விடத்தில் ஒன்றைச் சொல்ல வேண்டும். சிலருக்கு நெய்யப்பட்ட ஒளிக்கற்றை அடுக்குகளாய்த் தோன்றும் இவ்வெளி, இவ்வான்மாவிற்கு ஐஸ்மாளிகையாய் தோன்றியிருக்கிறது. வேறு சில ஆன்மாக்கள் காட்டுப் பூக்களை, பூங்காக்களை, கடற்கரைகளை, கட்டிடங்களை, அழகான அறைகளையெல்லாம் இங்கே பார்த்ததாகச் சொல்லியிருக்கின்றன. 

ஹிப்னாடிஸம் இத்தகைய பிரமைக் காட்சிகளை உண்டாக்குகிறதா என்றால், இல்லை என்கிறார் திரு Michael Newton. 
ஆன்மாக்கள் பூவுலகில் தாங்கள் விரும்பிய, பழகிய இடங்களைக் அங்கே காண்பதற்கு காரணம் இருப்பதாய் நம்புகிறார் அவர். 
ஆன்மாவிற்குப் பழக்கப் பட்ட காட்சியை terrestrial mirageகளாய் அதன் முன் உருவாக்கி, அதற்கு ஒரு Familiar உணர்வை ஏற்டுத்தி ஆறுதல் படுத்துகிறது அங்கிருக்கும் சக்தி என்கிறார் அவர்

நம்முடைய பூவுலக நினைவுகள் நமக்கு என்றும் மறப்பதில்லை. 

முதலில் தோன்றும் இவ்வேறுபட்ட காட்சிகள், ஆன்மாக்கள் மேலே செல்லச் செல்லக் குறைந்து, பின்னர் அவற்றின் அனுபவங்கள் ஒன்றைப் போல இருக்கின்றன.

Image result for soul
மனிதன் A வின் ஆன்மா அதற்கு மேல் முன்னேறத் தயங்குகிறது. பூமியில் அவர் விட்டு வந்த மனைவி மக்களின் நினைவு அவரைப் பின்னுக்கு இழுக்கிறது. அந்நேரம் அவரது வழிகாட்டி அவரை நோக்கி வருவதை அவரால் உணர முடிகிறது. அதனிடம் தன்னைப் பாதியிலே இழுத்து வந்ததற்கான காரணத்தைக் கேட்டு கத்துகிறார் அவர். 

ஒரு ஆன்மா உலகில் முடிக்க வேண்டிய வேலை இன்னும் இருந்தால், அது முதன்முதலில் சந்திப்பது தன் வழிகாட்டியைத் தான். அவ்வழிகாட்டிகள் ஆன்மாக்களின் கோபத்தை எதிர் கொள்ள தயாராய் வருகிறார்கள்.

மனிதர் Aவின் வழிகாட்டி, அவர் உலகில் தன் காரியங்களைச் சிறப்பாகச் செய்தார் என்று சொல்லி அவரது ஆன்மாவைச் சாந்தப் படுத்த முயல்கிறது. 

பின்னர் பூமியின் காலத்தை முன்னோக்கி நகர்த்தி, பிற்காலத்தில் அவரது மனைவியும் பிள்ளைகளும் மனிதர் A இறந்ததை ஏற்றுக் கொண்டு தங்கள் வாழ்வில் முன்னேறுவதைக் காட்டுகிறது. 

இதனால் சமாதானமடைந்த மனிதர் A வின் ஆன்மா ஆவியுலகத்திற்குச் செல்லத் தயாராகிறது.

மனிதர் Aவின் ஆன்மாவிற்குச் செய்தது போல எல்லா வழிகாட்டிகளும் ஆவியுலக நுழைவாயிலிலேயே ஆன்மாக்களைச் சாந்தப் படுத்த முயல்வதில்லை.  அதற்கென்று தனிப்பட்ட இடங்கள் இருக்கின்றன. 

அதே போல எல்லா ஆன்மாக்களும் இவ்வளவு எளிதில் சமாதானமடைவதில்லை. ஆன்மாக்கள் தங்கள் துயரங்களை சுமக்கும் நேரம், அவர்களின் பூவுலக அனுபவங்களையும், இறந்த சூழ்நிலையையும் பொறுத்து மாறுபடுகிறது.

தொடரும் ....

