செவ்வாய், 22 ஆகஸ்ட், 2017

டிஷ்யூ விற்பவர்

எம். ஆர். டி நிலையத்திற்கு அருகில் இருக்கும் கடைத்தொகுதி அது. அங்கே இருந்த கடை ஒன்றில் சட்டைகளைப் பார்த்தபடி நின்றுக் கொண்டிருந்தேன். அப்போது அந்தப் பக்கமாக ஒரு வயதான பெண்மணி.... baju kurung அணிந்திருந்தார். என் அம்மாவின் வயதிருக்கும். நடையில் முதுமை தெரிந்தது.
என்னைத் தாண்டும் போது, கையிலிருந்த டிஷ்யூக்களை நீட்டி, இளைத்த குரலில் த்ரீ ஃபார் ஒன் டாலர், த்ரீ பார் ஒன் டாலர் என்றார். அவ்வார்த்தைகள் அவருக்கே இன்னும் பழக்கமாகியிருக்கவில்லை என்பதை அவர் குரலில் இருந்த தடுமாற்றம் உணர்த்தியது. மனதுள் பாறையாய் இறங்கியது அவரது இரைஞ்சல்.
வாங்க நினைத்த பொருளைப் பற்றி சுத்தமாய் மறந்து திகைத்து நின்ற சில நொடிகளில், நான் டிஷ்யூவை வாங்கப் போவதில்லை என்று முடிவு செய்தவர் போல தள்ளாட்டத்துடன், வேறு பக்கம் செல்லத் துவங்கினார்.
சில கணங்கள் அவரது நம்பிக்கை அலைகழிய காரணமாய் இருந்து விட்டேன் என்ற குற்றவுணர்வு நெருக்க, அவரைத் தொடர்ந்து சென்று, என்னால் இயன்ற வெள்ளிகளைக் கொடுத்தேன்.
நடுங்கும் கரங்கள் நீட்டிய டிஷ்யூ பேக்கட்களை மென்மையாய் மறுத்து எதிர் பக்கம் நடக்கத் துவங்கினேன். அவரது தேங்க்யூ என்னைத் துரத்தி வந்தது. அதைக் எதிர் நோக்க அஞ்சியோ என்னவோ, என் நடை துரிதப்பட்டிருந்தது.

