சனி, 27 பிப்ரவரி, 2016

அவ்வுலகமும் ஆன்மாக்களும் -3

ஹிப்னாடிஸம் எப்படி வேலை செய்கிறது?
நம் மனதை மூன்று அடுக்குகளைக் கொண்ட வட்டங்களாக உருவகப்படுத்திக் கொள்ளுங்கள்.

 Image result for superconscious mind circle
(முதல் அடுக்கு – Conscious Mind
இரண்டாம் அடுக்கு- Subconscious mind
மூன்றாம் அடுக்கு- Superconscious mind or Soul)

அனைத்திற்கும் வெளியே இருக்கும் வட்டம் நாம் அன்றாடம் பயன்படுத்தும் சாதாரண மனதைக் ( conscious mind) குறிக்கிறது. இது இருப்பது Beta stateல்

அதற்குள் இருக்கும் இரண்டாம் வட்டம் நம் subconscious mind. இது இருப்பது alpha stateடில்.
இதில் தான் நம்முடைய இப்பிறவி நினைவுகளும் முற்பிறவி நினைவுகளும் புதைந்திருக்கின்றன.
நம்மை மிகவும் பாதித்த நிகழ்வுகள், பயங்கள் ஆகியனவும் இங்கே தான் பதிந்திருக்கின்றன.
 நமக்கு கனவுகள் வருவது இங்கு புதைந்திருக்கும் நினைவுகள், உணர்வுகள் மேலெழும்பி வருவதால் தான் என்று சொல்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.
சில சமயம் கனவுகளில் நாம், நம் காலத்திற்குச் சம்பந்தமில்லாத உடைகளுடன், மனிதர்களுடன், நமக்கு பரிட்சயமில்லாத ‘பழைய’ இடங்களில்  தோன்றக்கூடும்.
அவை நம் முற்பிறவி நினைவுகளாய் இருப்பதற்கு வாய்ப்பிருக்கிறது.

நம் மனதை alpha stateக்குக் கொண்டு செல்வதன் மூலம் இந்த Sub conscious mindஐ நம்மால் அணுக முடியும்.
பொதுவாய் தியானத்தின் மூலம் நம்மால் மனதை இந்நிலைக்குச் கொண்டு செல்ல முடியும்.
கற்பனை சக்தியைப் பயன்படுத்தும் எழுத்தாளர்கள், ஓவியர்கள் போன்றவர்கள் alpha stateல் இருந்துக் கொண்டு எழுதும் கதைகளோ, ஓவியங்களோ சிறந்தவையாக இருக்கின்றன.

இந்த இரு வட்டங்களுக்கு உள்ளே இருக்கும் மூன்றாவது வட்டம் தான் Super conscious mind. இது இருப்பது Theta stateல்.
இதை நம்முடைய soul என்றும் சொல்லலாம்.
நாம் யார் என்ற உண்மையான அடையாளம் இங்கே தான் இருக்கிறது. இதில் இரு பிறப்புகளுக்கு நடுவே நடந்த நிகழ்வுகளின் நினைவுகள் புதைந்திருக்கின்றன.
மனதை Theta stateக்குக் கொண்டு செல்வதன் மூலம் இந்த நினைவுகளை ஒருவரால் அணுக முடியும்.

மனிதர்கள் ஹிப்னாடிஸத்திற்கு உட்படுத்தி அவர்களின் மனதை beta stateடிலிருந்து,  Alpha stateக்கும் Theta stateக்கும் கொண்டு செல்ல முடியும்.
இதன் மூலம் அவர்களது subconscious மற்றும் super conscious mind களை விழிப்படைய வைக்க முடியும்.

இந்த கட்டுரையில் நான் சொல்லும் குறிப்புகள் எல்லாம் மனிதர்களை, இம்முறையில் முற்பிறவிகளுக்கு அழைத்துச் சென்று, அந்த பிறவியின் இறப்பை நினைவுபடுத்தி, அங்கே அவர்கள் கண்டதை வைத்து எழுதப்பட்டது.