வெள்ளி, 30 செப்டம்பர், 2016

கைப்பிடிச் சோறு

          பானையில் வெந்துக் கொண்டிருந்த இட்லியின் மணம் நாசியுள் நுழைந்து செரிமான உறுப்புகளை இதமாய் தடவி விட்டது. அத்தோடு சட்டினி தாளிக்கும் ஓசையும் வாசமும் சேர்ந்துக் கொள்ள தன்னிச்சையாய் எச்சில் சுரந்தது.  தாளிப்பில் இன்று உளுத்தம்பருப்பு சேர்க்கவில்லைப் போல! என்னயிருந்தாலும் நான்கு பருப்பைப் போட்டு தாளித்தால் வரும் மணமே அலாதி. கோதாவரிக்கு பசிக்கத் தொடங்கி விட்டது. தலையை வீட்டினுள்ளே நீட்டிப் பார்த்தாள். நீண்ட ரேழி, கூடம், சாப்பாட்டு அறை, இவற்றையெல்லாம் தாண்டி வீட்டின் புழக்கடை தெரிந்தது. அங்கே தென்னை மரத்தினடியில் தேய்ப்பதற்காக காத்துக் கிடந்தது பாத்திரக் குவியல். மேலாக இருந்த குண்டானை காகம் தன் அலகால் சுரண்டிக் கொண்டிருந்தது. அதற்குப் பின்னால் தெரிந்த நெருப்பவிந்த கல்லடுப்பில் கரிக் குண்டான் ஒரு பக்கமாய் சாய்ந்து கிடந்தது.
     இப்போது அநேகமாக கணேசன் தட்டின் முன் உட்கார்ந்திருப்பான். சியாமளா அவனுக்கு இட்லிகளைப் பறிமாரிக் கொண்டிருப்பாள். பெரியவள் தலையை விரித்துப் போட்டபடி அம்மா வந்து பின்னி விடுவதற்காய் காத்துக் கிடப்பாள். முன்பெல்லாம் கோதாவரி நேராக உள்ளே சென்று வருபவளாக இருந்தாள். அப்போது அவளுடைய கணவன் திடமாய் இருந்தார். நிலையான வருவாய் இருந்தது. இவள் உண்டது போக மிகுதியாய் இருந்த உணவை வாங்கிச் செல்வதற்கு ஆட்கள் இருந்தார்கள். எப்போது சாப்பாட்டிற்காக அடுத்தவரின் கையை எதிர்பார்க்கவேண்டி வந்ததோ அதிலிருந்து மற்றவர்களின் வீட்டின் வாசற்படியேற தயக்கமாகி விட்டது அவளுக்கு. கணவர் இறந்த பின் அவளால் தன்னுடைய தேவைகளைக் குறைத்துக் கொள்ள முடிந்தது. ஆனால் நடந்ததை  புரிந்துக் கொள்ளாமல் வயிறு அழிச்சாட்டியம் செய்தது.
     மணி எப்படியும் எட்டரைக்கு குறையாமல் இருக்கும். இன்று என்ன இவ்வளவு நேரம்! பள்ளிக் கூடத்திற்கு நேரமாகிவிட்டதே! ‘சியாமளா இன்று நேரம் கழித்து எழுந்தாளோ என்னவோ!’ என்று வாய்க்குள் முனகியபடியே திண்ணையில் அமர்ந்தாள் கோதாவரி.
     கோதாவரிக்கு இந்த கார்த்திகையோடு அறுபத்தி இரண்டு வயது முடிகிறது. இருந்த ஒரு பிள்ளை ஏழு வருடங்களுக்கு முன் விபத்தில் இறந்து போக தம்பி வீட்டிற்கு அருகிலிருந்த இடத்தில் குடிசை போட்டு தங்கிக் கொண்டாள். முதியோர் பென்சனும் தம்பி  கொடுக்கும் சொற்ப பணமும் அவளது வாழ்க்கையை ஓட்ட போதுமானதாய் இல்லை. கஷ்ட ஜீவனத்தோடு நில்லாமல் இப்போது உடம்பு வேறு படுத்தத் தொடங்கி விட்டது. கழுத்தெலும்பு வலிக்கிறது என்று அரசாங்க ஆஸ்பத்திரிக்குப் போனால் தலை மேல் கனமாய் வைத்துத் தூக்கக் கூடாது என்று சொல்லி மஞ்சள் நிறத்தில் மாத்திரை கொடுத்தாள் டாக்டரம்மா. அதுமட்டுமல்லாமல் அடிக்கடி நிதானம் தவறிப் போகிறது கோதாவரிக்கு.
     தம்பியின் மனைவி கங்கா இருந்தவரை நாத்தியைத் தேடி வந்து மூன்று வேலை உணவையும் கொடுத்து விட்டுப் போவாள். வீட்டுப் பெண்ணின் வயிறும் மனமும் வாடினால் தன் குடும்பம் வாடும் என்ற அவளது நம்பிக்கை இவளது வயிற்றுப் பாட்டை கவனித்துக் கொண்டது. நான்கு மாதங்களுக்கு முன் எதிர்பாரா விபத்தில் அவளும் போய் சேர்ந்து விட இப்போது தம்பியில் மருமகள் போடும் சோற்றை எதிர் பார்க்க வேண்டியதாய் இருக்கிறது. கங்கா போனதற்கு தான் போய் சேர்ந்திருந்தால் நன்றாய் இருந்திருக்கும் என்று அவ்வப்போது நினைத்துக் கொள்வாள் கோதாவரி.
     தெருவில் சைக்கிளை ஓட்டியபடி சென்ற பால்கார சேகர்  “என்ன அத்தை சாப்பிட்டாச்சா!” என்றான். “இல்லடாப்பா! எல்லாம் இனி தான்!” என்றாள். “! இன்னிக்கி என்ன வெரதமாஎன்றவாறு சைக்கிளை மிதித்தபடி சென்றுவிட்டான். ‘அதொன்னு தான் கொறையா இருக்கு!’ என்று நினைத்துக் கொண்டாள் கோதாவரி. நன்றாய் இருந்த காலத்தில் சோமவாரத்திலிருந்து சனிக்கிழமை வரை ஏதாவது ஒரு விரதத்தைக் கடைபிடிக்கவே செய்திருந்தாள். அதனால் ஏதாவது பலன் இருந்ததா என்று அவளுக்கு சந்தேகமாகவே இருந்தது.
     காலை வெயில் தெருவை இரக்கமின்றி சுட்டெரித்துக் கொண்டிருந்தது. பள்ளத்தினுள் அமைக்கப்பட்டிருந்த பைப்பில் இன்னமும் தண்ணீர் வந்துக் கொண்டிருந்தது. திலகாவும், வசந்தியும் குழிக்குள் வைக்கப்பட்டிருந்த அன்னகூடையிலிருந்து தண்ணீரைக் கோரி தங்கள் குடத்தை நிரப்பிக் கொண்டிருந்தார்கள். அவர்களைச் சுற்றி நிறைய குடங்கள் இருந்தன. பள்ளிக் கூடத்திற்கு செல்லும், ரெட்டை ஜடை போட்டு மடித்துக் கட்டிக் கொண்டிருந்த இரு பெண்கள் பேசியபடி சைக்கிளில் கடந்துச் சென்றார்கள். அந்த தெருவிற்கு சொந்தமான ராமு நாய் இங்குமங்கும் அலைந்தபடியிருந்தது.
     கோதாவரியின் மேல் வயிற்றிலிருந்து ஒரு பொறி போல கிளம்பிய பசி கொஞ்சம் கொஞ்சமாக வயிற்றை ஆக்கிரமித்தது. தன் அரூபக் கைகளைத் தொண்டை வழியாக நீட்டி தலையை கிடுக்கிப் போட்டு இழுக்கத் தொடங்கியது. உள்ளே கரண்டி கிண்ணத்தில் தட்டப்படும் ஓசை கேட்டது. சாப்பிடுகிறார்கள் போல! சற்று நடந்துவிட்டு வரலாம் என்று உட்கார்ந்திருந்த திண்ணையை விட்டு எழுந்தாள் கோதாவரி.
     மகன் இறந்து, வருமானம் குறைந்த பின் இரண்டு மூன்று மாதங்கள் இருப்பதை வைத்து ஓட்டினாள் அவள். ஒண்டி கட்டைக்கு என்ன வேண்டி கிடக்குது என்று நினைத்தாள். செயலாய் இருந்த சமயத்தில் ஞாயிறு ஆனால் ஆடோ கோழியோ குழம்பில் கொதிக்கும். அதோடு ஏதேனும் ஒரு மீன் காரமான மசாலையில் முக்கியெடுக்கப்பட்டு பொறிப்பதற்காய் காத்துக் கிடக்கும். மகனுக்கு அதெல்லாம் இல்லாமல் ஞாயிறு விடியாது.      
     முதலில் நாக்கு தற்போதைய தரித்திர நிலைக்கு அடங்கமாட்டேன் என்று அடம் பிடிக்கத் தான் செய்தது. அப்போதெல்லாம் சாப்பாட்டு நேரத்தில் யார் வீட்டிற்காவது சென்று பேசத் துவங்குவாள் கோதாவரி. அவர்களும் பேச்சு சுவாரஸ்யத்தில் அவளுக்கும் சாப்பிடுவதில் கொஞ்சம் கொடுப்பார்கள். ஆனால் இது நெடுநாள் நிலைக்கவில்லை. இவள் போகும் நேரம் ஆண்கள் உள்ளறையில் அமர்ந்து சாப்பிடத் தொடங்கினார்கள். இவளோடு பேசும் பெண் உணவைப் பற்றி முற்றிலும் மறந்து பேசிக்கொண்டிருப்பாள். அதற்கு மேல் அதிக நேரம் பேசிக் கொண்டிருந்தால் பட்டும் படாமலும் பதில் வரும். பிறகு அங்கிருக்க கோதாவரியாலும் முடியாது.
     தொடக்க காலத்தில் இதெல்லாம் மனதிற்கு வலி தருவதாய் இருந்தது. எத்தனை பேருக்கு மீந்துப் போன உணவையெல்லாம் கொடுத்திருக்கிறோம் என்று நினைத்துக் கொள்வாள். அந்த நேரம் அவள் பார்வை, மாட்டிற்கு போடப்படும் பழைய உணவைக் கூட ஆராயத் தவறாது. ஒருநாள் பழையதாய்ப் போனால் தான் என்ன இட்லி கெட்டா போய்விடும் என்று நினைக்கத் துவங்கியிருந்த காலம் அது. ஆனால் அவளது நேரமோ என்னவோ, அந்தத் தெரு மக்கள் பழைய உணவையும் வீணாக்காமல் வத்தல் பிழிந்தோ அல்லது வேறு ஏதாவதாக உருமாற்றியோ உண்பவர்களாக மாறிப் போயிருந்தார்கள். இப்போது சற்று பரவாயில்லை. அவள் நாக்கு ருசியான உணவு வகைகளைத் தேடுவதில்லை, இருந்தாலும் குறைந்த பட்சம் மூன்று வேளைகளாவது சாப்பிடத் தேவையாய் இருக்கிறது.
    நேரம், வயிற்றுத் தீயை முந்தவிட்டு, பொறுமையாய் நகர்ந்துக் கொண்டிருந்தது. ராமு நாயும் தானும் ஒன்றாகிவிட்டதாய் தோன்றியது கோதாவரிக்கு. அந்தத் தெருவில் சாப்பாட்டை எப்போதும் நினைத்துக் கொண்டே அலைபவர்கள், அதன் வாசனையால் தூண்டப்படுபவர்கள் தாங்கள் இருவரும் மட்டும் தான் என்று நினைத்துக் கொண்டாள் அவள்.
     பசி உக்கிரமாகத் துவங்கியது. இன்னும் பத்து நிமிடத்தில் கணேசன் வெளியே வந்து விடுவான். எப்படியும் சாப்பிட்டியா அத்தை என்று விசாரிப்பான். பிறகு சியாமளாவைப் பார்த்து, அத்தைக்கு நாலு இட்லி கொடு!’ என்பான். இட்லியின் சுவை இப்போதே நாவில் தெரிந்தது கோதாவரிக்கு.
     கங்கா இறந்த கொஞ்ச நாளைக்கு பழக்கத்தின் காரணமாக உணவு கோதாவரியைத் தேடி வந்து கொண்டு தான் இருந்தது. நாட்கள் செல்லச் செல்ல  தாமதமாய் வரத் தொடங்கியது. சிறு வயதிலிருந்தே அவளது வயிறு பசியைக் கண்டதில்லை. பிறந்த வீட்டிலும் சரி, புகுந்த வீட்டிலும் சரி, ஆண்கள் சாப்பிடுவதற்கு முன் உணவைத் தட்டில் போட்டு சாப்பிடும் சுதந்திரம் அவளுக்கு இருந்தது. பழக்கமற்ற பட்டினியால் வயிறு இடும் ஓலம் தாங்க முடியவில்லை. அதனால் தம்பியின் வீட்டுத் திண்ணையில் சென்று காத்திருக்கத் தொடங்கினாள் கோதாவரி.
     ‘நீங்க வேணா பாருங்க! சாப்பிடற நேரத்துக்கு கரெக்டா வந்துடுவாங்கஎன்று சியாமளா சொன்னதாய் அமுதா ஒருமுறை சொன்ன போது நாண்டுக் கொள்ளலாம் போல தான் இருந்தது அவளுக்கு. ஆனால் அதற்கு தைரியம் வரவில்லை. அந்த நேரம், மறுபடி அந்த வீட்டு வாசலை மிதிக்கக் கூடாது என்ற வைராக்கியமெல்லாம் கூட எழுந்தது. அதெல்லாம் அடுத்த சாப்பாட்டு வேளை வரை தான். பிறகு சியாமளா போடும் கைப்பிடி சோற்றை எதிர்பார்த்து அவளது ஐம்புலன்களும் தவமிருக்கத் தொடங்கிவிட்டன.
     தன் குடிசைக்குச் சென்று ஒரு செம்பு தண்ணீரைக் குடித்து விட்டு வெளியே வந்தாள் கோதாவரி. காற்றில் மிதந்த படி வந்த ஒரு பிஸ்கட் பாக்கெட் முள் வேலியில் சிக்கியிருந்தது. அதை விடுவித்து உள்ளே பார்த்துவிட்டு மறுபடி காற்றின் கைகளில் கொடுத்துவிட்டு தெருவிற்கு வந்தாள்.
     இப்போது திலகா குடத்தை சுமந்தபடி தன் வீட்டிற்குச் சென்றுக் கொண்டிருந்தாள். கிண்ணத்தில் இட்லியையோ எதையோ ஊட்டியபடி, குழந்தைக்கு ராமுவை வேடிக்கைக் காட்டிக் கொண்டிருந்தாள் சந்திரா. ‘இதோ பாரு... ஜூ, ஜூ, ஜூபாப்பா சாப்பிடலைன்னா நீ மொத்தத்தையும் சாப்பிட்டுடு,’ என்ற கையிலிருக்கும் உணவை போட்டுவிடுவது போல பாவனை காட்டினாள். அவள் கையிலிருந்து விழப்போகும் உணவுக்காக கண்களில் உயிரைத் தேக்கியபடி ராமுவும், அப்படி விழுந்தால் அதை ராமு உண்ணுவதைப் பார்க்க குழந்தையும், ஆவலோடு காத்துக் கொண்டிருந்தார்கள். கோதாவரியைப் பார்த்ததும் கைகளால் கிண்ணத்தை மறைத்துக் கொண்டு எதிர்புறம் திரும்பிக் கொண்டாள் சந்திரா. ராமுவும் இப்போது அந்தப் பக்கம் மூச்சிரைக்க ஓடிச் சென்று தரை சேரப் போகும் இட்லிக்காக மூச்சிரைக்க தவமிருக்கத் தொடங்கியது.
     கேட் திறக்கும் சத்தம் கேட்ட கோதாவரிக்கு பக்கென்றானது. நேரமாகிவிட்டதோ! கணேசன் கிளம்பிவிட்டான் போல. இந்நேரம் திண்ணையில் இருந்திருந்தால் கண்டிப்பாய் கேட்டிருப்பான். அதுவும் இயற்கையாய் இருந்திருக்கும். இப்போது போனால் சாப்பாட்டுக்கு வந்தது போல தான் இருக்கும். ஆனாலும் மான ரோஷமெல்லாம் பாத்து ஒரு வேளை உணவை இழக்க  அவள் வயிறு தயாராக இல்லை. சற்றே வேகமாய் நடையை எட்டிப் போட்டாள்.
     வண்டியை வெளியே எடுத்துக் கொண்டிருந்தான் கணேசன். இவளைப் பார்த்ததும் பின்பக்கம் திரும்பி மகளின் ‘டை’யை சரியாக்க முற்பட்டாள் சியாமளா. வரப்போகும் வார்த்தைகளைப் பிடித்துக் கொள்ள மூச்சை உள்ளடக்கி, காதுகளைக் கூர்மையாக்கிக் கொண்டாள் கோதாவரி. பெண்ணை வண்டியின் பின்னால் உட்கார வைத்து விட்டு வண்டியைக் கிளப்பிய கணேசன், ‘அத்தே! சாப்பிட்டுட்டு போங்கஎன்றான். அந்த சொற்கள் குளிர்ச்சியாய் செவி வழியே உள்ளே இறங்கி  நாவின் எச்சில் சுரப்பிகளை அவிழ்த்து விட்டது. நிச்சயமாகி விட்ட இந்த வேளையின் உணவு மற்ற எதையும் நினைக்க விட வில்லை. வயிறு பழக்கி வைத்த நாய் போல கர்ர்ர் என்றது. இன்னும் சற்று நேரத்தில் தனக்காக வரப்போகும் இட்லியைப் பற்றிய கனவுகளுடன் காத்திருக்கத் தொடங்கினாள் கோதாவரி. குழந்தையைச் சுற்றிப் போடப்பட்ட கடைசி வாய் உணவை வேகமாய் விழுங்கிக் கொண்டிருந்தது ராமு.
(19 செப்டம்பர் 2016,  திண்ணை) ஞாயிறு, 4 செப்டம்பர், 2016

