சனி, 26 அக்டோபர், 2013

அப்பா ஒரு நாய் வளர்க்கிறார்

 
அப்பா வீட்டிற்கு ஒரு நாய்குட்டியைக் கொண்டு வந்திருப்பதாக அம்மா ஃபோனில் சொன்னாள். அதிலும் வேலையற்று சுற்றிக் கொண்டிருந்த ஒரு தெரு நாய்க்கு சொந்தமானதை.
இதைச் சொல்லும் போது அவள் குரலில் எந்த ஒரு மிகைப்பட்ட உணர்ச்சியும் இல்லை. பால் வாங்க கடைக்குச் செல்கிறேன் என்பது போல் மிக சாதாரணமாய்ச் சொன்னாள். அவளின் குணமே அப்படிதான். அப்பா மேற்கே போகிறேன் என்றால் சரி என்பாள். இல்லையில்லை தெற்கே போகிறேன், அந்தப் பக்கம் தான் சூரியன் உதிக்கிறது என்றால் அதற்கும் தலையாட்டுவாள்.
என்னை பொறுத்தவரை எனக்கு இது ஒரு அதிர்ச்சியான செய்தி. அப்பாவிற்கும் நாய்க்கும் பொதுவாய் ஒத்துப் போனதில்லை. அதைக் கண்டால் அவருக்கு பிடிப்பதில்லை அல்லது பிடிக்கும் என்றும் வைத்துக் கொள்ளலாம்.
 
அம்மாவிற்கு என் தங்கையின் தலைப்பேனின் மீதுள்ள ஆர்வம் போல அப்பாவிற்கு நாய். அவர் நாயை அடிப்பதை ஒரு அழகிய சம்பிரதாயமாய்க் கருதி, அதை ரசித்து செய்வதாக தோன்றும். தெருவில் நாயைப் பார்த்தவுடன் உற்சாகத்திற்கு இணையான ஒரு உணர்ச்சி அவர் முகத்தில் தெரியும், ரகசியமாய் யாருக்கோ தெரியாமல் குறும்புத்தனம் செய்யப் போகும் குழந்தையைப் போல அந்தப் பக்கமும் இந்தப் பக்கமும் நோட்டமிட்டபடி, நாயின் கவனத்தை கவனமாய் தவிர்த்து, அரைச் செங்கல்லாக பார்த்து ஒன்றை எடுத்துக் கொள்வார். இது வரை அவர் முழுக்கல்லால் நாயை அடித்து நான் பார்த்ததில்லை. அதைப் பிடிப்பதில் ஏற்படக்கூடிய வசதியின்மை காரணமாய் இருக்கக் கூடும்.
அந்த செங்கல், அவர் கைப்பட்டதும் மட்டையில் அடிப்பதற்காக பிடிக்கப்பட்ட பந்தைப் போன்ற தோற்றத்தைக் கொண்டுவிடும். அதன் கனத்தை அளவிடுவது போல மெதுவாய் இரண்டு மூன்று முறை ஊஞ்சலாட்டுவது போல ஏற்றி இறக்குவார். அதன் பிறகு கையை பின்தள்ளி விசையோடு கல்லை முன்னோக்கி வீசினாரென்றால், அது நாயை ஏதேனும் ஒரு பகுதியில் தாக்காமல் கீழே விழாது.
ராமருக்கு பாணம் போல அப்பாவிற்கு அரைக்கல். நாயைக் கண்டால் கல்லைக் காணோம் என்ற வழக்கே அவர் அகராதியில் கிடையாது. அரைக்கல் கிடைக்கும் போதெல்லாம் அதை வீட்டின் இடப்பக்கத்தில், நான் பிறப்பதற்கு முன்பே எதற்காகவோ தோண்டப்பட்டு காரியம் முற்றுபெறாத்தால் பாதியிலேயே கைவிடப்பட்ட பள்ளத்தில், போட்டு வைத்திருப்பார். அங்கே மட்டுமின்றி வீட்டைச் சுற்றி அங்கொன்றும் இங்கொன்றுமாய் சிலவற்றைப் போட்டும் வைத்திருப்பார். எதிர்பாராத நேரத்தில், எதிர்பாராத இடத்தில் நாயைச் சந்தித்தால் எடுப்பதற்கு வசதியாய் அப்படி போட்டு வைத்திருந்திருக்க வேண்டும்.
 
நாயை அடிப்பது அப்போது அவருக்கு ஒரு விருப்பமான பொழுது போக்கென்றே தோன்றியது. அவரது குறிக்கு இலக்காவது தெருவில் அநாதையாய் திரியும் நாய்கள் மட்டுமே! ஏனோ வளர்ப்பு நாய்களை முறைப்பதோடு நிறுத்திக் கொண்டார். அது அவற்றின் முதலாளிகள் மீது அவர் வைத்திருந்த மரியாதைக்காகவோ அல்லது வீண் வம்பு வளர்க்க விரும்பாத காரணத்திற்காகவோ இருக்கக் கூடும்.

அம்மாவிடம் ஒரு முறை கேட்டதற்கு அப்பத்தா நாய் கடித்து இறந்ததிலிருந்து அப்பா நாய்களை அடிப்பதாகக் கூறினாள். இச்செயலை அப்பா செய்ததால் அதில் நூறு சதவிகிதம் நியாயம் இருப்பதாகவே நம்பினாள். நான் அதிகமாக நீதிக்கதைகளைப் படித்து வளர்ந்ததால் உயிரைத் துன்புறுத்துவது பாவம் என்று கருதினேன். இதன் காரணமாக தெரு நாய்களின் மீது அளவிற்கு அதிகமான அன்பு இல்லையென்றாலும் ஒருவித பரிதாபம் தோன்றியது.
இத்தகு பெருமைகளைக் கொண்ட அப்பாவின் நாயடி தொழில் நான் வளர வளர சற்றே தேய்ந்தாலும், அதன் மீது பாசம் வைத்து வளர்க்கும் அளவிற்கு எதிர்வினையாற்றியிருக்கும் என்று என்னால் நம்ப முடியவில்லை. நாய் குட்டியின் வருகைக்குப் பின் அவருக்கும் எனக்குமான உறவு கூட சற்று தளர்ந்து போயிருந்தது.
 