இறந்து போனவளின் கடைசி மணித்துளிகள்

‘இனியொரு முறை இந்தப் பக்கம் வரக்கூடாது’ என்று அம்மா வீட்டை விட்டு வெளியேறும் போது அவள் நினைத்துக் கொண்டாள்.
‘எல்லோர் குடும்பத்திலும் இருக்கும் பிரச்சனை தான், குழந்தை கொஞ்சம் பெரிதாகி கேள்விகள் கேட்கத் துவங்கினால் சரியாகிப் போகும், பிள்ளைக்கு அடிபணியாத மனிதர்களே இல்லை’ என்றெல்லாம் சொல்லி அழைத்து வந்து விட்டுச் சென்ற சகோதரனை யாரும் சீண்டக்கூட இல்லை.
அவன் மீது கோபம் இருந்தாலும், தன் வீட்டு மனிதனுக்குக் கிடைக்காத மரியாதை சதைக்குள் புதைந்திருந்து அசையும் முள்ளாய் வலியைக் கொடுத்தது.
அடுத்து வந்த நாட்களில், இவளின் இருத்தலை வலிந்து புறக்கணித்த குடும்பத்தினர்களை அவளும் பொருட்படுத்தாமல் இருக்க முடிவு செய்து கொண்டாள். கால்களுக்கிடையே சுற்றி வரும் இரண்டு வயது பிள்ளையை மட்டுமே பற்று கோலாய்க் கொண்டு, வாழ்வை அவனிருக்கும் திசையில் நகர்த்தத் துவங்கினாள்.
அன்று மாமனார் வீட்டிற்குள் வந்த போதே, குடித்து விட்டு வந்திருக்கிறார் என்று புரிந்தது. கூட வந்த இருவரின் உடல் மொழிகளும் அவளுடைய உள்ளுணர்வினைச் சலனப்படுத்தியபடி இருந்தன. அவர்கள் போகும் வரை தன் அறைக்குள்ளேயே இருக்க முடிவு செய்து கொண்டாள் அவள்.
சிணுங்கத் துவங்கியிருந்த மகனுக்காக அறையிலிருந்து வெளியேறி சமையலறைக்குள் சென்றாள். பிசைந்த சாதத்தில் உப்பு இருக்கிறதா என்று சரிபார்த்துக் கொண்டிருந்த போது, ‘கொடு நான் ஊட்டுகிறேன்’ என்று சொன்ன மாமியாரை அவளால் மறுக்க இயலவில்லை. அருகில் நின்றிருந்த மகனைத் தூக்கி அழுந்த முத்தம் கொடுத்தாள்.
அறைக்குள் சென்று மகன் இறைத்திருந்த பொருட்களை அடுக்கி வைக்கத் துவங்கினாள். சில நொடிகளில் முதுகிற்குப் பின்னால் கதவைத் திறக்கும் சத்தம் கேட்க, சட்டெனத் திரும்பினாள்.
‘இப்படி பேசாமயே இருந்தா சரியாயிடுமா? என்று கரகரத்த குரலில் கேட்டபடி அறைக்குள் நுழைந்த மாமனாரைப் பார்த்ததும், கையிலிருந்த ஹெலிகாப்டரைப் போட்டுவிட்டு தன்னிச்சையாக பின்னோக்கி நகரத் துவங்கினாள். அவரைத் தொடர்ந்து வந்த இருவரும், கதவருகே நின்று கொண்டார்கள்.
‘எப்படியாவது எங்க வீட்டில கொடுத்திடுவாங்க’ என்று துவங்கி அவள் சொன்ன சமாதானங்கள் முன்னேறியபடி இருந்த மாமனாரின் காலடியில் நசுங்கிக் கொண்டிருந்தன. இது வழக்கமாய் நடக்கும் நிகழ்வாய் முடியப் போவதில்லை என்று அவளுடைய உள்மனம் பதறத் துவங்கியது. அந்த நேரம் கூட வந்திருந்த இருவரும் கட்டிலின் மேலிருந்த, அவள் பிறந்தகத்திலிருந்து கொண்டு வந்திருந்த தலையணைகளை ஆளுக்கு ஒன்றாய் எடுத்துக் கொண்டார்கள்.
அவள் அவர்களைப் பார்த்தபடியே கட்டிலுக்கும் சுவரிற்கும் நடுவே இருந்த இடைவெளியில் நுழைந்தாள். மூவரைத் தன்னால் சமாளிக்க முடியமா என்ற சந்தேகம் அவளுள் எழுந்தபடி இருந்தது. வெளியே மாமியாரிடம் உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்த மகன் நினைவிற்கு வந்தான். அலறிக் கொண்டே தன் உடலை எழுப்ப முயற்சிக்கும் அவனுடைய பிம்பம் கண் முன் தோன்றியது. எப்படியும் இவர்களிடமிருந்து தப்பித்துவிட வேண்டும் என்ற உறுதியுடன் முதுகில் முட்டிய சுவரின் மேல் தன் முழு பலத்தும் கொடுத்து கைகளால் மாமனாரைப் பிடித்துத் தள்ளத் துவங்கினாள்.
அவர்களால் மிகச் சுலபமாய் அவளைத் தரையில் வீழ்த்தி விட முடிந்தது. இடைவெளி குறுகலாக இருந்த்தால், அவளைக் கட்டிலுக்கு அந்தப் பக்கமாய் மூவரும் சேர்ந்து இழுத்துப் போட்டார்கள். இனியும் தாங்க முடியாது, இங்கிருந்து இப்போதே வெளியேறி, தன்னுடைய மகனை அழைத்துக் கொண்டு இவர்களின் கண்ணில் படாமல் ஏங்கேனும் சென்று விட வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்த அவளது முகத்தைத் தலையணை மறைத்தது.
தலையணையை ஒருவன் அழுத்தத் துவங்கிய கணம், மற்றொருவனும் அவனுடன் சேர்ந்து கொண்டான். இன்னும் ஒரேமுறை மகனை முத்தமிடத் துடித்த எண்ணங்களுடன் கைகளையும் கால்களையும் காற்றில் வீசிக் கொண்டிருந்தாள் அவள்.
சமீபத்தில் இறந்து போய், செய்தித்தாள்களில் இடம் பெற்றிருந்தவளின் கடைசி மணித்துளிகள் இப்படியாகவும் இருந்திருக்கலாம்.

