வெள்ளி, 12 பிப்ரவரி, 2016

அவ்வுலகமும் ஆன்மாக்களும் -2

(ஆவியுலகம் - Spiritual World)

நம் ஆன்மா உயிருக்கு ஆபத்து ஏற்படும் காலங்களில் உடலை விட்டு வெளியேறி உள்ளே நுழையக்கூடிய தன்மையைக் கொண்டது. மருத்துவமனையில் உயிரைக் காக்கும் அறுவை சிகிச்சைகள் செய்யப்படும் போது, தங்கள் உடலுக்கு மேலாக, மருத்துவர்கள் தங்களுக்கு செய்யும் சிகிச்சைகளைப் பார்த்தபடி மிதந்துக் கொண்டிருந்ததாய் பலர் சொல்லியிருக்கிறார்கள். மீண்டும் உடலுக்குள் ஆன்மா நுழைந்து, உயிர் காப்பாற்றப்பட்ட பின், அவர்களுக்கு அதைப் பற்றிய நினைவுகள் மெல்ல மறைந்து போகின்றன.

ஹிப்னாடிசத்துக்கு உட்படுத்தி ஒரு மனிதனை முற்பிறப்பின் நினைவுகளுக்குள் கொண்டு செல்லும் போது, அவன் விவரிக்கும் அவனது முற்பிறப்பின் இறப்பு இதே போல தான் இருக்கிறது.
இறக்கும் போது உடலை விட்டு வெளியேறும் ஆன்மா, அந்த கணம் பயத்தைவிட, ஒரு வித அமைதியையும், அந்த சூழலைப் புரிந்துக் கொள்ளும் ஆர்வத்தையுமே உணர்கிறது.

பெரும்பாலான நேரங்களில், இறப்பவர்கள் தங்கள் உள்ளுணர்வின் மூலம், நிம்மதி தரக்கூடிய ஒரு இடம் தங்களுக்காக காத்திருக்கிறது, என்பதை உணர்ந்தே இருக்கிறார்கள். அதனால் தான் இறக்கும் போது அவர்களின் முகம் அமைதியாய், சாந்தமாய் இருக்கிறது.

ஆன்மாக்களுக்கு உடலை விட்டு வெளியே வந்த உடன், சுமை குறைந்தது போல ஒரு நிம்மதி ஏற்படுகிறது.  நோயாளிகள் தம் உடலில் அது வரையிருந்த வலி சுத்தமாய் தொலைந்து போனதில் இதமாய் உணர்கிறார்கள்..

உடலை விட்டு வெளியேறிய நிலையில், முதலில் அந்த இடத்தில் இருக்கும்  திடப் பொருட்களைத் தொட முயற்சிக்கிறது ஆன்மா. ஆனால் அது நம் உலகில் இருக்கும் பொருட்களை விட அதிக Vibrationனைக் கொண்டிருப்பதால் அப்பொருட்களுடன் தொடுவுணர்ச்சி மூலம் தொடர்பு கொள்ள முடிவதில்லை.

பிறகு அவ்வான்மா தான் இறந்த துயரம் தாளாமல் அழுதுக்கொண்டிருக்கும் அன்புக்குரியவர்களைத்  தொடர்புகொள்ள முயற்சிக்கிறது. நாம் தான் நம் அன்புக்குரியவர்களை நிரந்தரமாய் பிரிந்து விட்டோம் என்று வருந்துகிறோமே தவிர, ஆன்மாக்கள் நாம் எப்படியும் திரும்ப பார்க்கப் போகிறோம் என்பதை அறிந்தே இருக்கின்றன. ஆவியுலகில் எவ்வளவு வேலைகள் இருந்தாலும், நாம் கூப்பிட்ட குரலுக்கு ஓடி வரக் கூடிய நிலையில் தான் அவை இருக்கின்றன.
நாம் துயரத்தில் இருப்பது இறந்த ஆன்மாவிற்கு வருத்தத்தைத் தருகிறது. தனக்கு பிரச்சனை எதுவும் இல்லை என்பதை, தான் துன்பங்களற்று நிம்மதியாய் இருப்பதை, தனக்கு இனி இந்த உடல் தேவையில்லை என்பதை, தான்  மற்றவர்களுக்காக ஆவியுலகில் காத்திருப்பேன் என்பதை நமக்கு உணர்த்திவிடத் துடிக்கிறது அது.

மரணத்தின் போது, இறந்த ஆன்மாவின் தொடர்பை நாம் பெற வேண்டும் என்றால், அந்த துக்கத்தினிடையே, அவ்வப்போது சிறிது நேரத்திற்கேனும், நம் மனதை கொஞ்சம் தெளிவாய் வைத்திருப்பது அவசியம்.

நம் மனம் தெளிவாய் இருக்கும் நேரம், நம்மால் நடப்பவற்றை கூர்ந்து கவனிக்க முடியும். அப்போது, நம் உள்ளுணர்வு, இறந்தவரின் ஆன்மா தெரிவிக்கக் கூடிய பாஸிடிவ் தகவல்களை கிரகித்துக் கொள்ளும் நிலையில் இருக்கிறது. 