அவளுக்கென்று ஒரு தினம்     பெரு விரைவு ரயிலில் பயணித்துக் கொண்டிருந்த போது  மகளிர் தின வாழ்த்துகளைச் சொல்லி தொலைபேசிக்கு வந்த அந்த தகவல் தாரிணியின் எண்ணங்களைச் சட்டென பிடித்து நிறுத்தியது. மனதிற்கு திருப்தியாய் ஒரு தினத்தைக் கொண்டாடி எத்தனை வருடங்கள் ஆகிறது! இப்போது வரும் விழாக்களெல்லாம் பலகாரங்கள் செய்வதிலும், அடுத்தவரைத் திருப்தி படுத்துவதிலுமே கழிந்து விடுகின்றன. தனக்கே தனக்கென்று ஒரு வேலையைச் செய்து எத்தனை வருடங்கள் ஆகிவிட்டன!

     இன்றைய தினத்தைக் கொண்டாட வேண்டும் என்று அவளது மனம் சொன்னது. எப்படி என்பதையும் அதுவே முடிவு செய்து கொண்டது. இன்று அவளுக்குப் பிடித்த வேலைகளை மட்டுமே செய்வது! அதாவது இந்த ஏழு மணி இருபத்தியாறு நிமிடம் இரண்டு நொடி முதல் மாலை ஆறு மணி வரை அவளுக்கே அவளுக்கான நேரம். ஒரு வினாடியைக் கூட வீணாக்காமல் முழுவதும் தனக்காகவே வாழ்வது என்று முடிவு செய்து கொண்டாள்.
    
     முதலில் தான் அவசர விடுப்பில் செல்வதாக அலுவலகத்திற்கு தெரிவித்தாள். பின்னர் தொலை பேசியை ஏரோப்பிளேன் மோடில் வைத்து,  பையினுள்ளே இருந்த சிறிய தடுப்பிற்குள் போட்டாள். இதோடு இவ்வுலகத்துடனான தொடர்பு அறுந்தது என்று நினைக்கையில் சந்தோஷமாய் இருந்தது அவளுக்கு.
    