பார்வை

( கொடுக்கப்பட்ட முதல் வரிக்காக  எழுதிய கதை.  இக்கதை பிப்ரவரி (2017)  கதைக்களத்தில் இரண்டாம் பரிசு பெற்றது. சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகத்திற்கு நன்றி) 

எனக்கு இந்த ஊர் புதிதாக இருந்தது.  
இதுநாள் வரையில், என் மன வரைபடத்திலிருந்தது, ஓசைகளாலும் தொடுகைகளாலும் வாசத்தாலும் கட்டமைக்கப்பட்ட ஊர். இது அதற்கு முற்றிலும் சம்பந்தமில்லாத இடம்.
எல்லாவற்றையும் இன்றே பருகிவிடும் துடிப்போடு கண்களைப் பெரிதாய்  விரித்து, சுற்றிலும் பார்த்தவாறு நடந்தேன். பள்ளமும் மேடுமாக மட்டுமே இத்தனை நாட்கள் அறிமுகமாகியிருந்த சாலை, எல்லையில்லா வழிகளைக் காட்டி மலைப்பைத் தந்தது. சுற்றிலும் வட்ட, அல்லது வட்டத்திற்கு அருகிலிருக்கும் முகங்கள். மரங்களின் பச்சை மனதைத் தடவுவதாயிருந்தது. இதுவரை வெப்பத்தால் மட்டுமே உணர்ந்திருந்த சூரியன், நேரத்தைப் பொறுத்து மஞ்சள் அல்லது ஆரஞ்சாய் மாறக்கூடியது என்பதை மனதில் குறித்துக் கொண்டேன். இதையெல்லாம் நான் கற்றுக்கொள்ள படப்புத்தகம் வாங்கி வைத்திருக்கிறாள் அம்மா.
தாழம்பூ குங்குமம் மணக்கும் குளிர்ச்சியான அம்மா என் நினைவில் இருப்பது போல, அவளது முப்பரிமாண முகம் இன்னும் மனதில் பதியவில்லை. அப்பாவின் அறிவுசார்ந்த வாதத்தை, அவர் முகத்தில் தெரிந்த உணர்வுகளோடு சேர்த்து உள்வாங்க முடியாமல் தடுமாறினேன். மொத்தத்தில் இருண்ட என் முன்னாள் உலகின் கதகதப்பை, இப்புதிய ஊர் எனக்குக் கொடுக்கவில்லை.
என்னைப் பொறுத்தவரை, இவ்வுலகம் வண்ணக் குழம்புகளால் தீட்டப்பட்ட, மிகப்பெரிய புதிர் விளையாட்டு. வழியில் என்னைப் பார்த்து உதடு விரிய சிரித்தவர்கள் புதிர் விளையாட்டின் பகுதிகளாக என் மனதுள் உறைந்தார்கள். பேசினாலொழிய அவர்களை என்னால் அடையாளம் காண முடியாது.
இரைச்சலாய், நாற்றமாய், இதுவரை நெஞ்சில் படிந்து போயிருந்த ஈரச்சந்தையின் மூன்றாவது பரிமாணத்துள் நுழைந்து ரோஜா மலர்களை வாங்கிக் கொண்டேன்.
எம்.ஆர்.டி நிலையத்தைக் கண்களால் பார்க்க மகிழ்ச்சியாய் இருந்தது. அப்போது,
ஹாய், யூ லுக் ஹேண்ட்சம்!” என்ற குரலுக்குத் திரும்பி அதைச் சொன்ன பெண்ணின் குண்டு முகத்தைப் பார்த்தேன். அவளுடைய கண்கள் என் கவனத்தைக் கலைத்தது. பிற கண்கள் என் விழிகளை நோக்குவதை என்னால் இன்னும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. கண்களை மூடி, மூளையை நிரடி, அது ரோசலினின் குரல் என்று உணர்ந்து சந்தோஷித்தேன். புதிரின் ஓர் முடிச்சை அவிழ்க்க முடிந்த குதூகலத்துடன் அவளுடைய ஷேமத்தை விசாரித்தேன்.
கால்களைத் தாங்கிய தரை, தனது அடையாளத்தை உணர்த்தி என்னை விரைவு ரயிலினுள்ளே செலுத்தியது. ரயில் முழுக்க ரோசலின் போன்ற முகங்கள். இன்னுமொருமுறை அவளைப் பார்த்தால் நிச்சயம் அடையாளம் காணமுடியாது. மார்சிலிங்கில் இறங்கும் போது, ஒரு முறை கண்களை மூடி, போக வேண்டிய விலாசத்தை நினைவுபடுத்திக் கொண்டேன்.
ஒன்பதாவது மாடியிலிருந்த அந்த வீட்டினுள்ளே பெரிதாய் மாட்டப்பட்டிருந்த படம்…… அவனாய்  தான் இருக்க வேண்டும். யாரென விசாரித்து, “ப்ளீஸ் கம்!” என்று உள்ளே அழைத்த பணிப்பெண், என்னை அமரச் சொன்னாள்.

