வெள்ளி, 5 பிப்ரவரி, 2016

அவ்வுலகமும் ஆன்மாக்களும் - 1


    
     நாம் இறந்த பின் என்னவாகிறோம்? ஆன்மா என்று ஒன்று இருக்கிறதா? அப்படி இருந்தால் நம் உடலின் இறப்பிற்கு பின் அது என்னவாகிறது? அதற்கென்று ஒரு உலகம் இருக்கிறதா? இந்த  கேள்விகளுக்கெல்லாம்  இது வரை யாரும் விடை கண்டுபிடிக்கவில்லை.
     இது சம்பந்தமாய், சமீப காலங்களில் நான் தேடிப் பிடித்து படித்து வரும் சில புத்தகங்களிலிருந்து எனக்கு உண்மை என்று தோன்றும் கருத்துகளை இங்கே பகிர்ந்துக் கொள்கிறேன். இது இறை நம்பிக்கையைப் பற்றியான அல்லது மதம் சம்பந்தமான பதிவு அல்ல! நான் படித்த புத்தகங்களில் யாரும் நமக்கு மேலிருக்கும் சக்தியை ஈசன் என்றோ அல்லா என்றோ ஏசு என்றோ குறிப்பிடவில்லை. ‘அது ஒரு சக்தி அவ்வளவு தான்!’ என்று சொல்லிவிட்டு கடந்து போகிறார்கள்.
 ‘Dying to be me’ புத்தகத்தில் Anita Moorjani ஆத்திக உலகத்தைப் பற்றிய நம் புரிந்துணர்வை அழகாய் விளக்குகிறார்.
     உங்களை ஒரு இருண்ட சேமிப்புக் கிடங்கில் யாரோ தள்ளி விடுகிறார்கள். உள்ளே மையிருட்டு. தட்டுத் தடுமாறும் உங்கள் கையில் ஒரு டார்ச் லைட் அகப்படுகிறது. அதை உயிர்ப்பித்து ஒரு திசையை நோக்கி அடித்துப் பார்க்கிறீர்கள். உங்கள் கண்களுக்கு என்ன தெரியும்? அதே போல எல்லா திசைகளிலும் அடித்துப் பார்க்கிறீர்கள். அங்கே தெரியும் பொருட்கள் அந்த கிடங்கைப் பற்றி என்ன விதமான பிம்பத்தை உங்கள் மனதில் ஏற்படுத்தும்? அது போல தான் இவ்வுலக வாழ்க்கையும். நம் கண்களுக்கு புலப்படுபவை மட்டுமே உண்மை என்று நினைத்து, அதையே ஆதாரமாய்க் கொண்டு, நம்பிக்கைகளை வளர்த்துக் கொள்கிறோம் நாம்.
     திடீரென்று அந்த சேமிப்புக் கிடங்கிற்கு மின்சாரத் தொடர்பு வந்து பளிச்சென்று விளக்குகளெல்லாம் எரிகின்றன. அப்போது அந்த கிடங்கைப் பார்க்கும் நமக்கு என்ன தோன்றும்? அந்த கிடங்கைப் பற்றிய பார்வையே மாறிப்போகும் தானே? அப்பேற்பட்ட பார்வை தான், நம் ஆன்மா உடலை விட்டு வெளியேறியவுடன் நமக்குக் கிடைக்கக் கூடியது என்று சொல்கிறார் அவர்.
இறை நம்பிக்கையில்லாத எனக்கு இவ்விஷயத்தில் நம்பிக்கை ஏற்படக் காரணம்
1.    நான் இளம் வயதில் oujia boardடை விளையாட்டாய் பயன்படுத்த, அதில் வைத்த டம்ளர் தானாக நகர்ந்து பதில்களைச் சொன்னது. (அதன் மேல் விரல்களை வைத்திருந்த நாங்கள் யாரும் அந்த டம்ளரை நகர்த்தவில்லை என்பது சர்வநிச்சயம்.)
2.    இந்த புத்தகங்களில் படித்த சில சம்பவங்களை என்னால் மட்டுமல்ல பலரால் தங்கள் வாழ்வோடு தொடர்பு படுத்திப் பார்க்க முடியும்.
     ஆழ்ந்த உறக்கத்தில் எத்தனை பேர் மலையின் மேலிருந்தோ, அல்லது எங்கிருந்தோ கீழே விழுவது போல கனவு கண்டு திடுக்கிட்டு விழித்திருப்பிர்கள்! அப்போது கீழே விழும் உணர்வு கனவில் என்பது போல இல்லாமல் எவ்வளவு உண்மையாக இருந்தது?
     நாம் தூங்கும் போது நம் ஆன்மா நம் உடலை விட்டு வெளியேறி, நம்மைப் பிரிந்த நம் அன்புக்குரியவர்களின் ஆன்மாவைச் சந்தித்து விட்டு, திரும்பி நம் உடலுக்குள் வந்து இணையும் போது ஏற்படும் உணர்வு தான் அது என்று சொன்னால் எப்படி உணர்கிறீர்கள்? ஒரு நிம்மதி, ஒரு மனநிறைவு ஏற்படுகிறதில்லையா?
     உண்மையா இல்லையா என்பதையெல்லாம் தாண்டி இப்படி இருந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றுகிறது இல்லையா! அந்த உணர்வு தான் என்னை மேலும் இவ்விஷயங்களைத் தேடிப் படிக்கும் படி ஊக்கப்படுத்தியது.
     அவற்றில் நான் தெரிந்துக் கொண்டவற்றைப் பற்றி, ஆன்மீக உலகம் பற்றி, அவற்றில் இருக்கும் வெவ்வேறு நிலைகள் பற்றி, அங்கிருப்பவர்கள்  எப்படியெல்லாம் நம்மையறியாமல் நம்மைத் தொடர்பு கொள்கிறார்கள் என்பது பற்றி இனிவரும் நாட்களில் பகிந்துக் கொள்கிறேன்.

5 கருத்துகள்:

தி.தமிழ் இளங்கோ சொன்னது…

// நான் படித்த புத்தகங்களில் யாரும் நமக்கு மேலிருக்கும் சக்தியை ஈசன் என்றோ அல்லா என்றோ ஏசு என்றோ குறிப்பிடவில்லை. ‘அது ஒரு சக்தி அவ்வளவு தான்!’ என்று சொல்லிவிட்டு கடந்து போகிறார்கள்.//

உண்மைதான். நமக்கும் மேலே ஏதோ ஒன்று – ஒரு சக்தி – இருப்பதை உணரமுடிகிறது. பல காரண காரியங்களுக்கும், விடைதெரியா கேள்விகளுக்கும் பதில்தான் இல்லை.
நன்றாகவே தொடங்கி இருக்கிறீர்கள். நானும் தொடர்கின்றேன்.

தவறு சொன்னது…

புடிச்சிருக்கு தொடர்கிறேன்.

ஹேமா (HVL) சொன்னது…

நன்றி தமிழ் இளங்கோ, தவறு!

ஸ்ரீராம். சொன்னது…

இங்கு எழுத ஆரம்பித்ததே தெரியவிலையே... தொடர்கிறேன்.

வல்லிசிம்ஹன் சொன்னது…

மிக நன்றாக இருக்கிறது. எனக்கும் இந்த அமானுஷ்யங்கள் மிக ஈடுபாடு உண்டு. கீழே விழும் உணர்வு எப்போதும் உண்டு. நன்றி .தொடர்கிறேன்.