அதே போல இங்கு எழுதப்படும் அனைத்து அனுபவங்களும் ஒருவருக்கே ஏற்பட்டது அல்ல.
Michael Newton என்ற ஆராய்ச்சியாளர் பலரை இது போல ஹிப்னாடிஸத்திற்கு ஆட்படுத்தினார்.
அப்போது ஒவ்வொருவராலும்,  சில நிகழ்வுகளை மட்டுமே தெளிவாய் நினைவில் கொண்டு வரமுடிந்தது. அதையெல்லாம் தொகுத்து, வரிசையாய் அடுக்கி எழுதப்பட்டது தான் Journey of the souls என்ற அவரது புத்தகம்.
அதனால் தூண்டப்பட்டு, அதை அடிப்படையாய் வைத்து, வேறு சில புத்தகங்களில், செய்திகளில் நான் படித்ததையும் வைத்து, நான் எழுதுவதே இக்கட்டுரை.

இப்போது ஆன்மாக்களிடம் வருவோம்! 
உடலை விட்டு ஆன்மா வெளிவந்ததும் ஆன்மாக்களால் ஒரு வித ரீங்காரச் சத்தத்தை கேட்க முடிகிறது.
மயக்க மருந்து கொடுக்கப்பட்ட சில நோயாளிகள் தங்களுக்கு இது போன்ற சத்தம் கேட்டதாய் சொல்லியிருக்கிறார்கள்.


ஆம்ஸ்ட்ராங் முதன்முதலாய் இதைக் கேட்ட போது, இந்த சத்தம் மசூதியில் கேட்கும் பாங்கொலியைப் போல இருப்பதை உணர்ந்து இஸ்லாமிய மதத்திற்கு மாறிவிட்டதாகச் சொல்கிறார்கள். இதை வதந்தி என்கிறது விக்கிபீடியா.
இந்துக்கள் அதை ‘ஓம்’ ஒலி போல இருக்கிறது என்கிறார்கள்.
எனக்கு ப்ரம்மரீப் பிராணயாமம் செய்யும் போது எழும் சப்தம் போல இருக்கிறது.
ஒரு சமயம் கேட்கும் போது ‘காதல் ஓவியம் பாடும் காவியம்’ பாட்டிற்கு முன் வரும் கிருஸ்தவ தேவாலய கோரஸ் போலவும் கேட்கிறது.

மறுபடியும் ஆன்மாக்களுக்கு வருவோம்!
மரணத்திற்கு தயாராயில்லாத சில ஆன்மாக்கள் மட்டும் உலகத்தில் தன் வேலை இன்னும் முடிவடையவில்லை, என்று எண்ணி வருத்தமடைகின்றன. பொதுவாய் திடீர் விபத்தில் இறந்தவர்கள், இளவயதில் உயிரிழந்தவர்கள் போன்றவர்களின் ஆன்மா இதில் அடங்கும்.
மரணமடைந்த உடன் இவ்வகை ஆன்மாக்கள் பார்ப்பது இவர்களது வழிகாட்டியைத் தான். 
வழிகாட்டிகள் என்பவர்கள் உயர் நிலையிலிருக்கும் பக்குவமடைந்த ஆன்மாக்கள்.
வருத்தத்திலிருக்கும் புதிதாய் ஆன்மாவின் சீற்றங்களை இவ்வழிகாட்டிகளால் புரிந்துக் கொள்ள முடிகிறது.
புதிய ஆன்மாக்களை சமாதானப்படுத்தி அழைத்து வரும் வேலையை அவர்கள் ஏற்றுக் கொள்கிறார்கள்.

மற்றபடி பொதுவாய் இவ்வழிகாட்டிகளைப் சிறிது நேரத்திற்குப் பின் தான் பார்க்கின்றன ஆன்மாக்கள்.
உயிர் உடலைப் பிரிந்த சிறிது நேரத்தில், ஆன்மா குறிப்பிட்ட திசையில் உந்தப்பட்டு,  இருண்ட சுரங்கம் போன்ற பாதையில் பயணிக்கத் துவங்குகிறது.
சிலர் இறந்த உடனேயே தங்களுக்கு அந்த சுரங்கப் பாதைத் தெரிவதாகச் சொல்கிறார்கள்.
பலருக்கு சிறிது நேரம் கழித்தே இது புலப்படுகிறது.