பொதுவாய் ஒவ்வொரு வாரமும் தொலைபேசும் போது, ஊரில் நடந்த அந்த வார நிகழ்ச்சிகளையெல்லாம் தொகுத்து வைத்து சொல்வார் அப்பா. நாயின் வருகைக்குப் பின் அது குறைந்து போனது.
அடுத்தடுத்த நாட்களில், நாயை தன் அருகில் படுக்க அனுமதிப்பது, அதற்கென்று கீழத் தெருவிற்கு போய் மாட்டுக் கறி வாங்கி வருவது போன்ற அப்பாவின் நாய் வளர்ப்பு பிரதாபங்கள் தொலைபேசி வழியாக காதில் விழுந்து, நம்பிக்கையின்மையை மேலும் அதிகமாக்கியதால் எனக்கு அவரது மனநிலையைப் பற்றிய சந்தேகம் ஏற்பட்டது. அது தந்த கவலையில், ஜீன் விடுமுறையில் ஊருக்கு செல்ல விமான நுழைவுச் சீட்டுகளை ஏற்பாடு செய்தேன்.
 
வீட்டிற்குள் நுழையும் போதே, அங்கே புன்னகையுடன் எதிர் கொண்ட அம்மாவை முந்திக் கொண்டு ஓடி வந்து கால்களை நக்கி வரவேற்க முயன்றது இளம் நாயாக வளர்ந்திருந்த நாய்குட்டி. சங்கீதா சட்டென்று திண்ணையின் மீது தவ்வி உட்கார்ந்து கால்களை மடித்துக் கொண்டு அதை அசூயையுடன் பார்த்தாள். ரேணு தாயின் மடியில் அமர்ந்தபடி நாயை சந்தேகமாய் பார்த்தது. நாய், யாரென்று அறிந்துக் கொள்ளும் ஆர்வத்தோடு மூச்சிறைக்க என்னை சுற்றி வந்துவிட்டு, திண்ணையில் அமர்ந்திருந்த அவர்களை அண்ணாந்து பார்த்தது.

அம்மா சிரித்தபடி, “ராமு கடிக்க மாட்டான். தைரியமா வாங்க” என்றாள். அதைத் தூக்கிக் கொண்டாள். எனக்கு தெரிந்து என் தெருவில் வளரும் மூன்றாவது ராமு இது. இதனோடு தான் தங்க வேண்டுமா என்று விழிகளாலேயே கேட்டாள் சங்கீதா. அவளின் கண் பேசும் வார்த்தைகளின் அர்த்தம் தெரியாமல் திகைக்கத் தேவையின்றி, இந்த ஆறு வருடங்களில் அதை புரிந்துக் கொள்ளும் ஆற்றலைப் பெற்றிருந்தேன். பதிலேதும் சொல்லாமல் அம்மாவின் பக்கம் பார்வையைத் திருப்பி அவளைப் பின் தொடர்ந்தேன்.
 
அப்பா தோட்டத்தில் இருந்த நாய் வீட்டை செப்பனிட்டுக் கொண்டிருந்தார். “வாப்பா! நல்லாயிருக்கியா, பயணமெல்லாம் நல்லாயிருந்ததா?” என்று கேட்டுவிட்டு பதிலை எதிர்பார்க்காமல்,
“இவ்வளவு நேரமா வெளிய தான் இருந்தேன். இப்பத்தான் இதை முடிச்சுடலாம்ன்னு வந்தேன். இன்னும் கொஞ்சம் தான்! உள்ள உட்காருங்க, வந்திடறேன்” என்றுவிட்டு தன் பணியைத் தொடர்ந்தார்.
சாப்பிடும் போது ரேணுவிடம், ராமுவின் விளையாட்டுகளையும் பயங்களையும் பற்றி சொல்லிக் கொண்டிருந்தார். அவரது தற்குறிப்பேற்றிய பேச்சில் ரேணு மயங்கி, அடுத்து வந்த நாட்களில், நாயின் ஒவ்வொரு அசைவிற்கும், குரைப்பிற்கும் அர்த்தம் கண்டுபிடிக்க தொடங்கி, ஐந்து நாட்களில் ஒரு சொற்பொருள் அகராதி போடுமளவு முன்னேறியிருந்தாள்.
ராமுவிற்கு பேருக்கு தான் தோட்டத்தில் வீடு, அதன் இருப்பு முழுவதும் நாங்கள் புழங்கிய எங்கள் வீட்டிற்குள் தான். சமையலறையிலிருந்து படுக்கையறை மெத்தை வரை அனைத்தையும் பயன்படுத்த முழு உரிமையையும் பெற்றிருந்தது அது.
 
“நாம வேணுமானால் அதோட வீட்டிற்கு போயிடலாம்!” என்றாள் சங்கீதா நக்கலாக.
வீட்டு விருந்தாளி என்ற மரியாதைக் காரணமாகவோ என்னவோ அது அவளை மட்டும் அவ்வளவாக சீண்டுவதில்லை. எனக்கு அதன் இருப்பு பழகிவிட்டது என்றாலும், அது எப்போதும் காலை நக்க முயற்சிப்பது மட்டும் சங்கடமாய் இருந்தது.

ரேணு அதனோடு நன்றாக சினேகமாகி விட்டிருந்தாள். அப்பா எங்கே போனாலும் உடன் ரேணுவும் ராமுவும் போய்வந்தார்கள். அவர்கள் மூவரும் ஒரு சிறந்த கூட்டணியை அமைத்துவிட்டதாய் தோன்றியது. அப்பா ஊரில் அனைவருக்கும் பெருமையாய் பெயர்த்தியைக் காட்டினார். ராமுவும் ரேணுவைக் காணும் போதெல்லாம் வாலை வேகமாய் ஆட்டி மகிழ்ச்சியைக் தெரிவித்தான். ரேணுவிற்கு எங்கள் ஊர் பெட்டிக் கடைகளில் விற்ற தேன்மிட்டாய்களை மிகவும் பிடித்து விட்டது. வீட்டிற்கு வரும் போது கைநிறைய மிட்டாய்களை அள்ளி வருவாள். அதன் சுகாதாரத்தைப் பற்றிய சந்தேகத்தில் சங்கீதா மறுப்புக் குரல் எழுப்பியது கூட அவளை பாதிக்கவில்லை.
 