     சுற்றியிருந்த  மனிதர்களை நோக்கி தன் கவனத்தைத் திருப்பினாள். அவளுக்குப் பக்கத்தில் உடார்ந்திருந்த மாணவன் புத்தகத்திற்குள் தலையை புதைத்துக் கொண்டிருந்தான். அன்று ஏதேனும் ப்ரீட்சை இருக்கக் கூடும். ரயிலில் கிட்டத்தட்ட பாதிக்கும் மேற்பட்டோர் காதில் ஹெட் போன்களை மாட்டிக் கொண்டு பாட்டு கேட்டுக் கொண்டோ அல்லது தொலைபேசியை விரல்களால் தடவியபடியோ இருந்தார்கள். கதவருகே நின்றுக் கொண்டிருந்த ஆடவன் சத்தமாய் சீன மொழியில் பேசியபடி இருந்தான்.   அனைவரின் செயல்பாடுகளிலும் மறைமுகமாய் ஒரு அவசரம் தெரிந்தது. அவர்களிலிருந்து தான் வேறுபட்டவள் என்று தோன்றியது தாரிணிக்கு. அங்கிருந்த அனைவரும் ஒரு இலக்கை நோக்கி பயணித்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் அவளுக்கு அப்படியொன்று இப்போதைக்கு இல்லை. முக்கியமாய் அவள் அலுவலகத்திற்குச் செல்ல வேண்டியது இல்லை. நேரமாகிவிட்டது என்று விரையத் தேவையில்லை. ஆர்சர்டில் இறக்கிய உடன் பேருந்து வரவேண்டுமே என்று கடவுளிடம் வேண்டத் தேவையில்லை. பேருந்து வாகன நெருக்கடியில் மாட்டாமல் செல்ல வேண்டுமே என்று பயப்படத் தேவையில்லை. தன்னைப் பிணைத்திருந்த தளைகள் அனைத்தையும் அறுத்துவிட்டதாகவும் தான் காற்றில் மிதப்பதாகவும் கற்பனை செய்துக்கொண்டாள்.
    
     இப்படி இருந்து எவ்வளவு நாட்கள் ஆகிவிட்டன. இலக்கியா தொடக்கப்பள்ளி செல்லும் வரை அவளைப் பார்த்துக் கொள்வதற்காக வேலையை விட்டிருந்தாள். அப்போது இது போன்ற அவசரங்கள் இல்லாமல் பொறுமையாய் வேலைகளைச் செய்ய முடிந்தது அவளால். வீட்டிலிருந்து பிள்ளையைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்ற திருப்தி இருந்தாலும், அப்போது நிம்மதியாய்  இருந்தோமா என்று யோசித்துப் பார்த்தாள். காலை எழுந்து பிரபு வேலைக்குச் செல்வதற்குள் சமைக்க வேண்டும். செலவுகளைக் குறைக்க வேண்டும் என்பதால் அவன் வீட்டிலிருந்து சாப்பாடு எடுத்துச் செல்பவனாய் இருந்தான். அப்போது அவளுக்கு இப்போதிருக்கும் பொருளாதாரச் சுதந்திரம் இருக்கவில்லை. வீட்டுச் செலவிற்கென்று குறிப்பிட்ட தொகையை அவளுக்கு பிரபு கொடுத்து வந்தாலும், அவளுக்கு விருப்பமான சட்டையையோ, செருப்பையோ வாங்க அவள் பல முறை யோசிக்க வேண்டியிருந்தது. அவனிடம் அனுமதி கேட்க வேண்டியிருந்தது.

     இப்போதும் இவள் நினைத்தபடியெல்லாம் சம்பளத்தை செலவு செய்ய முடியாது தான். சென்ற வருடம் தாரிணியின் அப்பாவிற்கு உடம்புக்கு முடியவில்லை. அவளது வீட்டில் பண நெருக்கடி ஏற்பட்டிருந்த நேரம், கொடுத்து உதவலாம் என்று சொன்ன போது, அப்படி கொடுக்கும் பணத்தை திரும்பப் பெறுவது சிரமம் என்று சொல்லிவிட்டான் பிரபு. அந்த மாதம் முஸ்தஃபாவிற்குச் சென்று ஐந்தரை பவுனில் நெக்லஸ் வாங்கிய போது அவளுக்கு ஏற்பட்ட உறுத்தல் இப்போதும் அந்நகையைப் பார்த்தால் எழவே செய்கிறது. அவனது தாய்க்கு செலவு செய்வதில் அவனுக்கு இது போன்ற தடைகள் எதுவும் இருந்ததில்லை! இது நம்மவர்களின் பாரம்பரியம் என்று தோன்றியது தாரிணிக்கு. பிரபுவாவது பரவாயில்லை மாதமொரு முறை பணத்தை தாரிணியின் கையில் கொடுத்து வந்தான். அவளது தாய்க்கு கணவனிடம் ஒவ்வொரு செலவையும் சொல்லி பணம் கேட்டே செலவு செய்ய வேண்டியிருந்தது. அதற்கும் அவளது தாய் சரியான கணக்கைச் சொல்லியாக வேண்டும்!

     ரயில் ஆர்சர்டில் நின்ற போது, அதிலிருந்து இறங்காமல் மற்றவர்களைப் பார்த்துக் கொண்டிருப்பது அவளுக்குள் கிலேசத்தை ஏற்படுத்தியது. அவளுக்கு பழக்கமான ஒரு ரயில் நிலையத்தை அவள் பின்தள்ளி விட்டுப் போகிறாள். முதன்முறையாக அவளுக்கென்று சமுதாயம் ஏற்படுத்தி வைத்திருந்த விதிகளை மீறுகிறாள். மனம் சட்டென்று குறும்புத் தனம் செய்யப் போகும் ஒரு சிறுமியைப் போல உற்சாகம் கொண்டது. தான் இப்படி வேலைக்கு விடுப்பு எடுத்துவிட்டு ஊர் சுற்றுவது தன் கணவனுக்குத் தெரிந்தால் என்னவாகும்! அவனது அதிர்ச்சியைக் கற்பனை செய்து பார்க்கும் போது சந்தோஷமாய் இருந்தது. அவன் நினைத்தாற் போல தன் நண்பர்களுடன் வெளியே சென்று விட்டு வருவதெல்லாம் கணக்கில்லை. ஆனால் பெண்கள் தன் ஓய்வு நேரத்தைக் கூட குடும்பத்திற்காகவே செலவு செய்ய வேண்டும் என்ற எண்ணம் கொண்டவன் அவன்.
    
     தாரிணி அப்படியெல்லாம் வளர்ந்தவள் இல்லை. அவளது அப்பா, மனைவியின் மீது கட்டுப்பாடுகளைச் சுமத்தினாலும், அவள் மீது அன்பு செலுத்தினார். திருமணம் வரை மகளின் விருப்பங்களுக்கு முக்கியத்துவம் தரும் தந்தையாகவே இருந்தார். விடுமுறையின் போது தோழிகளோடு வெளியே சென்று வருவதற்கெல்லாம் அனுமதி பெறும் அவசியமே அவளுக்கு இருந்ததில்லை. எங்கே போகிறாள் என்ற தகவலைத் தெரிவிப்பது மட்டுமே போதுமானதாய் இருந்தது. மனைவிக்கு கட்டுப்பாடுகளை விதிக்கும் ஆண்கள் மகளிடம் குழைந்து போய்விடுவதும் வழி வழியாய் வருவது போல என்று நினைத்துப் புன்னகைத்துக் கொண்டாள் தாரிணி. அதே பழக்கத்தில் திருமணமான புதிதில் வேலைக்கு மட்டம் போட்டுவிட்டு தோழியின் பிறந்தநாளைக் கொண்டாட வெளியே சென்று விட்டாள் தாரிணி. மாலை அதைச் சாதாரணமாய் பிரபுவிடம் தெரிவித்த போது திகைத்துப் போய்விட்டான். இரண்டு நாட்களுக்கு அவளுடம் முகம் கொடுத்தே பேசவில்லை. மூன்றாவது நாள் தாயிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்த போது தான் தனது வீட்டிற்கு அழைத்து அதைப் பற்றி பேசியிருக்கிறான் என்று தெரிந்தது அவளுக்கு. அருகிலேயே இருக்கும் அவளோடு பேசியிருந்தால் சுலபமாய் தீர்ந்து போயிருக்கக் கூடிய ஒரு விஷயம், அவனது நடவடிக்கையால், மனதில் ஆழமான கோட்டைக் கிழித்து விட்டது. தான் கற்பனை செய்து வைத்திருந்த வாழ்க்கையிலிருந்து நிஜ வாழ்கை முற்றிலும் வேறுபட்டது என்ற புரிதல் அவளுக்கு ஏற்பட்டது அன்று தான்.