மாம்! நம் ஜோயியின் கண்களைப் பொருத்தியிருக்கிறார்களே! அந்த  ஆடவன் வந்திருக்கிறான்!” என்று அவள் ஆங்கிலத்தில் சொல்வது கேட்டது. சற்றே பரபரப்புடன் கூடிய காலடிகள் கூடத்தை நோக்கி வருவதை உணர்ந்தேன். என் மனம் இந்த அழகான உலகைக் காதலிக்கத் தொடங்கியது அந்த நொடியில் தான். எனக்கு பார்வையைக் கொடுத்த மகனின் தாயைச் சந்திக்க தயாராகத் துவங்கினேன்

திங்கள், 21 ஆகஸ்ட், 2017

அவ்வுலகமும் ஆன்மாக்களும்- 8

முற்பிறவிகளில் தமக்கு அறிமுகமான ஆன்மாக்களை அடையாளம் கண்டுகொள்ளும் தன்மை வாய்ந்தது நம் ஆன்மா. முதன்முதலாக பார்க்கும் ஒருவரை, முன்பே பார்த்தது போல, அவருடன் மிகவும் பழகியது போன்ற ஒரு உணர்வு நமக்கு ஏற்படுவது இதனால் தான்.

வழிதவறிய ஆன்மாக்கள்
வழிதவறிய ஆன்மாக்களில் இரண்டு வகைகள் உண்டு.

முதல் வகை:
இவை, தான் இறந்து போனதை ஏற்றுக் கொள்ளாமல், ஆவியுலகத்திற்குப் போக மறுத்து இங்கேயே சுற்றிக் கொண்டிருப்பவை. இவற்றைத் தான் நாம் பேய்கள் என்று சொல்கிறோம். குழப்பத்திற்கு உட்பட்ட இவ்வகை ஆன்மாக்கள் உதவுவதற்காக வரும் தங்களின் வழிகாட்டியை அருகில் நெருங்கவிடுவதில்லை.

இரண்டாம் வகை:
இவ்வகை ஆன்மாக்கள், வாழ்வில் தனக்கு ஏற்படும் சிரமங்களுக்கான உண்மையான அர்த்தத்தை உணராது, கீழ்மைச் செயல்களில் ஈடுபட்டு, அதனால் பலமாய் பாதிக்கப்பட்டவை.
இவை, ஆவியுலகிற்குச் செல்லும் மற்ற ஆன்மாக்களிலிருந்து வழிகாட்டிகளால் விலக்கி வைக்கப்படுகின்றன. மிகச் சில ஆன்மாக்களே இந்நிலைக்கு ஆளாகின்றன.

இவ்விடத்தில் நாம் ஒரு விஷயத்தை உணர வேண்டும்.
நம்முடைய ஐம்புலன்களால் நம் ஆன்மாவின் மீது தாக்கத்தை ஏற்படுத்த முடியும்.
உதாரணமாக நம்முடைய ஆன்மா போதைக்கு அடிமையாகிவிட்டது என்று வைத்துக் கொள்வோம். ந்தக் கட்டுப்பாடின்மை நம் ஆன்மாவின் ஆரோக்கியத்தைப் பாதிக்கக் கூடும்.  