கொஞ்சம் நாட்களில் ராமு என்னை சலனப்படுத்தாத அளவிற்கு மாறிப் போயிருந்தான். அல்லது நான் அவனுக்கேற்றார் போல மாறிவிட்டேன். அப்பா சுறுசுறுப்பாய் சுற்றி வந்ததே, எனக்கு ராமுவைப் பிடிக்க போதுமான காரணமாய் இருந்தது. சங்கீதாவும் அதைப் பற்றி பெரிதாய் அலட்டிக் கொள்ளாமல் கிளம்பும் போது எடுத்துச் செல்ல மிளகாய்த் தூளும், சாம்பார்ப் பொடியும் அரைத்து பேக் செய்வதில் கவனம் செலுத்தி, ராமுவைப் பற்றிய கவலைகளைக் குறைத்துக் கொண்டிருந்தாள்.

ஊருக்கு செல்லும் நாள் நெருங்க நெருங்க நெஞ்சிலிருந்து கவலைப் பந்து மேலெழுந்து தொண்டையை அடைக்க ஆரம்பித்தது. அம்மா, அப்பாவின் முகங்களிலும் வேதனையைக் காணமுடிந்தது. மறுநாள் விமானத்திற்கு பெட்டியெல்லாம் கட்டி கூடத்தின் ஒரு மூலையில் வைத்துவிட்டு திண்ணையில் அமர்ந்த போது அப்பா பக்கத்தில் அமர்ந்தார். ரொம்ப நாட்கள் கழித்து அப்படி அமர்வது மனதிற்குள் சொல்ல முடியாத ஒரு உணர்ச்சியை ஏற்படுத்தியது. மற்றவர்களெல்லாம் உள்ளே படுத்துவிட்டிருந்தார்கள். அந்த நேரத்து மௌனத்தைக் கலைக்க மனமின்றி நான் மரங்களுக்கிடையே மறைந்திருந்த நிலவைத் தேடிக் கொண்டிருந்தேன்.
 
திடீரென்று, “ஏம்ப்பா! ரொம்ப சிரமப்பட்டு வேலை செய்யாத! வீட்டில கொஞ்சம் நேரம் செலவழிக்கணும்ப்பா. இல்லைன்னா வாழ்க்கைக்கு அர்த்தமே இல்லாம போகும்” என்றார் அப்பா .
சங்கீதா நான் ஓவர் டைமில் மூழ்கிக்கிடப்பதை மாமனார் மாமியாரிடம் சொல்லியிருக்கிறாள்!
“இந்த வயசுல குழந்தையோட நேரத்தை செலவு செய்யலைன்னா, பின்னால நினைச்சா கூட அதுக்கு வாய்ப்பு வராதுப்பா!”
அதை ஆமோதிப்பது போல மௌனமாய் இருந்தேன்.
பிறகு என்ன நினைத்தாரோ,
‘நீ வேலைக்குன்னு ஊரவிட்டு கிளம்பி போயிட்ட பிறகு வெறிச்சுன்னு போயிடுச்சுப்பா! நீ சின்னதா இருந்தப்ப நான் வேலைய விட்டு வீட்டுக்கு வந்தா, நான் வரத எப்படி தெரிஞ்சுப்பியோ, ஓடி வந்து வாசல்ல நிப்ப. நானும் அதை எதிர்பார்த்து எதையாவது வாங்கிட்டு வருவேன்”
அவர் என்ன வாங்கி வருவார் என்ற ஆர்வம் மேலோங்க உள்ளும் புறமும் அலைந்தது எனக்கு நன்றாய் நினைவிருந்தது.
“பெரிசா ஆக ஆக ஓடி வரலைன்னாலும் என்னோட வரவ நீ மனசுக்குள்ள எதிர் பாக்கறது நல்லா தெரியும். பக்கத்துல உட்காருவ அன்னிக்கு பள்ளியில என்ன நடந்ததுன்னு சொல்லுவ . . .”

அப்போதெல்லாம் அப்பாவுடன் எல்லாவற்றையும் பகிர்ந்துக் கொள்ள வேண்டும் என்ற ஆசை. என் சாதனைகளைச் சொல்லி அவரை ஆச்சரியபடுத்த முயற்சித்திருக்கிறேன்.
“நீ சிங்கப்பூருக்கு கிளம்பி போன பிறகு இனி வாழ்க்கையில என்ன இருக்குன்னு தோண ஆரம்பிச்சுது.”
ஆரம்பத்தில் தினமும் தொலைபேசி பிறகு வேலைப்பளுவில் இரண்டு நாட்களுக்கு ஒரு முறையாக குறைத்து, திருமணத்திற்கு பின் வாரம் ஒருமுறையாக மாறிப்போனது.
“ராமு வந்த பெறகு சித்த பரவாயில்லை!” என்று தனக்குள் சொல்லிக் கொண்டார் .
எனக்கு பேசமுடியாமல் தொண்டையை அடைத்தது.

மறுநாள் வாடகைக் காரில் ஏறுகையில் ராமுவிடம்,
“பை சொல்லுடா ராமு!” என்றார் அப்பா. ராமு உடல் பதற வாலை ஆட்டிக் கொண்டிருந்தான்.
ரேணு ராமுவிற்கு கை காட்டிவிட்டு உள்ளே ஏறினாள்.
கார் நகர ஆரம்பித்ததும்,
“ஏம்ப்பா நாம இவங்களையெல்லாம் கூட்டிட்டு போகக்கூடாது?” என்றாள்.
பதிலேதும் சொல்லாமல் நான் பின்னால் திரும்பிப் பார்த்தேன். அப்பாவும் அம்மாவும் ராமுவும் தூரத்தில் கலங்கலாய் தெரிந்தார்கள்.
                                                                             
                                                                                           திண்ணை.com   23/9/2013
                                                                                           படம் இணையத்திலிருந்து
                                                                                                     

செவ்வாய், 27 ஆகஸ்ட், 2013

ஒரு வழக்கமான திங்கள்


 
    பவிக்கு ஏழு வயசு. அவளுக்கு பட்டாம் பூச்சிகள் என்றால் ஆசை. ஒரு பாடல் காட்சியில் தொலைக்காட்சிக்குள் பறந்த வண்ண வண்ண பட்டாம் பூச்சிகள் அவளுக்குள் ஈர்ப்பை ஏற்படுத்தியிருந்தன. கறுப்பில் மஞ்சள் பொட்டுக்கள் வைத்த பட்டாம் பூச்சி, சிவப்பில் கறுப்பு கோடுகள் போட்ட பட்டாம் பூச்சி என அவளைக் கவர்ந்தவற்றை மனதிற்குள் பட்டியலிட்டு வைத்திருந்தாள்.