     சிட்டி ஹால் எம்.ஆர்.டி நிலையத்தில் இறங்கி வெளியே வந்தாள் தாரிணி. நன்றாய் உடுத்திக் கொண்டிருந்த மக்கள் கூட்டம் கூட்டமாக விரைந்தபடி இருந்தார்கள். கட்டிடத்திற்கு மேலே தெரிந்த மிகப் பெரிய திரையில் தோன்றிய விளம்பரத்தைச் சற்று நேரம் பார்த்தபடி இருந்தாள். திடீரென்று அவளுக்கு ஒரு பெரிய உணவகத்தில் தனியே அமர்ந்து இதுவரை சாப்பிடாத உணவை உட்கொண்டு தன்னுடைய இந்த  தினத்தைக் கொண்டாட வேண்டும் என்று தோன்றியது.
    
     எதிரே தெரிந்த கேப்பிட்டல் ப்ளாஸாவிற்குள் நுழைந்தாள். ஒவ்வொரு கடையையும் மனதிற்குள் ஆராய்ந்து ஒரு ஜப்பானிய உணவகத்தைத் தேர்ந்தெடுத்தாள். மெனுவில் இருந்த அன்னிய உணவு வகைகளை சிரமப்பட்டு எழுத்துக் கூட்டிப் பார்த்து, அன்கோ நாபே என்று அவளால் படிக்கப்பட்ட உணவை கொண்டு வரும் படி  செய்தாள். ஈரல், மீன் மற்றும் காய்கறிகளைக் கொண்டு செய்யப்பட்ட அந்த உணவு நாவிற்குப் பழகப்படாததாய் இருந்தாலும், அப்போதிருந்த மனநிலையில் ருசியாய் இருந்தது. நூற்றி இருபது வெள்ளிகள் கட்டி விட்டு வெளியே வந்த போது மனம் திருப்தியாய் இருந்தது. நிச்சயம் பிரபு உணவிற்கு இவ்வளவு செலவு செய்ய மாட்டான். என்றோவொரு நாள் இது கூட செய்யவில்லை என்றால் எப்படியென்று நினைத்துக் கொண்டாள்.

     இப்போது அவளுக்கு தனியே அமர்ந்து  கடலைப் பார்க்க வேண்டும் என்று தோன்றியது. மறுபடி ரயில் நிலையத்திற்குள் நுழைந்து பாசிர் ரிஸ் நோக்கி பயணத்தைத் தொடர்ந்தாள். இப்படி மனம் போன போக்கில் திரிவதில் கூட  சுகம் இருப்பதை அவளால் உணர முடிந்தது.

     தாரிணி எங்கே செல்வதாக இருந்தாலும் பிரபு அவளுடன் வருவதை விரும்புவான், அது அவளது தாய் வீடாக இருந்தாலும் சரி! இருவரும் சென்றால் கூட, அங்கு செல்ல  தகுந்த காரணம் இருக்க வேண்டும். அவனுக்கு நேரம் ஒழிய வேண்டும். தனியாக தன் தாயுடன் நேரில் சில வார்த்தைகள் பேசலாம் என்றால் கூட தாரிணியால் முடியாது! அவனுடனே சென்று அவனுடனே திரும்பி விட வேண்டும். அதனால் அவள் தன் பயணங்களை வெகுவாக குறைத்துக் கொண்டாள். அவள் தாய் வீட்டிற்குச் சென்றே மாதக் கணக்காகி விட்டது.

     பாசிர் ரிஸில் இறங்கி  பேருந்தைப் பிடித்து கடலை அடைந்த போது மணி ஒன்றை நெருங்கியிருந்தது. கடல் காற்று இதமாய் வீசிக் கொண்டிருந்தது. அந்த நேரத்திலும் கடலை  ரசிக்க வந்திருந்த  சிலரை அவளால் பார்க்க முடிந்தது. அங்கிருந்த மரத்தின் நிழலில் இருந்த இருக்கையில் முகத்தை மூடிக் கொண்டு ஒரு வயதானவர் படுத்திருந்தார். அவருக்கு சற்று தள்ளியிருந்த குப்பைத் தொட்டிக்கு அருகே பாதி உணவை மட்டும் சாப்பிட்டு விட்டு பொட்டலத்தோடு யாரோ எறிந்திருந்தார்கள். அதிலிருந்த சோற்றை புறாக்கள் இறைத்து கொத்திக் கொண்டிருந்தன. பூனையொன்று தன் நிழலுடன் சேர்ந்து, எதைப் பற்றிய கவலையுமின்றி மெல்ல அவளைக் கடந்து சென்றது.
    
     அவள் நிதானமாய் கடலை நோக்கி நடந்தாள். காற்று ஏற்படுத்திய சலனத்தில் கடல் நீர் அசைந்தாடியபடி இருந்தது. அவளுக்கு கடலை மிகவும் பிடிக்கும். தனியே அமர்ந்து கடலை ரசித்து நிறைய நாட்கள் ஆகியிருந்தன. சிறிது நேரம் காற்சட்டை நனைய கடலுக்குள் நின்றாள். தூரத்தில் தெரிந்த கப்பல்களை எண்ணிப் பார்த்தாள். ஆறு கப்பல்கள் மிதந்துக் கொண்டிருந்தன.
கொஞ்சம் நேரம் ஈர மணலில் அமர்ந்தாள். மணல் வீடு கட்டி, சுரங்கப்பாதை அமைத்தாள். அதன் பக்கத்தில் தன் பெயரை விரலால் எழுதினாள். இலக்கியா இதையெல்லாம் ரசிப்பாள் என்று தோன்றியது அவளுக்கு. இன்னொரு நாள் அவளையும் பிரபுவோடு சேர்த்து அழைத்து வரவேண்டும் என்று நினைத்துக் கொண்டாள்.
    
     கிட்டத்தட்ட மூன்று மணியான போது மண்ணை உதறிக் கொண்டு கிளம்பினாள். ஏதாவது ஒரு நூலகத்திற்குச் செல்ல வேண்டும் என்று எண்ணினாள். இப்போது எதிர் எல்லையை நோக்கி பயணிக்க வேண்டும் என்று தோன்றியது அவளுக்கு. அதனால் ஜீராங் ஈஸ்ட் நூலகத்திற்கு பயணித்தாள். அவளுக்கு திருமணத்திற்கு முன் ஓரளவு புத்தகங்கள் படிப்பதில் விருப்பம் உண்டு. திருமணத்திற்குப் பின், புத்தகங்கள் புரட்சி எண்ணத்தை புகுத்தி, பெண்களின் மனதைக் கெடுப்பவை என்ற பிரபுவின் நம்பிக்கையை அவளும் பின்பற்ற வேண்டிய அவசியம் ஏற்பட்டது. அதன் பிறகு தான் அவளுக்கு புத்தகங்களின் மீது காதலே பிறந்தது. தன் வாழ்கையை பிரபு நிர்மாணிப்பதாய் தோன்றத் துவங்கிய கணம் வரை நூலகங்களைப் பற்றி அதிகம் கவலைப்பட்டிராத அவள், புத்தகங்களை இரவல் பெற்று அவன் இல்லாத நேரத்திலெல்லாம் படிக்க தலைபட்டாள். நிஜ உலகை விட்டுத் தப்பிச் செல்லும்  புஷ்பக விமானக்களாய் அமைந்தன புத்தகங்கள்.

     தன் மனதிற்குப் பிடித்ததாய் தோன்றிய புத்தகங்களையெல்லாம்  எடுத்து வைத்துக் கொண்டு நாற்காலியில் அமர்ந்தாள் தாரிணி. அதிலிருந்து ஒரு நாவலை எடுத்து வாசிக்கத் துவங்கினாள். குளிரூட்டப் பட்ட அறையில் ரமணிச்சந்திரனைப் படிப்பது சந்தோஷமாய் இருந்தது. அந்த கதையின் கதாநாயகியாக தன்னை கற்பனை செய்துக் கொண்டாள். அவளைத் தவறாய் நினைத்து நாயகன் துன்புறுத்திய போது அழுதாள். பின்னர் உண்மை தெரிந்து நாயகன் மன்னிப்பு கேட்ட போது அவளுக்கு சந்தோஷமாக இருந்தது. அப்புத்தகத்தை படித்து முடித்த போது, ஒரு ஜென்மத்து வாழ்கையை வாழ்ந்து முடித்த திருப்தியில் அவள் நெஞ்சு நிறைந்திருந்தது. அந்த நிறைவு முகத்தில், தெரிய தொலைபேசியை உயிரூட்டி ஒரு செல்ஃபி எடுத்துக் கொண்டாள்.
    

