வியாழன், 8 மார்ச், 2018

அஃறிணைக் கடவுள்


‘இன்றாவது என்னைக் கட்டுப்படுத்திக்கொண்டு மன உளைச்சலினால் யாரிடமும் கத்தக்கூடாது’ என்று அவன் நினைத்துக் கொண்டிருந்த போதே, ‘வள்’ என்றது நிக்கி. அதன் ‘வள்’ளலில் எள்ளல் பாவம் தொக்கி நின்றதாய்த் தோன்றியது. ரத்தம், நாளங்களுள் வேகமாய் பரவி, நிக்கியைக் காலால் எத்திவிடும் ஆவலைத் தூண்டியது.
‘ஓம் சாந்தி ஹி!’
‘உன்னால் என் திடத்தை உடைக்க முடியாது, போ நாயே!’
தன் உடலின் கடைப் பகுதியை அவனுக்குக் காட்டியபடி அறைக்குள் சென்றது நிக்கி.
பொதுவாய் எரிச்சலை ஏற்படுத்தக் கூடிய காரணிகள் அனைத்தும் நேற்றைய பிரம்ம முகூர்த்தத்தில் விமானமேறி பத்திரமாய் சென்னையை அடைந்துவிட்டன.
‘நானாவது… கத்துவதாவது?'
மேசையிலிருந்த காயாவை எடுத்து, அதன் மீது ஒட்டியிருந்த ஒன்றிரண்டு எறும்புகளை நசுக்காமல் தட்டிவிட்டான். எறும்புகளே! நான் உங்கள் கடவுள். உங்களைக் கொல்லாமல் ரட்சித்தேன். இதை ஒரு கவிதையாக்கி முகநூலில் போட்டால் இருபது லைக்குகளாவது பெரும் என்று தோன்றியது.
‘கணவா! உனக்கு எவ்வளவு பவர் வேணுமானாலும் இருக்கட்டுமே! அதெல்லாம் வேலையிடத்துல மட்டும் தான்! ஒரு நாள், ஒரே ஒரு நாள் நீ கத்தாம இருந்துட்டா, என் பேரை கட்டெறும்புன்னு மாத்திக்கறேன்!’
அவள் பெயரை சிற்றெறும்பு என்று மாற்றுவதில் கூட அவனுக்கு ஆர்வம் இல்லை. ஆனால் என்ன திமிர்!
காயாவை மீண்டும் அங்கே வைத்த போது, இன்னும் சில எறும்புகள்…. துணியை எடுத்து அவற்றை லாவகமாகத் தள்ளிவிட்டு மீண்டும் கடவுளானான்.
கணினியில் ஆங்கிலப் படம் ஒன்றைச் சத்தமாய் ஓடவிட்டான்.
‘காலையில எழுந்து இதில உட்கார்ந்துகிட்டா, மத்த வேலையெல்லாம் எப்படி நடக்கும்!’
சுவாரஸ்யமான படத்தின் நடுவில், கட்டெறும்பின் குரல் காலைக் கடிக்க, சினம் சர்ரென நரம்புகளுள் ஊடுருவியது. கடித்தது மனைவியின் குரல் அல்ல, நிஜ எறும்பு.
அதை அழுத்தமாய் அதே சமயம் உயிர் போய்விடாதபடிக்குப் பற்றித் தூர வீசினான். பிடித்த பிடியில் தன் கோபத்தை உணர்த்தி விட்டதாய் நினைத்தான். ஆனால் இன்று அவனுக்குச் சுரணையற்று போய்விட்டதாக எண்ணிய அவ்வெறும்பு, காதில், பின் கழுத்தில், முதுகின் கைக்கெட்டாத பகுதியில் என்று மாறி மாறி ஊரத் துவங்கியது. ஆத்திரத்தில் தெய்வ குணத்தைத் துறந்து, அதைப் பிடித்து நசுக்கினான். இருந்தும் பிரச்சனை தீரவில்லை. எழுந்து விளக்கைப் போட்டுவிட்டு பார்த்த போது, எறும்புப் படையே தன்னைக் குறி வைத்திருப்பதை உணர்ந்தான்.
எறும்புகள் வந்த திசையை ஆராய்ந்ததில், மானசி புதைத்து வைத்திருந்த சாக்லேட் துண்டு கிடைத்தது. அதைத் தூக்கி வீசி, எறும்புகளைப் பெருக்கி, நாற்காலியைத் துடைத்த போது, மலையைத் தூக்கி மறுபக்கம் வைத்த அயற்சி ஏற்பட்டிருந்தது. கணினியை அணைத்துவிட்டு அப்படியே சோஃபாவில் சாய்ந்தான். அவனுக்குச் சுகமாய் உறக்கம் வந்த நேரம் எறும்புகள் விழித்துக் கொண்டன. தலையில் கிரீடம் அணிந்து கடவுளாகி, பன்னிரண்டாவது மாடியிலிருந்து வீசுவதற்காக அவனைத் தூக்கிச் செல்லத் துவங்கின. “விட்டா, நீங்க பாட்டுக்குப் போயிட்டே இருக்கீங்க! என்னோட பவர் உங்களுக்குத் தெரியாது! உங்களை…..!” என்று கத்தியவாறு எழுந்தவனை, மூலையில் படுத்திருந்த நிக்கி அலட்சியமாய்ப் பார்த்துவிட்டு மறுபுறம் திரும்பிக் கொண்டது.