    அதே போல மழைக் காலத்தில் தரையில் ஊர்ந்து போகும் நத்தைகளின் மீதும் அவளுக்கு அலாதி பிரியம். தான் புத்தக மூட்டையைச் சுமப்பது போல தன் ஓட்டை முதுகில் சுமந்துச் செல்லும் நத்தைகள் அவளுக்குள் பிரமிப்பை ஏற்படுத்தியபடியே இருந்தன. நேர் கோட்டில் மெதுவாய் நகரும் அவற்றுடன் பேச முயற்சித்திருக்கிறாள். ஒருமுறை வரிவரியாய் கோலமிடப்பட்டிருந்த அவற்றின் ஓட்டைப் பார்த்தபடி,

உன் வீடு எங்க இருக்கு?’

நீ என்ன சாப்பிடுவ?’

நீ பள்ளிக்கு போவியா’,

உன் ஆசிரியர் உன்னை திட்டுவாங்களா?’

என்று அவள் கேட்ட கேள்விகளை அவை தம் மௌனத்தால் கடந்து சென்றுவிட்டன. அவை தரையில் இழுத்துச் செல்லும் ஈரக்கோட்டை வெறித்தபடி நின்றிருந்தாள். கேள்விக்கான விடைகளை அவை தன் ஓட்டிற்குள் மறைத்து வைத்திருப்பதாய் நினைத்தாள் அவள். பதிலைத் தேடி, மனிதர்களின் காலடி பட்டு நசுங்கிக் கிடக்கும் நத்தை ஓடுகளை கூர்ந்து கவனித்திருக்கிறாள். அவள் தேடிய விடைகள் காற்றில் கரைந்து போய் உள்ளே வெறுமையாய் இருந்தது. என்றேனும் ஒரு நாள் நத்தைகளை நாய்களைப் போல பழக்கி தன்னுடன் வைத்துக் கொள்ளவேண்டும் என்று சொல்லிக் கொள்வாள்.

நத்தையைப் போல அவளைக் கவர்ந்த மற்றொன்று தொலைக்காட்சி. அவளுக்கு நினைவு தெரிந்த நாளாய் வீட்டில் இருக்கும் ஒரு பொருள் அது. அதனுள் இருக்கும் மனிதர்கள் அவளுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்துபவர்களாய் இருந்தனர். ஒரு முறை வசந்தம் தொலைக்காட்சியில் பிரசவக் காட்சி ஒன்றை ஆர்வத்தோடு பார்த்தபடி இருந்தாள். திடீரென்று காட்சி மாறிப்போனது. ஆவல் உந்தித் தள்ள, அம்மாவிடம்சீக்கிரம் ரிமோட்டை எடுத்து மாத்தும்மா! அறைக்கு உள்ளே போ! நான் பாப்பாவை பார்க்கணும்!” என்றாள். அம்மா  சிரித்தபடி அதெல்லாம் முடியாது என்று விளக்கியதை பவியால் கடைசி வரை புரிந்துக் கொள்ளவே முடியவில்லை.

இந்த கொண்டாட்டமெல்லாம் சனி ஞாயிறுகளில் மட்டுமே!

அவள் மிகவும் வெறுப்பது திங்கட்கிழமை காலைகளை. . . 

அன்று திங்கட்கிழமை. அவளுக்கு கண்ணைத் திறக்கவே சிரமமாய் இருந்தது. எழுந்து பள்ளிக்கு கிளம்புமாறு அம்மா குரல் கொடுத்துவிட்டு போனாள். சமையலறையில் பாத்திரங்கள் உருளும் சத்தம் கேட்டது. குக்கர் சத்தமாய் விசில் கொடுத்து அடங்கியது. கொஞ்சமாய் கண்ணைத் திறந்து பார்த்தாள் பவி. அறைக்குள் இருந்த லேசான இருளில் பொருட்கள் கோட்டு வடிவமாக தெரிந்தன. இன்னும் ராத்திரி முடியவில்லையோ என்று தோன்றியது அவளுக்கு.

கடிகாரத்தை உற்று பார்த்தாள். ஒரு முள் ஆறிலும் இன்னொரு முள் இரண்டின் பக்கத்திலும் இருந்தது. இப்போது மணி ஆறா? இரண்டா? இருட்டைப் பார்த்தால் இரண்டாகத் தான் இருக்க வேண்டும் என்று தோன்றியது. அம்மாவின் அழுத்தமான காலடி ஓசை அறையை நோக்கி விரைந்து வந்தது. சட்டென்று போர்வையை முகம் வரை இழுத்துப் போர்த்தி  கண்களை மூடிக் கொண்டாள் பவி. குக்கர் இன்னொரு முறை விசிலடித்து விட்டு ஓய்ந்தது.

பவி! எழுந்திரு. ஸ்கூலுக்கு நேரமாயிடுச்சி!”

கண்களை இறுக்க மூடிக் கொண்டாள் அவள்.

இப்ப எழுந்துக்கறியா இல்லையா?”

“ ......... ”

சரி இன்னும் பத்து எண்ணுவேன். அதுக்குள்ள எழுந்திருக்கலைன்னா உங்க டீச்சருக்கு போன் அடிச்சிடுவேன்.”

போகும் போது மின்விசிறியை நிறுத்திவிட்டு, மின்விளக்கை போட்டுவிட்டு போனாள் அம்மா.