     சரியாய் ஆறு மணிக்கு நூலகத்தை விட்டு வெளியே வந்த போது, இந்த நாளின் இனிய நினைவுகளோடு மற்ற நாட்களைக் கடந்து விட முடியும் என்று நினைத்துக் கொண்டாள் அவள். தன் ரகசிய தினத்தின் நினைவாக, ரயில் நிலையத்திற்கு அருகே டிஷ்யூ விற்றுக் கொண்டிருந்த பாட்டிக்கு ஐம்பது வெள்ளியைப் போட்டாள். பின்னர் ஏரோப்ளேன் மோடிலிருந்து தொலைபேசியை விடுவித்து, அன்று கணவனிடமிருந்தும், தாயிடமிருந்தும், தோழியிடமிருந்தும் வந்திருந்த தகவல்களை ஆராய்ந்த போது அவளுக்கு துக்கமாய் இருந்தது.

(செராங்கூன் டைம்ஸ், ஏப்ரல் 2016)

செவ்வாய், 5 ஏப்ரல், 2016

அவ்வுலகமும் ஆன்மாக்களும் - 5

சென்ற பதிவில் சொன்ன ஆவியுலகின் பகுதிகள் பற்றிய
நண்பர்களின் சந்தேகங்கள் எனக்கு ஆச்சர்யமளிக்கவில்லை.
சொல்லப் போனால் எனக்குள்ளும் அதைப் பற்றிய ஒரு நம்பிக்கையின்மை இருக்கவே செய்கிறது.
அது என் எழுத்தில் தெறித்திருக்கவும் வாய்ப்பிருக்கிறது.
இருந்தும் அப்பகுதியைப் பற்றியும் பேசிவிட வேண்டும் என்ற நோக்கத்திலே எழுதியது தான் அது.
இதைப் படிக்கும் மற்றவர்களுக்கும் இந்த கேள்விகள் எழலாம்!
அதனால் ஆவியுலகம் பற்றிய கேள்விகளையும்,
அதற்கு பதிலாக அதைப் பற்றிய என் கருத்தையும் இங்கே பதிகிறேன்.

முதல் கேள்வி:
ஆவியுலகத்தைப் பற்றி எப்படி கண்டுபிடித்தார்கள்?

ஆவியுலகைப் பற்றி நான் பேசும் கருத்துகள், auto writing மூலம் (ஆவிகள் நேரடியாய் மீடியத்தின் மூலம் எழுதுவது ) எழுதப்பட்ட புத்தகத்தில் (Laws of the spirit world) படித்தது. Oujia board போல auto writingம் சாத்தியம் என்று நம்புகிறேன்.
(இதைப் பற்றி ஆர்.கே நாராயணன் தன் ‘The English teacher’ நாவலில் எழுதியிருக்கிறார். அது அவருடைய அனுபவம் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.)
இரண்டாம் கேள்வி:
இதெல்லாம் புளுகாய் இருக்க வாய்ப்புள்ளதா?
புளுகு என்பதை விட, இறக்கும் நேரம் நம் மனம் தனக்குத் தானே ஏற்படுத்திக் கொள்ளும் மாய பிம்பமோ என்ற சந்தேகம் உண்டு எனக்கு.
இருந்தும் எனக்கு, வாழ்க்கையை இந்த உலகத்திலேயே முடித்துக் கொள்ள விருப்பமில்லை. 
நேசிப்பவர்களோடு என்றென்றும் தொடர்பிலிருக்கவே விரும்புகிறேன்.
கேட்டவர்களுக்கு நன்றி!
சரி! இனி ஆவியுலகைப் பற்றி….
நம் ஆன்மாவின் குறிக்கோள் கடந்த பதிவில் சொன்ன ஏழாம் உலகை அடைவதாக இருக்கிறது.
அதற்கு ஆன்மா பல்வேறு விதங்களில் தன்னைப் பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டி இருக்கிறது.
அந்த பக்குவத்தைப் பெறுவதற்காக ஆன்மா பூவுலகில் பிறப்பெடுத்து நிறைய அனுபவங்களைப் பெறுகிறது.
ஆவியுலகிலிருந்தபடியே ஆன்மாவால் ஏழாம் உலகிற்கு முன்னேற முடியாதா என்று கேட்டால் முடியும் என்று தான் சொல்கிறது, laws of the spirit world.
ஆனால் அதற்கு மிக நீண்ட காலம் எடுக்கிறது.
பூலோகத்திற்கு பிறப்பெடுத்து வந்தோம் என்றால் மிகக் குறுகிய காலத்தில் அவ்வுலகை அடைய முடியும்.
இதற்குக் காரணம் இந்த பூவுலகம் நன்மை மற்றும் தீமைகளின் கலவையாக இருப்பது, மற்றும்
இங்கே வழுக்கி கீழே செல்லக் கூடிய வாய்ப்புகள் அதிகம்.
அதையும் தாண்டி பக்குவப்படும் ஒரு ஆன்மா சுலபமாய் அடுத்த நிலைக்குச் சென்று விடுகிறது.

இதிலிருக்கும் சுவாரஸ்யம் என்னவென்றால்,
தான் எங்கே, எப்படி பிறக்க வேண்டும் என்பதை  நம் ஆன்மா தான் முடிவு செய்கிறது.
இவ்வுலக மொழியில் சொல்வதென்றால், ஒரு குழந்தை தான், தன் தாயை, குடும்பத்தைத் தேர்ந்தெடுக்கிறது.
இன்னும் சற்று உள்ளே சென்று இதைப் பார்ப்போம்.
ஆவியுலகில் ஆன்மாக்கள் சிறு சிறு குழுக்களாகப் பிரிந்திருக்கின்றன.
ஒவ்வொரு ஆன்மாக் குழுவும் தங்களுக்கென்று ஒரு பொதுத் தன்மையைக் கொண்டிருக்கிறது. அதாவது ஒத்த ரசனைகளை, இயல்புகளை அவை பெற்றிருப்பதாய் சொல்லலாம்.
ஒவ்வொரு குழுவிற்கும், சற்று மேல்நிலையில் இருக்கும் ஆன்மா ஒன்று தலைமை பொறுப்பேற்றுக் கொள்கிறது, டீம் லீடரைப் போல.