நம் ஆன்மாவை மேம்படுத்த நம்மால் என்ன செய்யமுடியும்?
இவ்வளவு காலம் எப்படி வாழ்ந்தோம் என்பதைவிட, இனி எப்படி வாழப்போகிறோம் என்பதை மனதில் கொள்ள வேண்டும். எந்த நொடியும் வாழ்வில் ஒரு மாற்றத்தைக் கொண்டு வர முடியும் என்பதை நாம் உணர வேண்டும்.
நமக்கு உதவாத வழிமுறைகளை விலக்கி, நம்முடைய உள்மனம் சொல்பவற்றை உற்றுக் கவனிக்க வேண்டும்.

நம் மாற்றத்திற்கேற்ப நம்முடைய கர்ம பலன்களும் மாறத் துவங்குகின்றன. மாற்றத்திற்குத் தயாராய் இருக்கும் ஆன்மாக்களை negative karmaக்கள் பலவந்தமாய்ப் பின்தொடர்வதில்லை.

Orientation

இறந்தவுடன் நம்மை வரவேற்க வந்த ஆன்மாக்கள் நம்மை அவ்வுலகத்திற்குப் பழக்கிவிட்டுச் சென்றுவிடுகின்றன. 
அதன் பின்னர், நமது ஆன்மா அடுத்த இடத்தை நோக்கிச் செல்ல தயாராகிறது.
அது கண்ணிற்குப் புலப்படாத விசையால் மூடப்பட்ட பகுதியை (enclosed space) நோக்கி உந்தப்படுகிறது. அந்த enclosed space தூய்மையான சக்தியால் நிறைந்திருப்பதை ஆன்மாவால் உணரமுடிகிறது.

இப்பொழுது ஆழ்நிலைத் தூக்கத்திற்கு உட்படுத்தப்பட  ஒரு மனிதருடைய ஆன்மாவின் அனுபவம் மூலம் இவ்விடத்தைப் பற்றி அறிந்து கொள்ள முயற்சி செய்வோம்.

அந்த மனிதரின் ஆன்மா enclosed spaceசிற்குள் தள்ளப்படுகிறது. அங்கே மனதிற்கு இதமளிக்கக் கூடிய ஒளிக்கற்றையை அதனால் பார்க்க முடிகிறது. அவ்விடத்தில் சுழன்று கொண்டிருக்கும், நீராவியைப் போன்ற வாயு அவரது ஆன்மாவை இதமாய்த் தடவிக் கொடுக்கிறது.
மெல்ல மெல்ல அவரது ஆன்மா அவ்வாயுவை உறிஞ்சிக் கொள்ளத் துவங்குகிறது. இதன் மூலம் அம்மனிதருடைய ஆன்மாவின் காயங்கள் ஆற்றப்படுகின்றன.
(திட வடிவமற்ற ஆன்மாக்களுக்கு காயம் ஏற்படுமா என்று இவ்விடத்தில் நமக்கு சந்தேகம் எழக்கூடும். பூவுலகில் நம் உடலிலும் மனதிலும் ஏற்படும் காயங்கள், ஆன்மாவின் மீது emotional marksஐ விட்டுச் செல்கின்றன.)
சிறிது நேரம் கழித்து, சுழலும் வாயுவிலிருந்து வெளியேறும் அவரது ஆன்மா, இதமான ஒளிக்கற்றையில் சற்று நேரம் உலரவிடப்படுகிறது. இவ்வொளிக்கற்றை ஆன்மாவிற்குள் நுழைந்து மீதமிருக்கும் Negative வைரஸ்களை அழிக்கிறது. கொஞ்சம் நஞ்சம் ஒட்டியிருக்கும் முந்தைய பிறவியின் பந்தங்கள் இவ்விடத்தில் நீக்கப்படுகின்றன.


புதன், 12 ஜூலை, 2017

திருநங்கைகளின் ஆன்மா

Image result for third sex modern art
ஒரு ஆன்மா திருநங்கையாகப் பிறப்பெடுக்கக் காரணம் என்னவாக இருக்க முடியும்?