இனி  படுத்திருக்க முடியாது. ச்சே, இந்த திங்கட்கிழமை ஏன் தான் வருகிறதோ என்று இருந்தது பவிக்கு. அவளுக்கு மிகவும் பிடித்தது ஞாயிற்றுகிழமை. காலை நேரம் கழித்து எழுந்திரிக்கலாம், டி.வி பார்க்கலாம், கோழி சாப்பிடலாம். ஆனால் ஞாயிறு சாயந்திரங்களை அவளுக்கு பிடிப்பது இல்லை. வீட்டுப் பாடங்கள் எழுதி முடிப்பதற்குள் போது போதும் என்று ஆகிவிடும். அதிலும் அம்மா பக்கத்தில் உட்கார்ந்து கொண்டால் அவ்வளவு தான்.

கையெழுத்து ஏன் இப்படி போகுது?’

என்று  அழித்து மறுபடி எழுத வைப்பாள். இல்லையென்றால், இந்த வார்த்தைக்கு என்ன அர்த்தம் தெரியுமா என்று எதையாவது கேட்பாள். பவிக்கு சில ஆங்கில வார்த்தைகளுக்கான  அர்த்தத்தை ஒரு முறை சொல்லிக் கொடுத்தால் நினைவில் நிற்பதே இல்லை. வார்த்தைகளை ஏன் இவ்வளவு சிரமப்பட்டு அமைத்திருக்கிறார்கள் என்று யோசித்துப் பார்த்திருக்கிறாள். முதலில் இவ்வளவு வார்த்தைகள் எதற்கு என்றே அவளுக்கு புரியவில்லை. வார்த்தைகளை இன்னும் எளிதாக வடிவமைத்திருக்கலாம் என்று அவளுக்கு தோன்றியது. மோட்டார் காடி என்று சிரமப்பட்டு சொல்வதற்கு பதில்டுர்ர்ர்என்று வைத்திருக்கலாம். விலங்குகளுக்கும் அவற்றின் சத்தத்தை  ஒட்டியே பெயரை வைத்திருக்கலாம். அதாவதுபூனைக்கு பதில்மியாவ்’, நாய்க்கு பதில்லொள் லொள்’. இப்படி நிறைய யோசித்து வைத்திருக்கிறாள் அவள்.

இந்த விஷயத்தில் அவளுக்கு கணினியின் மீது சற்று பொறாமை உண்டு. எவ்வளவு விஷயங்களை நினைவில் வைத்துக் கொள்கிறது, அது! எலியைப் பற்றிக் கேட்டாலும் சொல்கிறது, சாங்கியிலிருக்கும் ஏரோப்ளேனைப் பற்றி கேட்டாலும் சொல்கிறது! உலகிலேயே சிறந்த அறிவாளி யாரென்று கேட்டால், கம்ப்யூட்டரே என்று கண்ணை மூடிக் கொண்டு தைரியமாய் சொல்வாள் பவி. ஆனால் வழக்கம் போல அப்பா இதை ஒத்துக் கொள்வதில்லை. அதற்கு செயற்கை மூளை என்று சொல்வது அவளுக்கு புரியவில்லை! எந்த மூளையாய் இருந்தால் தான் என்ன? ஞாபகம் வைத்துக் கொள்வது பெரிய விஷயம் இல்லையா?  நினைவில் வைத்துக் கொள்ள முடிந்தால் அம்மாவிடம் திட்டு வாங்க வேண்டியது இல்லையே!

அவளுக்கு மிகவும் பிடித்த நாள் வெள்ளிக்கிழமை. ஒவ்வொரு வெள்ளிக் கிழமை மதியமும் மொட்டு விடும் மகிழ்ச்சி மாலையில் மலர்ந்து, சனி தொடர்ந்து, ஞாயிறு மதியம் வரை நீடித்து பின் திங்கட் கிழமைக்கான ஆயத்தங்களில் தொலைந்து போகும்.

இன்னும் எவ்வளவு நேரம் அப்படியே நிக்கப்போற? சீக்கிரமா வந்து பல்லை தேய்க்கறியா இல்லையா?”

கதவைத் திறந்தவுடன் குப்பென்று வெந்த பருப்பின் வாடை முகத்தில் மோதியது.

மணிடூ ஓ க்ளாக்தானேம்மா ஆகுது! ஏம்மா இவ்வளவு சீக்கிரம் எழுப்பற!”

உனக்கு இன்னும் ட்டூவிலேயே உட்கார்ந்திருக்கு. மணி சிக்ஸ் தர்ட்டி ஆகப்போகுது! சீக்கிரம் போய் வேலையைப் பாரு.”

பவி பல்லைத் தேய்த்து குளித்து முடிப்பதற்குள் நிறைய முறை ஏச்சு வாங்க வேண்டி இருந்தது.

எருமை மாடு மாதிரி அப்படியே நிக்காதே சீக்கிரம் தேயி. வயசு  எட்டு ஆகுது! இன்னும் ஒழுங்கா பல்லைத் தேய்க்க தெரியல!”

எருமை மாடு என்ற வார்த்தை மட்டும் ஏனோ பவிக்கு அப்படியொரு கோபத்தை  ஏற்படுத்தியது.

அம்மா! என்னை எருமை மாடுன்னு சொல்லாத!”

பின்ன! சீக்கிரம் வேலைய முடிகாம அங்க என்ன வேடிக்கை!”

சோப்பை வச்சிகிட்டு விளையாடாதே! நேரமாகுது!”

குளித்து, சீருடையெல்லாம் போட்டுக் கொண்ட பின் தான் ஆசிரியர் பெற்றோரிடம் கையெழுத்து வாங்கி வரச் சொல்லி, வெள்ளியன்று கொடுத்த தாளின் நினைவு வந்தது. அந்த தாள் எங்கே? பையில் வேகமாய் தேடினாள். இல்லை! அவளுக்கு பக்கென்றானது. அவள் புத்தகங்கள் வைக்கும் அடுக்கில் தேடினாள். அங்கும் இல்லை.  மறுபடி பையைக் குடைந்தாள்.

