Friday, 1 July 2016

இறந்து போனவனின் முகப்பக்கம்

இணைய வெளியில்
அலைந்துக் கொண்டிருக்கிறது
இறந்து போனவன் இறுதியாய்
எழுதிய கவிதையொன்று.
அதன் வார்த்தைகள்
ஒன்றையொன்று பிணைத்தபடி
இறுகிக் கிடக்கின்றன.
கடைசியிரு வரிகளுக்கிடையே
தந்தை யிழந்த
இளம்பிள்ளை யொன்றின்
முகம் ஊடுபாவுகிறது.

நூற்றியிருபத்தி மூன்று லைக்குகளும்
பதினைந்து ஷேர்களும்
பெற்ற அக்கவிதையின்
கடைசி நான்கு பின்னூட்டங்கள்
ஆன்ம சாந்திக்கானது
சபை நாகரிகம் மறந்து
சாவின் காரணம்
கேட்ட பின்னூட்டங்கள்
மௌனமாய்
நிராகரிக்கப் பட்டிருந்தன.

இக்கவிதையின்
மூலத்தைச் சுமந்து,
இறப்பின் ரகசியத்தைத்
தன்னுள் புதைத்து,
சில ஆர்.ஐ.பிகளைத் தாங்கி,
இறந்த வீட்டின் துக்கத்தை
அவனது முகப்பக்கம்
மௌனமாய்
அனுசரித்துக் கொண்டிருக்கிறது.