பொதுவாய் பாலினம் மாறி மாறி பிறப்பெடுக்கும் ஆன்மாக்கள் பல இருக்கின்றன. அதற்கு மாறாக, குறிப்பிட்ட சில வகைகளில் மட்டுமே பிறப்பெடுக்கும் ஆன்மாக்களும் இருக்கின்றன. 
அதில் ஒரு வகை,  இதற்கு முந்தைய  பிறவிகளில் ஆண்களாக மட்டுமே பிறப்பெடுத்த ஆன்மாக்கள். மற்றொரு வகை அடுத்தடுத்து பெண்களாகவே பிறப்பெடுத்தவை.  

இதில் திருநங்கைகள் எப்படி பிறப்பெடுக்கிறார்கள் என்பதற்கு  Ryuho Okawa இப்படிச் சொல்கிறார்.
முந்தைய பிறவிகளில் தொடர்ச்சியாகப் பெண்களாகவே (அல்லது ஆண்களாகவே) பிறப்பெடுத்தவர்கள், இந்தப் பிறவியில் ஆணாக (அல்லது பெண்ணாக) மாற்றி பிறப்பெடுத்ததில் திகைப்பிற்கு உள்ளாகிறார்கள். 

தற்போதைய பிறப்பிற்கான திட்டம் தீட்டப்பட்ட காலத்தில் ஏற்பட்ட பிழையாக (mistakes made while current reincarnation was still in planning stage) இதைச் சொல்கிறார் அவர்.

உதாரணமாக,  
முந்தைய பிறவிகளில் பெண்ணாக மட்டுமே பிறப்பெடுத்துப் பழகிய ஒரு ஆன்மா, இந்த பிறவியிலும் பெண்ணாகப் பிறக்க  முடிவெடுக்கிறது என்று வைத்துக் கொள்வோம்.
தன் பெற்றோர்கள் நிச்சயம் இவர்கள் தான் என்று ஒரு தம்பதியைத் தீர்மானித்துக் கொள்கிறது என்றும் வைத்துக் கொள்வோம்.. 
(இது planning stage for current reincarnationல்)

அதே நேரம், அந்த பெற்றோர்களுக்கு ஒரே ஒரு குழந்தை தான், அதுவும் ஆண் குழந்தை என்று முன்பே தீர்மானிக்கப்பட்டிருக்கிறது.

இதன் காரணமாக பெண்ணாகப் பிறப்பெடுக்க முடிவு செய்த ஆன்மா, ஆணாக பிறக்க வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகிறது.
வளரும் நேரம், பெண் தன்மை கொண்ட தான் ஆணாகப் பிறந்ததில் குழம்பிப் போகிறது. 

அதனால் அந்தச் சூழலை ஏற்றுக் கொள்ள முடிவதில்லை. இந்த பெண்ணுடல் என்னுடையது அல்ல என்று முடிவு செய்து கொள்கிறது. தன்னை மூன்றாம் பாலினம் என்று வகைப்படுத்திக் கொள்கிறது.

இந்த ஆன்மா தன் பிறப்பைச் சரியாகத் திட்டமிடவில்லை என்று கொள்ளலாம்.

மூன்றாம் பாலினர் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டியது ஒன்றே ஒன்று தான்.

எந்தப் பாலினமாக இருந்தாலும், எப்படிப்பட்ட வாழ்க்கை வாழவேண்டும் என்று முடிவு செய்யும் உரிமை அந்த நபருக்கு மட்டுமே உண்டு. 
அதனால் அவர்கள் சமூகம் பற்றிய கவலைகளை விடுத்து, தான் கற்றுக் கொள்ள  வேண்டிய விஷயங்களில், தன் ஆன்மாவை மேம்படுத்தக் கூடிய விஷயங்களில் மட்டுமே கவனம் செலுந்த வேண்டும். 
(நன்றி, Heal yourself, Ryuho Okawa புத்தகம்)

புதன், 24 மே, 2017

அவ்வுலகமும் ஆன்மாக்களும் 7


நம் உடலை விட்டுப் பிரிந்து செல்லும் ஆன்மாவிற்கு முதன்முதலில் கிடைக்கும் வரவேற்பு எப்படி இருக்கும்?
Image result for spirit world
(படம்  இணையத்திலிருந்து)


நாம் இறந்வுடன் நம்முடைய ஆன்மாவை நம்மை வரவேற்க நமது வழிகாட்டிகளோ, அல்லது Soul mates களோ, அல்லது நெருங்கிய தோழர்களோ, உறவினர்களோ வரலாம். 