இன்னும் என்ன பவி பண்ணற! சீக்கிரம் வந்து இந்த பாலைக் குடி!” 

அம்மா! அன்னிக்கு உங்கிட்ட ஒரு பேப்பர் காட்டினேனே! அதைப் பார்த்தியா?”

இல்லையே! ஒழுங்கா ஒரு இடத்தில வச்சா தானே இருக்கும்! உனக்கு எதை வச்சி விளையாடுறதுன்னே இல்லை! காலையில தான் உனக்கு அந்த நினைப்பெல்லாம் வரும். நாளைக்கு கொடுத்துக்கலாம் கிளம்பு!”

இல்லம்மா! ஆசிரியர் திட்டுவார்! நான் ஸ்கூலுக்கு போகலை!” என்று அழ ஆரம்பித்தாள். இன்று கண்டிப்பாய் பள்ளிக்கு செல்லக் கூடாது  என்று முடிவு செய்துக் கொண்டு அடம் பிடிக்கத் தொடங்கிய நேரம், அந்தத் தாள் புத்தகங்களைக் கலைத்துப் போட்டு தேடிய அம்மாவின் கையில் கிடைத்தது.

அம்மாவைப் பார்க்க ஆத்திரமாய் வந்தது பவிக்கு.

அம்மாவுக்கு படிக்க பாடங்கள் இல்லை! எழுத வீட்டுப்பாடம் இல்லை! பள்ளிக் கூடம் போக வேண்டியதில்லை! ச்சே எல்லாம் எனக்கு தான்.’ என்று மனதிற்குள் சலித்துக் கொண்டாள்.

தான் சீக்கிரம் பெரியவளாகிவிட வேண்டும் என்றும் அப்போது பள்ளிக்கூடம் பக்கமே செல்லக்கூடாது என்றும் நினைத்துக் கொண்டாள்.

 

நான் எப்பம்மா பெரிசாவேன்!”

நல்லா படி! நல்லா சாப்பிடு! சீக்கிரம் பெரிசாயிடுவ!”

ஏம்மா படிக்கணும்?”

அப்ப தான் நல்ல வேலைக்கு போக முடியும்!”

ஏம்மா வேலைக்கு போகணும்?”

அப்ப தான் நல்லா சம்பாதிக்கலாம்!”

ஏம்மா சம்பாதிக்கணும்!”

நீ நினைக்கறதையெல்லாம் வாங்கணும்ன்னா, நிறைய பணம் வேணும்! நல்லா சம்பாதிச்சா தானே பணம் கிடைக்கும்!”

பணம் வேணும்ன்னா ஏ.டி.எம் ல எடுத்துக்கலாமே! அதுக்கு ஏம்மா கஷ்டப்பட்டு படிக்கணும்?”

அம்மாவின் பொறுமை கழன்றுக் கொண்டது.

இப்போ உன்கூட பேசிகிட்டு இருக்க நேரமில்லை! முதல்ல சாக்ஸைப் போடு!”

அம்மா! சனிக்கிழமை எப்போம்மா வரும்

ம்ம்ம் . . . வரும் வெள்ளிக் கிழமைக்கு அப்புறம்! முதல்ல கிளம்பு

ச்சே! இந்த அம்மா இப்படி தான்!’ என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டே காலணியை அணியத் தொடங்கினாள்.

தொலைக்காட்சிக்கு இருப்பதைப் போல தினசரி வாழ்க்கைக்கும் ஒரு ரிமோட் இருந்தால் எவ்வளவு நல்லாயிருக்கும் என்று நினைத்துக் கொண்டாள். திங்கட்கிழமைகளை, பரீட்சைகளை எல்லாம் ஓட்டிவிடலாம். விடுமுறை நாட்களையெல்லாம்ப்பாஸ்செய்து நிறுத்தி விடலாம்.

என்ன கனவு கண்டுகிட்டே நிக்கற!’ என்றபடி

உடுப்பை மாற்றிக் கொண்ட அம்மா, திவ்யாவின் பையை எடுத்துக் கொண்டாள். அவளது கையை கெட்டியாகப் பிடித்துக் கொண்டு, இந்த வாரம் சீக்கிரம் சனிக்கிழமை வரவேண்டும் என்று மனதிற்குள் வேண்டியபடி நடக்கத் தொடங்கினாள் பவி. இப்படியாக அந்த வாரயிறுதியை நோக்கி பவித்ராவின் நாட்பயணம் தொடங்கியது.

 

 

புதன், 31 ஜூலை, 2013

தொலைந்து போன வார்த்தைகள்


ராமசுப்பு தாத்தா படியிறங்கிக் கொண்டிருந்தார். கைப்பிடியைக் கெட்டியாய் பிடித்துக் கொண்டு, ஒரு காலால் அடுத்திருந்த படியை கவனமாக தடவிப் பார்த்து, பாதத்தை பதிய வைத்து, ஒரு நொடி தயங்கி, பிறகு அடுத்த காலை சற்று தைரியமாக முன்வைத்து, மூன்று நொடிகள் நிதானித்தார். பின் மறுபாதத்தை தயக்கத்துடன் நீட்டி படியைத் தடவினார்.

     எழுபத்தியிரண்டு வயது. சுருக்கங்கள் நிறைந்த தோல், அவரது எலும்புக் கூட்டிலிருந்து தனித்து தெரிந்தது. வயது அதிகமாய் இருந்தாலும் அவருடைய தலைமுடி பெரும்பாலும் நரைக்காதது ஆச்சரியம். அடர்ந்து இல்லாவிட்டாலும் தேவையான அளவு இருந்தது. அதை எண்ணை போட்டுப் படிய சீவியிருந்தார்.

இது இல்லன்னு யாரு அழுதா? மூணு மாசத்துக்கொரு முறை முடிவெட்டுறவனுக்கு அஞ்சு வெள்ளி கொடுத்து மாளல! ஆண்டவன், கேக்கறவனுக்கு கொடுக்கக் கூடாதா?’ என்று அலுத்துக் கொள்வார்.