இருண்ட சுரங்கப்பாதையைக் கடக்கும் வரைத்  தான் எங்கே செல்கிறோம், எப்படிப் பயணிக்கிறோம் என்ற குழப்பம் ஆன்மாவிற்கு இருக்கிறது.   
Image result for tunnel vision
அந்த சுரங்கப்பாதையின் தூர முடிவில் ஒரு ஒளி தெரிகிறது.
சுரங்கப் பாதையை விட்டு வெளியேறி அவ்வொளியை அடைந்ததும் ஆன்மாவினால் அமைதியை உணர முடிகிறது.
அங்கே தான் தங்கள் விருப்பதிற்குரிய உறவினர்களின், நண்பர்களின் ஆன்மாக்களை, வழிகாட்டிகளை அது சந்திக்கிறது.

                                   -ஆவியுலக பயணம் தொடரும்
(படங்கள் கூகுளிலிருந்து)

    


வெள்ளி, 12 பிப்ரவரி, 2016

அவ்வுலகமும் ஆன்மாக்களும் -2

(ஆவியுலகம் - Spiritual World)

நம் ஆன்மா உயிருக்கு ஆபத்து ஏற்படும் காலங்களில் உடலை விட்டு வெளியேறி உள்ளே நுழையக்கூடிய தன்மையைக் கொண்டது. மருத்துவமனையில் உயிரைக் காக்கும் அறுவை சிகிச்சைகள் செய்யப்படும் போது, தங்கள் உடலுக்கு மேலாக, மருத்துவர்கள் தங்களுக்கு செய்யும் சிகிச்சைகளைப் பார்த்தபடி மிதந்துக் கொண்டிருந்ததாய் பலர் சொல்லியிருக்கிறார்கள். மீண்டும் உடலுக்குள் ஆன்மா நுழைந்து, உயிர் காப்பாற்றப்பட்ட பின், அவர்களுக்கு அதைப் பற்றிய நினைவுகள் மெல்ல மறைந்து போகின்றன.

ஹிப்னாடிசத்துக்கு உட்படுத்தி ஒரு மனிதனை முற்பிறப்பின் நினைவுகளுக்குள் கொண்டு செல்லும் போது, அவன் விவரிக்கும் அவனது முற்பிறப்பின் இறப்பு இதே போல தான் இருக்கிறது.
இறக்கும் போது உடலை விட்டு வெளியேறும் ஆன்மா, அந்த கணம் பயத்தைவிட, ஒரு வித அமைதியையும், அந்த சூழலைப் புரிந்துக் கொள்ளும் ஆர்வத்தையுமே உணர்கிறது.

பெரும்பாலான நேரங்களில், இறப்பவர்கள் தங்கள் உள்ளுணர்வின் மூலம், நிம்மதி தரக்கூடிய ஒரு இடம் தங்களுக்காக காத்திருக்கிறது, என்பதை உணர்ந்தே இருக்கிறார்கள். அதனால் தான் இறக்கும் போது அவர்களின் முகம் அமைதியாய், சாந்தமாய் இருக்கிறது.

ஆன்மாக்களுக்கு உடலை விட்டு வெளியே வந்த உடன், சுமை குறைந்தது போல ஒரு நிம்மதி ஏற்படுகிறது.  நோயாளிகள் தம் உடலில் அது வரையிருந்த வலி சுத்தமாய் தொலைந்து போனதில் இதமாய் உணர்கிறார்கள்..

உடலை விட்டு வெளியேறிய நிலையில், முதலில் அந்த இடத்தில் இருக்கும்  திடப் பொருட்களைத் தொட முயற்சிக்கிறது ஆன்மா. ஆனால் அது நம் உலகில் இருக்கும் பொருட்களை விட அதிக Vibrationனைக் கொண்டிருப்பதால் அப்பொருட்களுடன் தொடுவுணர்ச்சி மூலம் தொடர்பு கொள்ள முடிவதில்லை.