வழிகாட்டிகளும், soul mates என்னும் ஆன்மாக்களும் வெவ்வேறானவை.
வழிகாட்டிகள், சிரமமான நேரங்களில் என்ன செய்ய வேண்டும் என்பதை நமக்கு உணர்த்துபவர்களாக, நம் வாழ்வில் ஒவ்வொரு நிலையிலும் நம்முடனேயே இருந்து நம்மைக் காப்பவர்களாக, இருக்கிறார்கள். 
Soul mates, நம் ஆன்மாவின் துணைவர்கள். இவர்கள் ஒவ்வொரு பிறவியிலும் நம்முடைய தோழராகவோ அல்லது உறவினராகவோ பிறப்பெடுத்து நம்முடைய சுற்று வட்டாரத்தில் இருந்து நம்மை ஆதரிப்பவர்கள்.

ஒருவர் இறந்த பின் அவரது ஆன்மாவிற்குக்  கிடைக்கும் வரவேற்பு மூன்று விதங்களில் அடங்குகிறது.
1.   அந்த ஆன்மாவின் வழிகாட்டி ஆன்மா (guide), தன்னை முன்னிலைப் படுத்திக் கொண்டு வரவேற்கத் தயாராய் இருக்கிறது.
2.   அந்த ஆன்மாவிற்கு முன்பே அறிமுகமான நபர்களின் ஆன்மாக்கள் முன் நின்று வரவேற்கின்றன.

திடீரென புதிய சூழலில், திகைப்புடன் உள்நுழையும் ஆன்மாக்களுக்கு, இவர்களைப் பார்ப்பது ஒருவித ஆறுதலைக் கொடுக்கிறது.
அதனால் இத்தகைய வரவேற்பாளர்கள் வேறு நிலைகளில் இருந்தாலும் கூட, இறந்த ஆன்மாவை வரவேற்க, அதற்கு அவ்வுலகம் பழகும் வரை துணை நிற்க வருகிறார்கள்.

                 வரவேற்க வரும் ஆன்மாக்களை நாம் blobs of energyயாக     
                 உணர முடியும், அல்லது அவை தாங்கள் முற்பிறவியில்  
                 எடுத்த உருவங்களாக  தம்மை வெளிப்படுத்திக்  
                 கொள்கின்றன.

வரவேற்க வருபவர்களின் எண்ணிக்கை ஆன்மாக்களின் முதிர்ச்சியைப் பொறுத்து மாறுபடுகிறது.
அறிமுகமான நபர்களின் ஆன்மா வரவேற்க வந்தாலும் இறந்தவரின் ஆன்மாவால், தனது வழிகாட்டி அங்கே இருப்பதை உணரமுடிகிறது.
   
                 மேலே சொன்ன இரண்டு வழிகளும் அவ்வளவாக முதிராத    
                ஆன்மாக்கள் வரவேற்கப்படும் வழிகளாகும்.

3.   மூன்றாம் விதமான வரவேற்பில், எதிர் நோக்கி அழைக்க மிகவும் குறைவான ஆன்மாக்களே வருகின்றன, அல்லது யாருமே வருவதில்லை. நன்கு முதிர்ந்த ஆன்மாக்கள் வரவேற்பாளர்களை எதிர்பார்ப்பதில்லை. அடுத்து எங்கே செல்ல வேண்டும், என்ன செய்ய வேண்டும் என்பதை அவை உணர்ந்திருப்பதே இதற்குக் காரணம்.

ஹிப்னாடிஸ்த்திற்கு உட்பட்ட மனிதர் Bயின் அனுபவங்கள்.
**********************************************************************
மனிதர் B ஆவியுலக நுழைவாயிலைக் கடந்து உள்ளே நுழைந்த நிலைக்கு, ஹிப்னாடிஸம் வழியே கொண்டு செல்லப் படுகிறார்.

அங்கிருக்கும் சூழல் அவர் மனதுக்கு இதமானதாக இருக்கிறது. எந்தக் கவலையும் பிரச்சனைகளும் இன்றி அங்கே மிதந்து திரிவது அவருக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. அவரால் அங்கிருக்கும் நண்பர்களின் ஆன்மாக்களை உணரமுடிகிறது.
அவர்களை, மென்மையான, மேகத்தைப் போன்ற தன்மை கொண்ட ஒளியாய்  உணர்கிறார். 