பூவுலகில் பிறப்பெடுப்பதற்கு முன்,
ஒரு ஆன்மா தான் எவ்வெவ்வகைகளில் முன்னேற வேண்டும் என்பதை தலைமை ஆன்மாவுடன் ஆராய்கிறது.
அவ்வான்மாவிற்கு முன்னால், பூவுலகில் வாழ்ந்துக் கொண்டிருக்கும் சில குடும்பங்களின் சூழல்கள் முன்வைக்கப் படுகின்றன.
அக்குடும்பத்தில் பிறந்தால் அவ்வான்மா  ஏற்கக் கூடிய சவால்களும் அதற்கு உணர்த்தப் படுகிறது.
சீக்கிரம் மேலே சென்று விட வேண்டும் என்ற ஆர்வக் கோளாரில், அதிக சவால்களை தேர்ந்தெடுக்கும் ஆன்மாக்களுடன் தலைமை ஆன்மா கலந்தாலோசிக்கிறது (like counselling).
சில சவால்களை அதனால் தாங்க முடியாமல் போய், அதன் காரணமாக தம் குறிக்கோளிலிருந்து தவறி, கீழ் நிலைக்குச் செல்லக் கூடிய சாத்தயம் இருப்பது உணர்த்தப் படுகிறது.
எவ்வளவு ஆலோசித்தாலும், கடைசியில்,
தான் ஏற்கப் போகும் பொறுப்புகளை, அதனால் ஏற்படப் போகும் சிரமங்களை, தன் குடும்பத்தை, தன் தாயைத் தேர்ந்தெடுக்கும் உரிமை, அந்த ஆன்மாவிற்கு மட்டுமே இருக்கிறது.
சற்றே யோசித்துப் பாருங்கள்!
இந்த சிரமத்தை ஏற்றுக் கொண்டால் நீ மேல் நிலைக்கு செல்லும் வாய்ப்பு இருக்கிறது
என்று நமக்கு சொல்லப் பட்டிருந்தால்,
நாம் நம்முடைய இவ்வாழ்க்கைச் சிரமங்களைத் தேர்ந்தெடுத்திருப்போம் தானே! நீங்கள் எப்படியோ, நான் நிச்சயம் தேர்ந்தெடுத்திருப்பேன்.
அதனால்,
நமக்கு இப்போது ஏற்படும் சிரமங்களுக்கு, சிக்கல்களுக்கு, காரணம் நாம் தான், நம்முடைய தேர்ந்தெடுப்பு தான்.
இந்த எண்ணம் வாழ்க்கையின்  சிரமங்களைச் சுலபமாய் ஏற்றுக் கொள்ளும் மனநிலையைத் தருகிறது என்று தான் சொல்ல வேண்டும்.
இப்படி எண்ணும் போது வரும் சிரமங்களைக் கண்டு நமக்கு உற்சாகம் ஏற்படுகிறது.
இந்த உற்சாகம் அச்சிரமத்தை எளிதாய் கடந்து போக உதவி செய்கிறது.
இன்னொன்று,
நம் குழந்தை, நாம் தான் வேண்டும் என்று நம்மைத் தாயாய், தந்தையாய், தேர்ந்தெடுத்துப் பிறந்திருக்கிறது.
நம்முடைய பெற்றோரும் நம்முடைய தேர்ந்தெடுப்பே!
நம்முடன் கழியும் அவர்களுடைய பொழுதுகளை,
இனிமையானதாய் ஆக்குவது நம் கடமை தானே!
இதை புரிந்துக் கொண்டோமானால்,
அவர்கள் மேலிருக்கும் பாசம் அதிகரிப்பதை உணரலாம்.
இதை ஏற்றுக் கொள்ளும் போது
நம் உறவுகளின் நடத்தையை சுலபமாய் மன்னிக்க முடிகிறது.
இது தானே வாழ்க்கை…
ஆவியுலகப் பயணம் தொடரும் . . .


வெள்ளி, 18 மார்ச், 2016

அவ்வுலகமும் ஆன்மாக்களும் - 4
நம்முடையதைப் போல ஆவியுலகிலும் ஏழு உலகங்கள் இருக்கின்றன. (ஆவியண்டம் என்று சொல்ல வேண்டுமோ!) ஒவ்வொரு உலகிலும் பத்து நிலைகள் இருக்கின்றன.

ஒன்றாம் உலகில் இருக்கும் ஆன்மாக்கள் பக்குவப்படாத ஆன்மாக்கள். இந்த உலகம் சுத்தமாய் ஒளியே இல்லாத, பயங்கரமான குளிர் நிலவும் பகுதி என்று குறிப்பிடப்படுகிறது. இங்கிருக்கும் ஆன்மாக்கள் ஒன்றையொன்று வெறுப்பவையாக இருக்கின்றன.

இரண்டாம் உலகில் இருப்பவை ஒன்றை விடப் பரவாயில்லை ரகம். இந்த பகுதியும் மோசமான குளிர் கொண்ட இருளான பகுதியே. இங்கிருக்கும் ஆன்மாக்களும் ஒருவரையொருவர் தூற்றிக் கொள்ளும் தன்மை கொண்டவை.

மூன்றாம் உலகில் இருக்கும் ஆன்மாக்கள் இரண்டாவதை  விட சற்றே மேம்பட்டவை. இவ்வுலகம் கீழிருக்கும் இரண்டு உலகங்களை விட பரவாயில்லையே தவிர இதுவும் ஒளியற்ற பகுதி தான்.

முதல் மூன்று உலகில் இருந்து பூவுலகில் பிறப்பெடுத்திருக்கும் ஆன்மாக்களின் உள்ளுணர்வு, தாங்கள் இறந்த பின் எங்கே போகப்போகிறோம் என்பதை அறிந்தே இருக்கும். அதனால் அவை மரணத்தைக் கண்டால் பயப்படும் என்று சொல்லப்படுகிறது.

நான்காம் உலகம் கிட்டத்தட்ட நம் உலகைப் போன்றது. மனித ஆன்மாக்கள் இங்கிருந்து தான் தன் பயணத்தைத் துவங்குகின்றன.

ஐந்தாம் உலகத்தை சொர்கத்தின் நுழைவாயில் என்று சொல்லலாம். இங்கே வானம் சற்றே வெளிச்சம் கொண்டதாக இருக்கிறது. நமது பூவுலகைப் போலவே பல அழகிய இடங்களைக் கொண்டதாக இது இருக்கிறது. இங்கிருக்கும் ஆன்மாக்கள் உதவும் எண்ணம் கொண்டவையாக இருக்கின்றன.

ஆறாம் உலகம் பல வண்ணங்களைக் கொண்ட மிக அழகான ஒரு உலகம். இங்கிருக்கும் ஆன்மாக்கள் கிட்டத்தட்ட பக்குவமடைந்தவை.
மனதிற்குப் பிடித்த வேலைகளைச் செய்து கொண்டு, மற்றவர்களுக்கு உதவியவாறு சந்தோஷமாய் வாழ்பவை. இங்கிருந்து பூவுலகிற்கு வரும் ஆன்மாக்களின் உள்ளுணர்வு அவர்களை கீழ்ச்செயல்களைச் செய்யாமல் தடுத்துவிடுகிறது.

ஏழாம் உலகம் இருப்பதிலேயே உயர்வானது. இதன் அழகு உலகில் இருப்பவர்களால் கற்பனை செய்ய முடியாதது. இந்நிலையை அடைவதற்கு தான் அனைத்து ஆன்மாக்களும் முயற்சி செய்கின்றன.
இதற்குப் பிறகு என்ன இருக்கிறது என்பதை சாதாரண ஆன்மாக்களால் அறிய முடிவதில்லை
.
ஏழாம் உலகில் இருக்கும் ஆன்மாக்கள் மிகவும் பரிசுத்தமானவை. பூவுலகத்தில் பிறப்பெடுக்கும் போது அங்கே சிறு பாவத்தைச் செய்தாலும் ஐந்தாம் அல்லது ஆறாம் உலகிற்கு இறங்கி விடும் வாய்ப்பு இருக்கிறது.

ஆவியுலகத்திலேயே அடுத்த உலகிற்கு முன்னேறும் வழி கிடையாதா என்றால் இருக்கிறது. ஆனால் அது அதிக காலம் எடுக்ககூடியது. பூவுலகில் பிறப்பெடுத்து, அதில் பக்குவப்பட்டுத் திரும்பும் போது, மிக விரைவாக அடுத்த உலகிற்குச் சென்றுவிடும் வாய்ப்பு இருக்கிறது. அதற்காகவே பிறப்பைத் தேர்ந்தெடுக்கின்றன ஆன்மாக்கள்.
(நான் படித்ததில் மற்றொரு முக்கியமான புத்தகம் ‘laws of the spirit world’ என்று ஆட்டோ ரைட்டிங் மூலம் எழுதிய புத்தகம். அதிலிருந்தும் பல கருத்துகளை நான் இங்கே கையாண்டிருக்கிறேன்.)


சனி, 27 பிப்ரவரி, 2016

அவ்வுலகமும் ஆன்மாக்களும் -3

ஹிப்னாடிஸம் எப்படி வேலை செய்கிறது?
நம் மனதை மூன்று அடுக்குகளைக் கொண்ட வட்டங்களாக உருவகப்படுத்திக் கொள்ளுங்கள்.