பிறகு அவ்வான்மா தான் இறந்த துயரம் தாளாமல் அழுதுக்கொண்டிருக்கும் அன்புக்குரியவர்களைத்  தொடர்புகொள்ள முயற்சிக்கிறது. நாம் தான் நம் அன்புக்குரியவர்களை நிரந்தரமாய் பிரிந்து விட்டோம் என்று வருந்துகிறோமே தவிர, ஆன்மாக்கள் நாம் எப்படியும் திரும்ப பார்க்கப் போகிறோம் என்பதை அறிந்தே இருக்கின்றன. ஆவியுலகில் எவ்வளவு வேலைகள் இருந்தாலும், நாம் கூப்பிட்ட குரலுக்கு ஓடி வரக் கூடிய நிலையில் தான் அவை இருக்கின்றன.
நாம் துயரத்தில் இருப்பது இறந்த ஆன்மாவிற்கு வருத்தத்தைத் தருகிறது. தனக்கு பிரச்சனை எதுவும் இல்லை என்பதை, தான் துன்பங்களற்று நிம்மதியாய் இருப்பதை, தனக்கு இனி இந்த உடல் தேவையில்லை என்பதை, தான்  மற்றவர்களுக்காக ஆவியுலகில் காத்திருப்பேன் என்பதை நமக்கு உணர்த்திவிடத் துடிக்கிறது அது.

மரணத்தின் போது, இறந்த ஆன்மாவின் தொடர்பை நாம் பெற வேண்டும் என்றால், அந்த துக்கத்தினிடையே, அவ்வப்போது சிறிது நேரத்திற்கேனும், நம் மனதை கொஞ்சம் தெளிவாய் வைத்திருப்பது அவசியம்.

நம் மனம் தெளிவாய் இருக்கும் நேரம், நம்மால் நடப்பவற்றை கூர்ந்து கவனிக்க முடியும். அப்போது, நம் உள்ளுணர்வு, இறந்தவரின் ஆன்மா தெரிவிக்கக் கூடிய பாஸிடிவ் தகவல்களை கிரகித்துக் கொள்ளும் நிலையில் இருக்கிறது. 

அந்த சமயம், ஏதேனும் ஒரு விதத்தில் இறந்தவரின் ஆன்மா நம்மைத் தொடர்பு கொண்டு, தான் பாதுகாப்பான ஒரு இடத்தில் நிம்மதியாக இருப்பதை, நம் எண்ணத்தில் டெலிபதியின் மூலம் புகுத்தியோ அல்லது  வேறு ஏதேனும் ஒரு விதத்திலோ, உணர்த்தி விடும்.

பொதுவாய் இதை நமக்கு சொல்ல முடியாமல் தான் அந்நேரம் ஆன்மாக்கள் பரிதவிக்கின்றன. துயரத்தில் மூழ்கியிருப்பவர்களின் மனதை எட்டுவதற்கு ஆன்மாக்கள் சிரமப்படுகின்றன.  பெரும்பாலும் அம்முயற்சியில் தோல்வியுற்று, அங்கிருந்து இழுக்கப் படுகிறது அவ்வான்மா.

( நம் புறக்கண்களுக்கு ஆன்மாக்கள் தெரியவில்லை என்றாலும் ஒரு அழுகைக்குப் பின்னோ, அல்லது துயரத்திற்குப் பின்னோ நம் மனம் தானே சமாதனமடைவதற்குக் காரணம் அவ்வான்மாக்களே, டெலிபதியின் மூலம் நமக்குள் அவை விதைக்கும் தன்னம்பிக்கையே. )

நாம் நினைப்பது போல ஆன்மாக்கள் தங்கள் உடலுக்கு செய்யப்படும் சாங்கியங்களுக்கெல்லாம்  அவ்வளவு முக்கியத்துவம் தருவதில்லை. உடலை விட்டு வெளியானவுடன், தங்கள் மனதிற்கு நெருக்கமான ஆவியுலகிற்கு விரையவே அவை விரும்புகின்றன.