மேலே செல்லச் செல்ல, அந்த ஒளி மேகங்கள் அளவில் வளர்ந்து சக்திக் கோளங்களாகக் (Blobs of energy) காட்சி தருகின்றன. இவர் அவற்றை நோக்கியும், அவை இவரை நோக்கியும் இழுபடுவதை உணர்கிறார். 

அடுத்து என்ன நடக்கப் போகிறது என்பதை ஊகிக்க முடியாத நிலையில், அவரால் இடுப்பிற்கு மேலேயான பாதி மனித உருவங்களைப் பார்க்க முடிகிறது. 
அவை ஒளி ஊடுருவக் கூடிய தன்மை கொண்டவையாய் இருக்கின்றன. 
அவற்றிற்கு வாய் இருக்க வேண்டிய இடத்தில் மிக லேசான கோடு தெரிகிறது, ஆனால் அவ்வுருவங்களின் கண்கள் மட்டும் தெளிவாக…… அக்கண்கள் மனிதக் கண்களைப் போன்று இல்லாமல், கருமையான உருண்டையான விளக்குகள் போல இவரை நோக்கி ஒளி உமிழுபவையாக இருக்கின்றன. 

இப்போது அவரைச் சுற்றி பல கண்கள் இருப்பதை, அக்கண்கள் ஒளி உமிழும் வண்டுகள் போல அவரை நெருங்குவதைப் பதட்டத்துடன் உணரத் துவங்குகிறார்.

மெல்ல மெல்ல அவரால் அவற்றை அடையாளம் காண முடிகிறது. சுற்றியிருக்கும் ஆன்மாக்கள், அவருக்கு தங்களின் எண்ணங்கள் மூலம் செய்தி அனுப்பத் துவங்குகின்றன. 
அச்செய்திகள் இவரைச் சேரும் போது அவ்வுருவங்கள் மனிதர்களாய் காட்சி தரத் துவங்குகின்றன. 

இவருக்கு நன்கு அறிமுகமான ஆன்மாக்கள், முன் வரிசையில் தெளிவாகவும், பின்னால் இருக்கும் மற்ற ஆன்மாக்கள்  தெளிவற்றவையாக தெரிகின்றன. 
மனிதர் B யின் கண்களுக்கு, முன்னால் நிற்கும் அவரது முற்பிறவியின் கணவர் தெரிகிறார். இப்போது மனிதர் B க்கு தன்னுடைய முற்பிறவியின் நினைவுகள் ஒன்றன்பின் ஒன்றாக எண்ணத்தில் மோதுகின்றன. 
அவர் ஆர்வத்தோடு அவரது கணவரைக் கட்டியணைத்து தன் அன்பை வெளிப்படுத்துகிறார்.

இந்தக் காட்சி, வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு, இரண்டு ஒளிக் கோளங்கள் ஒன்றையொன்று சுற்றி வருவதாய்க் காட்சியளிக்கும் என்று சொல்கிறார்.

அடுத்து அவரால் தன் தாயை அடையாளம் காண முடிகிறது. தன் தாயின் கரங்களைப் பிடித்துக் கொள்கிறார். இதுவும் பிறருக்கு இரு ஒளிக் கோளங்கள் ஒன்றையொன்று  தழுவிக் கொள்வதைப் போலவே காட்சியளிக்கும் என்றே கூறுகிறார். 

அதன் பின்னர் அவரால் அவரது வழிகாட்டியைப் பார்க்க முடிகிறது. அந்த வழிகாட்டி இந்த மனிதரிடம் தன்னை ஒரு ஆண் தன்மை கொண்டவராக முன்னிறுத்துகிறது. ஆன்மாக்களால் தங்கள் விருப்பத்திற்கேற்ப தம்மை ஆணாகவோ, பெண்ணாகவோ மற்ற ஆன்மாக்களின் முன் காட்டிக் கொள்ள முடிகிறது.

( நன்றி, Journey of the souls புத்தகம், படத்திற்காக இணையம்)