அந்த சமயம், ஏதேனும் ஒரு விதத்தில் இறந்தவரின் ஆன்மா நம்மைத் தொடர்பு கொண்டு, தான் பாதுகாப்பான ஒரு இடத்தில் நிம்மதியாக இருப்பதை, நம் எண்ணத்தில் டெலிபதியின் மூலம் புகுத்தியோ அல்லது  வேறு ஏதேனும் ஒரு விதத்திலோ, உணர்த்தி விடும்.

பொதுவாய் இதை நமக்கு சொல்ல முடியாமல் தான் அந்நேரம் ஆன்மாக்கள் பரிதவிக்கின்றன. துயரத்தில் மூழ்கியிருப்பவர்களின் மனதை எட்டுவதற்கு ஆன்மாக்கள் சிரமப்படுகின்றன.  பெரும்பாலும் அம்முயற்சியில் தோல்வியுற்று, அங்கிருந்து இழுக்கப் படுகிறது அவ்வான்மா.

( நம் புறக்கண்களுக்கு ஆன்மாக்கள் தெரியவில்லை என்றாலும் ஒரு அழுகைக்குப் பின்னோ, அல்லது துயரத்திற்குப் பின்னோ நம் மனம் தானே சமாதனமடைவதற்குக் காரணம் அவ்வான்மாக்களே, டெலிபதியின் மூலம் நமக்குள் அவை விதைக்கும் தன்னம்பிக்கையே. )

நாம் நினைப்பது போல ஆன்மாக்கள் தங்கள் உடலுக்கு செய்யப்படும் சாங்கியங்களுக்கெல்லாம்  அவ்வளவு முக்கியத்துவம் தருவதில்லை. உடலை விட்டு வெளியானவுடன், தங்கள் மனதிற்கு நெருக்கமான ஆவியுலகிற்கு விரையவே அவை விரும்புகின்றன.

ஆனாலும் சில ஆன்மாக்கள், சில பூமி நாட்கள், அதாவது தங்கள் (இறப்பிற்கான) காரியம்  நடைபெறும் வரை, இங்கே தங்கியிருக்கத் தான் செய்கின்றன. முக்கியத்துவம் தராவிட்டாலும், உறவினர்கள் தங்கள் உடலுக்கு மரியாதைத் தருவதை அங்கீகரிக்கவே செய்கின்றன.

அதிக frequencyயில் இருக்கும் ஆவியுலகத்தில் காலம் என்பது மிக விரைவாய் செல்லக்கூடியது. பூமியுலகின் நாட்கள், அங்கே சில நிமிடங்களே!

ஆவியுலகிற்குச் செல்லாமல், ஒரு ஆன்மா நெடுநாட்கள் இங்கேயே சுற்றுகிறது என்றால் அதற்கு பல்வேறு காரணங்கள் இருக்ககூடும். உதாரணமாக, திடீரென்று விபத்தால் இறந்த அல்லது கொல்லப்பட்ட ஆன்மாக்கள், பொதுவாய் ஆத்திரத்தோடு பூமியைச் சுற்றுக்கின்றன. சில இளம் ஆன்மாக்களும் இவ்வுலகைப் பிரிய மனமின்றி இங்கேயே சுற்றுகின்றன. தான் இறந்து போனதை உணராமல் பூவுலகை வலம் வரும் ஆன்மாக்களும் உண்டு. அதே போல நிம்மதியில்லாத ஆன்மாக்களும் பூவுலகில் தங்கியிருக்க விரும்புகின்றன. 

இவ்வகை ஆன்மாக்கள் சிலவற்றிற்கு,  ஆவியுலகம் செல்ல அங்கிருந்து உதவியும் கிடைக்கிறது.
                                       -ஆவியுலக பயணம் தொடரும்
( inspired by the books, Journey of the souls, Laws of the spirit world )

    


11 கருத்துகள்:

aekaanthan ! சொன்னது…

தற்செயலாக உங்கள் பதிவுக்கு வருகிறேன். ஒரு delicate subject-பற்றி சரியான புத்தகங்களைப் படித்திருக்கிறீர்கள் எனத் தோன்றுகிறது. நன்றாக எழுத ஆரம்பித்திருக்கிறீர்கள். தொடருங்கள்.

ஸ்ரீராம். சொன்னது…

சுவாரஸ்யமான தகவல்கள். தொடர்கிறேன்.

ஹேமா (HVL) சொன்னது…

நன்றி, aekaanthan, sriram.

ஹேமா (HVL) சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
தனிமரம் சொன்னது…

கவிதாயினியின் புதிய பாதை இதுவா என்றாலும் நட்பில் இன்னும் தொடர்வோம் நாம் பலர் ஆவியானாலும் ஹேமாவை அன்பில் விடமாட்டோம்!

தனிமரம் சொன்னது…

நாங்கள் தேடும் உறவு போல நீங்கள் இல்லை ஹேமாhvl என்றாலும் இனியும் உங்களை தொடர்வேன்.

ஹேமா (HVL) சொன்னது…

மிக்க நன்றி தனிமரம்.

ஹேமா (HVL) சொன்னது…

மிக்க நன்றி தனிமரம்.

வல்லிசிம்ஹன் சொன்னது…

நானும் உணர்ந்திருக்கிறேன். நம்புகிறேன். நன்றி.

ஹேமா (HVL) சொன்னது…

நன்றி வல்லிசிம்ஹன்!

ஹேமா (HVL) சொன்னது…

நன்றி வல்லிசிம்ஹன்!