ஆனாலும் சில ஆன்மாக்கள், சில பூமி நாட்கள், அதாவது தங்கள் (இறப்பிற்கான) காரியம்  நடைபெறும் வரை, இங்கே தங்கியிருக்கத் தான் செய்கின்றன. முக்கியத்துவம் தராவிட்டாலும், உறவினர்கள் தங்கள் உடலுக்கு மரியாதைத் தருவதை அங்கீகரிக்கவே செய்கின்றன.

அதிக frequencyயில் இருக்கும் ஆவியுலகத்தில் காலம் என்பது மிக விரைவாய் செல்லக்கூடியது. பூமியுலகின் நாட்கள், அங்கே சில நிமிடங்களே!

ஆவியுலகிற்குச் செல்லாமல், ஒரு ஆன்மா நெடுநாட்கள் இங்கேயே சுற்றுகிறது என்றால் அதற்கு பல்வேறு காரணங்கள் இருக்ககூடும். உதாரணமாக, திடீரென்று விபத்தால் இறந்த அல்லது கொல்லப்பட்ட ஆன்மாக்கள், பொதுவாய் ஆத்திரத்தோடு பூமியைச் சுற்றுக்கின்றன. சில இளம் ஆன்மாக்களும் இவ்வுலகைப் பிரிய மனமின்றி இங்கேயே சுற்றுகின்றன. தான் இறந்து போனதை உணராமல் பூவுலகை வலம் வரும் ஆன்மாக்களும் உண்டு. அதே போல நிம்மதியில்லாத ஆன்மாக்களும் பூவுலகில் தங்கியிருக்க விரும்புகின்றன. 

இவ்வகை ஆன்மாக்கள் சிலவற்றிற்கு,  ஆவியுலகம் செல்ல அங்கிருந்து உதவியும் கிடைக்கிறது.
                                       -ஆவியுலக பயணம் தொடரும்
( inspired by the books, Journey of the souls, Laws of the spirit world )

    