     அந்த அலுப்பைக் கேட்க கூட இப்போது ஆளில்லாமல் போய்விட்டது. இரண்டு மாதங்கள் முன்பு வரை, அவரது மனைவி ஜெயலட்சுமி இருந்தாள். பிடிக்கிறதோ இல்லையோ, எல்லாவற்றையும் காது கொடுத்து கேட்பாள். முடிந்தால் பதிலுக்கு இரண்டு வார்த்தை சொல்லி வைப்பாள். கிழவருக்கு அதிலேயே திருப்தி ஏற்பட்டுவிடும். இல்லாவிட்டாலும் புராணத்தை தொடரத் தான் செய்வார்.

     வயசாகிவிட்டால் பேசுவதற்கு ஆள் துணை முக்கியமாய் தேவைப்படுகிறது. பொதுவாக இவர் போவோர் வருவோரையெல்லாம் இழுத்து வைத்து பேசக்கூடிய ரகம் இல்லையென்றாலும் கடந்த ஒரு வருடமாக இப்படி ஒரு பழக்கம்.

பக்கத்தில் யாரும் இல்லாவிட்டாலும் கூட

என்னம்மா கவிதா, உள்ளே அடுப்புல ஏதோ கொதிக்கறா மாதிரி இருக்கு! என்ன வச்சிருக்க ?’ என்பார்.   மருமகளுக்கு கோபம் வரும்.

இதெல்லாம் இவருக்கு எதுக்கு? எதுவா இருந்தாலும் சாப்பிடத் தானே போறோம்!’ என்று கணவனின் காதைக் கடிப்பாள்.

ஏண்டா, முடிய ஒட்ட வெட்டக்கூடாதா? இது என்ன பொம்பள புள்ள மாதிரி நீளமா?’ என்றால், பேரன் முகம் சுளிப்பான்.

தாத்தா சுத்தபோர்ம்மாஎன்பான்.

     ஜெயம் தான் இடையில் புகுந்து எதையாவது சொல்லி சமாளிப்பாள். இதற்கு பயந்துக் கொண்டே பிள்ளைகள் யாரும் அநாவசியமாய் இவர்களைக் கூப்பிடுவது இல்லை. அவர்களாக இந்தப் பக்கம் எட்டிப் பார்ப்பதும் கிடையாது.

      இவருக்கு மூன்று பிள்ளைகள். அனைவருக்கும் திருமணமாகி விட்டது. மூத்தவன் புக்கித் பாத்தோக்கில் இருக்கிறான். அவனுக்கு இரண்டு பெண்கள். அடுத்தவன் ஆஸ்திரேலிய மோகத்தில் அங்கே கிளம்பிவிட்டான். ராமசுப்புவுக்கு இது சுத்தமாய் பிடிக்கவில்லை. ‘அது என்ன? படிக்கிறதெல்லாம் இங்கென. பெறவு அங்கென போயி தங்கிடனும்னா எப்படி? எல்லோரும் இப்படி போயிட்டா, இங்குள்ள வேலைகளுக்கு வெளிநாட்டு ஆளுங்களை நம்பாம வேற என்னத்த செய்யறது?’ என்பார்.

மருமகளும் சேர்ந்தல்லவா இதுக்கு தாளம் போட்டாள்! எது அப்படியோ அவனுக்கு இரண்டு பிள்ளைகள். எங்க இருந்தாலும் நல்லாயிருக்கட்டும்.’ என்று எண்ணிக் கொள்வார்.  

     இளையவனுக்கு ஒரே மகன். இங்கே செம்பவாங்கில் தான் இருக்கிறான். இவனுக்கு ஊரிலிருந்து பார்த்துப் பார்த்து பெண் எடுத்தார்கள். எங்கிருந்து வந்தால் தான் என்ன? இந்த காலத்துப் பெண்களுக்கு கூட்டுக் குடும்பம் பிடிப்பதில்லை. வயதானவர்களை பாரமாய் தான் நினைக்கிறார்கள்.

     இதோ ஜெயம் சாவுக்கு எல்லோரும் தான் வந்தார்கள். யாரும் பேச்சுக்குக் கூடவாஎன்று கூப்பிடவில்லை. ‘அப்படியென்ன உறவு வேண்டியிருக்கிறது!’ என்று இவரும் அது பற்றி பேசவில்லை. முதலிலிருந்தே அப்படி தான்! ஜெயம் தான் அப்பாவிற்கும் பிள்ளைகளுக்கும் நடுவில் பேச்சுப் பாலமாய் இருந்தாள். இப்போது அதுவும் அறுந்துவிட்டது.

     ஒரு பெண்ணைப் பெற்றிருந்தால் நினைத்துப் பார்த்திருப்பாளோ! மகன்களுக்கு தொலைப்பேசியில் பேசக் கூட நேரம் இருப்பதில்லை. என்னவோ கடவுள் செய்த புண்ணியம் மாதாமாதம் ஆளுக்கு நூறு வெள்ளி அனுப்புகிறார்கள். சாப்பிடுவதற்கு இருக்கிறதோ இல்லையோ மற்ற செலவுகளுக்கு காசு வேண்டியிருக்கிறதே! யாரிடமாவது தன் கஷ்டங்களைச் சொன்னால் பரவாயில்லை என்று அவருக்குத் தோன்றியது.

     மின்தூக்கியில் நுழைந்து முதலாம் எண்ணை அமுக்க, அவசர அவசரமாய் ஒரு இளைஞன் உள்ளே நுழைந்தான். நெடிய உருவம், முடி சிவப்பு சாயமேற்றப்பட்டு குச்சி குச்சியாய் நின்றுக் கொண்டிருந்தது. சீன மொழியில் செல்பேசிக் கொண்டிருந்தான். அவனையே இமைக்காமல் பார்த்தார். மார்புக்கூடு மூச்சு விடுவதற்கு ஏற்ப ஏறியிறங்கிக் கொண்டிருந்தது.

கொஞ்சம் காசு சம்பாதிக்க ஆரம்பித்ததும் இவர்களுக்கெல்லாம் ரெக்கை முளைச்சிடுது. அப்பா, அம்மாவ பத்தி கவலைப் படாம தன்னை மட்டும் பார்த்துக்கறாங்க!” என்று முனகிக் கொண்டார்.