 Image result for superconscious mind circle
(முதல் அடுக்கு – Conscious Mind
இரண்டாம் அடுக்கு- Subconscious mind
மூன்றாம் அடுக்கு- Superconscious mind or Soul)

அனைத்திற்கும் வெளியே இருக்கும் வட்டம் நாம் அன்றாடம் பயன்படுத்தும் சாதாரண மனதைக் ( conscious mind) குறிக்கிறது. இது இருப்பது Beta stateல்

அதற்குள் இருக்கும் இரண்டாம் வட்டம் நம் subconscious mind. இது இருப்பது alpha stateடில்.
இதில் தான் நம்முடைய இப்பிறவி நினைவுகளும் முற்பிறவி நினைவுகளும் புதைந்திருக்கின்றன.
நம்மை மிகவும் பாதித்த நிகழ்வுகள், பயங்கள் ஆகியனவும் இங்கே தான் பதிந்திருக்கின்றன.
 நமக்கு கனவுகள் வருவது இங்கு புதைந்திருக்கும் நினைவுகள், உணர்வுகள் மேலெழும்பி வருவதால் தான் என்று சொல்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.
சில சமயம் கனவுகளில் நாம், நம் காலத்திற்குச் சம்பந்தமில்லாத உடைகளுடன், மனிதர்களுடன், நமக்கு பரிட்சயமில்லாத ‘பழைய’ இடங்களில்  தோன்றக்கூடும்.
அவை நம் முற்பிறவி நினைவுகளாய் இருப்பதற்கு வாய்ப்பிருக்கிறது.

நம் மனதை alpha stateக்குக் கொண்டு செல்வதன் மூலம் இந்த Sub conscious mindஐ நம்மால் அணுக முடியும்.
பொதுவாய் தியானத்தின் மூலம் நம்மால் மனதை இந்நிலைக்குச் கொண்டு செல்ல முடியும்.
கற்பனை சக்தியைப் பயன்படுத்தும் எழுத்தாளர்கள், ஓவியர்கள் போன்றவர்கள் alpha stateல் இருந்துக் கொண்டு எழுதும் கதைகளோ, ஓவியங்களோ சிறந்தவையாக இருக்கின்றன.

இந்த இரு வட்டங்களுக்கு உள்ளே இருக்கும் மூன்றாவது வட்டம் தான் Super conscious mind. இது இருப்பது Theta stateல்.
இதை நம்முடைய soul என்றும் சொல்லலாம்.
நாம் யார் என்ற உண்மையான அடையாளம் இங்கே தான் இருக்கிறது. இதில் இரு பிறப்புகளுக்கு நடுவே நடந்த நிகழ்வுகளின் நினைவுகள் புதைந்திருக்கின்றன.
மனதை Theta stateக்குக் கொண்டு செல்வதன் மூலம் இந்த நினைவுகளை ஒருவரால் அணுக முடியும்.

மனிதர்கள் ஹிப்னாடிஸத்திற்கு உட்படுத்தி அவர்களின் மனதை beta stateடிலிருந்து,  Alpha stateக்கும் Theta stateக்கும் கொண்டு செல்ல முடியும்.
இதன் மூலம் அவர்களது subconscious மற்றும் super conscious mind களை விழிப்படைய வைக்க முடியும்.

இந்த கட்டுரையில் நான் சொல்லும் குறிப்புகள் எல்லாம் மனிதர்களை, இம்முறையில் முற்பிறவிகளுக்கு அழைத்துச் சென்று, அந்த பிறவியின் இறப்பை நினைவுபடுத்தி, அங்கே அவர்கள் கண்டதை வைத்து எழுதப்பட்டது.

அதே போல இங்கு எழுதப்படும் அனைத்து அனுபவங்களும் ஒருவருக்கே ஏற்பட்டது அல்ல.
Michael Newton என்ற ஆராய்ச்சியாளர் பலரை இது போல ஹிப்னாடிஸத்திற்கு ஆட்படுத்தினார்.
அப்போது ஒவ்வொருவராலும்,  சில நிகழ்வுகளை மட்டுமே தெளிவாய் நினைவில் கொண்டு வரமுடிந்தது. அதையெல்லாம் தொகுத்து, வரிசையாய் அடுக்கி எழுதப்பட்டது தான் Journey of the souls என்ற அவரது புத்தகம்.
அதனால் தூண்டப்பட்டு, அதை அடிப்படையாய் வைத்து, வேறு சில புத்தகங்களில், செய்திகளில் நான் படித்ததையும் வைத்து, நான் எழுதுவதே இக்கட்டுரை.

இப்போது ஆன்மாக்களிடம் வருவோம்! 
உடலை விட்டு ஆன்மா வெளிவந்ததும் ஆன்மாக்களால் ஒரு வித ரீங்காரச் சத்தத்தை கேட்க முடிகிறது.
மயக்க மருந்து கொடுக்கப்பட்ட சில நோயாளிகள் தங்களுக்கு இது போன்ற சத்தம் கேட்டதாய் சொல்லியிருக்கிறார்கள்.
இது போன்ற ஒரு சத்தம் விண்வெளியில் கேட்டதாய் நாஸா வெளியிட்ட ஒளிப்பதிவு நினைவுக்கு வருகிறது. அதன் லிங்க் கீழே

ஆம்ஸ்ட்ராங் முதன்முதலாய் இதைக் கேட்ட போது, இந்த சத்தம் மசூதியில் கேட்கும் பாங்கொலியைப் போல இருப்பதை உணர்ந்து இஸ்லாமிய மதத்திற்கு மாறிவிட்டதாகச் சொல்கிறார்கள். இதை வதந்தி என்கிறது விக்கிபீடியா.
இந்துக்கள் அதை ‘ஓம்’ ஒலி போல இருக்கிறது என்கிறார்கள்.
எனக்கு ப்ரம்மரீப் பிராணயாமம் செய்யும் போது எழும் சப்தம் போல இருக்கிறது.
ஒரு சமயம் கேட்கும் போது ‘காதல் ஓவியம் பாடும் காவியம்’ பாட்டிற்கு முன் வரும் கிருஸ்தவ தேவாலய கோரஸ் போலவும் கேட்கிறது.

மறுபடியும் ஆன்மாக்களுக்கு வருவோம்!
மரணத்திற்கு தயாராயில்லாத சில ஆன்மாக்கள் மட்டும் உலகத்தில் தன் வேலை இன்னும் முடிவடையவில்லை, என்று எண்ணி வருத்தமடைகின்றன. பொதுவாய் திடீர் விபத்தில் இறந்தவர்கள், இளவயதில் உயிரிழந்தவர்கள் போன்றவர்களின் ஆன்மா இதில் அடங்கும்.
மரணமடைந்த உடன் இவ்வகை ஆன்மாக்கள் பார்ப்பது இவர்களது வழிகாட்டியைத் தான். 
வழிகாட்டிகள் என்பவர்கள் உயர் நிலையிலிருக்கும் பக்குவமடைந்த ஆன்மாக்கள்.
வருத்தத்திலிருக்கும் புதிதாய் ஆன்மாவின் சீற்றங்களை இவ்வழிகாட்டிகளால் புரிந்துக் கொள்ள முடிகிறது.
புதிய ஆன்மாக்களை சமாதானப்படுத்தி அழைத்து வரும் வேலையை அவர்கள் ஏற்றுக் கொள்கிறார்கள்.

மற்றபடி பொதுவாய் இவ்வழிகாட்டிகளைப் சிறிது நேரத்திற்குப் பின் தான் பார்க்கின்றன ஆன்மாக்கள்.
உயிர் உடலைப் பிரிந்த சிறிது நேரத்தில், ஆன்மா குறிப்பிட்ட திசையில் உந்தப்பட்டு,  இருண்ட சுரங்கம் போன்ற பாதையில் பயணிக்கத் துவங்குகிறது.
சிலர் இறந்த உடனேயே தங்களுக்கு அந்த சுரங்கப் பாதைத் தெரிவதாகச் சொல்கிறார்கள்.
பலருக்கு சிறிது நேரம் கழித்தே இது புலப்படுகிறது.

இருண்ட சுரங்கப்பாதையைக் கடக்கும் வரைத்  தான் எங்கே செல்கிறோம், எப்படிப் பயணிக்கிறோம் என்ற குழப்பம் ஆன்மாவிற்கு இருக்கிறது.   
Image result for tunnel vision
அந்த சுரங்கப்பாதையின் தூர முடிவில் ஒரு ஒளி தெரிகிறது.
சுரங்கப் பாதையை விட்டு வெளியேறி அவ்வொளியை அடைந்ததும் ஆன்மாவினால் அமைதியை உணர முடிகிறது.
அங்கே தான் தங்கள் விருப்பதிற்குரிய உறவினர்களின், நண்பர்களின் ஆன்மாக்களை, வழிகாட்டிகளை அது சந்திக்கிறது.

                                   -ஆவியுலக பயணம் தொடரும்
(படங்கள் கூகுளிலிருந்து)