வெள்ளி, 5 பிப்ரவரி, 2016

அவ்வுலகமும் ஆன்மாக்களும் - 1


    
     நாம் இறந்த பின் என்னவாகிறோம்? ஆன்மா என்று ஒன்று இருக்கிறதா? அப்படி இருந்தால் நம் உடலின் இறப்பிற்கு பின் அது என்னவாகிறது? அதற்கென்று ஒரு உலகம் இருக்கிறதா? இந்த  கேள்விகளுக்கெல்லாம்  இது வரை யாரும் விடை கண்டுபிடிக்கவில்லை.
     இது சம்பந்தமாய், சமீப காலங்களில் நான் தேடிப் பிடித்து படித்து வரும் சில புத்தகங்களிலிருந்து எனக்கு உண்மை என்று தோன்றும் கருத்துகளை இங்கே பகிர்ந்துக் கொள்கிறேன். இது இறை நம்பிக்கையைப் பற்றியான அல்லது மதம் சம்பந்தமான பதிவு அல்ல! நான் படித்த புத்தகங்களில் யாரும் நமக்கு மேலிருக்கும் சக்தியை ஈசன் என்றோ அல்லா என்றோ ஏசு என்றோ குறிப்பிடவில்லை. ‘அது ஒரு சக்தி அவ்வளவு தான்!’ என்று சொல்லிவிட்டு கடந்து போகிறார்கள்.
 ‘Dying to be me’ புத்தகத்தில் Anita Moorjani ஆத்திக உலகத்தைப் பற்றிய நம் புரிந்துணர்வை அழகாய் விளக்குகிறார்.
     உங்களை ஒரு இருண்ட சேமிப்புக் கிடங்கில் யாரோ தள்ளி விடுகிறார்கள். உள்ளே மையிருட்டு. தட்டுத் தடுமாறும் உங்கள் கையில் ஒரு டார்ச் லைட் அகப்படுகிறது. அதை உயிர்ப்பித்து ஒரு திசையை நோக்கி அடித்துப் பார்க்கிறீர்கள். உங்கள் கண்களுக்கு என்ன தெரியும்? அதே போல எல்லா திசைகளிலும் அடித்துப் பார்க்கிறீர்கள். அங்கே தெரியும் பொருட்கள் அந்த கிடங்கைப் பற்றி என்ன விதமான பிம்பத்தை உங்கள் மனதில் ஏற்படுத்தும்? அது போல தான் இவ்வுலக வாழ்க்கையும். நம் கண்களுக்கு புலப்படுபவை மட்டுமே உண்மை என்று நினைத்து, அதையே ஆதாரமாய்க் கொண்டு, நம்பிக்கைகளை வளர்த்துக் கொள்கிறோம் நாம்.
     திடீரென்று அந்த சேமிப்புக் கிடங்கிற்கு மின்சாரத் தொடர்பு வந்து பளிச்சென்று விளக்குகளெல்லாம் எரிகின்றன. அப்போது அந்த கிடங்கைப் பார்க்கும் நமக்கு என்ன தோன்றும்? அந்த கிடங்கைப் பற்றிய பார்வையே மாறிப்போகும் தானே? அப்பேற்பட்ட பார்வை தான், நம் ஆன்மா உடலை விட்டு வெளியேறியவுடன் நமக்குக் கிடைக்கக் கூடியது என்று சொல்கிறார் அவர்.
இறை நம்பிக்கையில்லாத எனக்கு இவ்விஷயத்தில் நம்பிக்கை ஏற்படக் காரணம்
1.    நான் இளம் வயதில் oujia boardடை விளையாட்டாய் பயன்படுத்த, அதில் வைத்த டம்ளர் தானாக நகர்ந்து பதில்களைச் சொன்னது. (அதன் மேல் விரல்களை வைத்திருந்த நாங்கள் யாரும் அந்த டம்ளரை நகர்த்தவில்லை என்பது சர்வநிச்சயம்.)
2.    இந்த புத்தகங்களில் படித்த சில சம்பவங்களை என்னால் மட்டுமல்ல பலரால் தங்கள் வாழ்வோடு தொடர்பு படுத்திப் பார்க்க முடியும்.
     ஆழ்ந்த உறக்கத்தில் எத்தனை பேர் மலையின் மேலிருந்தோ, அல்லது எங்கிருந்தோ கீழே விழுவது போல கனவு கண்டு திடுக்கிட்டு விழித்திருப்பிர்கள்! அப்போது கீழே விழும் உணர்வு கனவில் என்பது போல இல்லாமல் எவ்வளவு உண்மையாக இருந்தது?
     நாம் தூங்கும் போது நம் ஆன்மா நம் உடலை விட்டு வெளியேறி, நம்மைப் பிரிந்த நம் அன்புக்குரியவர்களின் ஆன்மாவைச் சந்தித்து விட்டு, திரும்பி நம் உடலுக்குள் வந்து இணையும் போது ஏற்படும் உணர்வு தான் அது என்று சொன்னால் எப்படி உணர்கிறீர்கள்? ஒரு நிம்மதி, ஒரு மனநிறைவு ஏற்படுகிறதில்லையா?
     உண்மையா இல்லையா என்பதையெல்லாம் தாண்டி இப்படி இருந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றுகிறது இல்லையா! அந்த உணர்வு தான் என்னை மேலும் இவ்விஷயங்களைத் தேடிப் படிக்கும் படி ஊக்கப்படுத்தியது.
     அவற்றில் நான் தெரிந்துக் கொண்டவற்றைப் பற்றி, ஆன்மீக உலகம் பற்றி, அவற்றில் இருக்கும் வெவ்வேறு நிலைகள் பற்றி, அங்கிருப்பவர்கள்  எப்படியெல்லாம் நம்மையறியாமல் நம்மைத் தொடர்பு கொள்கிறார்கள் என்பது பற்றி இனிவரும் நாட்களில் பகிந்துக் கொள்கிறேன்.