     ப்ளாக்கிற்கு கீழேயே கோப்பிக் கடை இருந்தது, அவருக்கு மிகவும் வசதியாய் போய்விட்டது. மனைவி போனதிலிருந்து, எல்லாம் கடை தான். வீட்டுச் சாப்பாட்டிற்காக அவர் நாக்கு ஏங்கியது. அதைவிட பேசுவதற்கு ஆளில்லாதது தான் மிகப்பெரிய குறையாய் தெரிந்தது. இளமையில் பேசுவதற்கெல்லாம் நேரமிருந்ததில்லை.

ஊரைவிட்டு பொழைக்க வந்துட்டோம். கையில காசில்லாம திரும்பிப் போனா எவன் மதிப்பான்?’ என்ற பயமே அவரை வேலை செய்ய உந்தியது. இரவு பகலென்று பார்க்காமல், ஓரோர் சமயம் ஒரே நேரத்தில் மூன்று வேலைகளெல்லாம் கூட செய்திருக்கிறார்.

     குடும்ப பராமரிப்பில்  மனைவி ஜெயத்தின் பங்கே அதிகம். வீட்டின் எந்த ஒரு பிரச்சனையும் அவர் வரை வர விடாமல் அவளே சமாளித்தாள். காசே இல்லாத நேரத்திலும் முகம் சிணுங்காமல், நிரவி நிரவி செலவுகளை சமாளித்திருக்கிறாள். அவள் அப்படி இருந்தது தவறோ என்று இப்போதெல்லாம் இவருக்கு தோன்றுகிறது. அதனால் தான், தான் எந்த நெளிவு சுளிவுகளையும் தெரிந்துக் கொள்ளாமல் இருந்திருக்கிறோம் என்று நினைத்துக் கொள்வார். பசியாறிவிட்டு அருகில் இருந்த செவன்-லெவனில்  தமிழ் முரசு ஒன்றை வாங்கிக் கொண்டார்.

     இவர் பொழுது இப்போதெல்லாம் இப்படி தான் கழிகிறது. பக்கத்து ப்ளாக்கின் கீழிருக்கும் இருக்கையில் செருப்பை கழட்டிவிட்டு உட்கார்ந்துக் கொள்வார். கால்களை முன்னுக்குத் தள்ளி சாய்மானத்தில் முதுகை இருத்திக் கொள்வார். கண்ணாடியை ஒரு முறை சட்டையின் நுனியில் துடைத்து மாட்டிக் கொள்வார். பிறகு தமிழ் முரசை விரித்து தலைப்புச் செய்திகளையும் அதைத் தொடர்ந்து முக்கியச் செய்திகளையும் மேலோட்டமாய் பார்ப்பார். பின் விரிவாக ஒவ்வொரு பத்தியையும் படிப்பார். கண்ணாடியை மாற்றி வெகு நாட்களாகி விட்டதால் எழுத்துகள் சற்றே மங்கலாகத் தான் தெரியும். திருப்திக்காக அவ்வப்போது கழற்றி துடைத்துக் கொள்வார்.

      ஒரு பத்தியை படித்ததும் தன்னுடைய கருத்தை வாய்விட்டு சொல்வார். அந்த நேரம் பக்கத்தில் யாரேனும் உட்கார்ந்திருந்தால் அவர்களைப் பார்த்து சிரிப்பார். பதிலுக்கு அவர்கள் சிரிக்கிறார்களா என்பதைப் பற்றியெல்லாம் அவர் கவலைப் படுவதில்லை. இப்படியே இண்டு இடுக்கு விடாமல் இரண்டு பக்கங்களைப் படித்து முடிக்கும் போது ஒருமணிநேரம் கடந்திருக்கும். அதற்குள் இருக்கையின் சாய்மானம் போதாமல் முதுகு வலிக்க ஆரம்பித்திருக்கும்.

     மீதியை வீட்டிற்கு சென்று சிறிது ஓய்விற்கு பிறகு படித்து முடிக்கும் போது, மணி பன்னிரெண்டு ஆகிவிடும். இன்று காலையிலிருந்து ராமசுப்பு தாத்தாவின் மனம் ஒரு நிலையில் இல்லாமல் சுழன்றுக் கொண்டேயிருந்தது.

கனகரத்தினத்தை போய் பார்த்து பேசிவிட்டு வரலாமா?’ என்று யோசித்தார்.

இப்போதெல்லாம் அவன், அவனுடைய பேரனின் லீலைகளைப் பற்றியே தான் அதிகம் பேசுகிறான்.’

இவருக்கு கொஞ்சம் நேரத்தில் பொறுமை போய்விடுகிறது. அதனால்  இன்று வேண்டாம் என்று முடிவு செய்துக் கொண்டார்.

     செய்வதற்கு ஏதுமில்லாமல், தன் இளமையான நாட்களை நினைத்தபடி படுத்திருந்தார். அப்போதெல்லாம் அவருடைய அம்மா ஊரில் உயிருடன் தான் இருந்ததார். சிறுவயதில் அப்பாவை இழந்திருந்த இவருக்கு எல்லாம் அம்மா தான்.

     கீரையைக் கூடையில் வைத்து, தெருத் தெருவாக விற்று, தன் பசியைப் புறந்தள்ளி, இவருடையதைத் தீர்த்திருக்கிறாள். மழை பெய்தால் குடிசையின் ஒரு பக்கம் முழுவதும் நனைந்துவிடும். இருக்கும் கொஞ்சம் இடத்தில் சாக்குப் பைகளை விரித்து இவரைப் படுக்க வைத்து விட்டு, இரவு முழுதும் கூரையைப் பார்த்தபடி உட்கார்ந்திருப்பாள்.

     இவர் சிங்கப்பூருக்கு முதன்முதலாக வந்த போது புள்ள கடல் தாண்டி போகுதே!’ என்ற பெருங்கவலை அவளுக்கு இருந்தது. வாரம் ஒரு முறை கடிதாசி போட்டும் கூட அவள் மனசு ஆறாது.

ஏம்பா! இங்கனயே வந்துடக்கூடாதா? கஞ்சியோ, கூழோ ஒன்னா குடிச்சுக்கிடுவோம்! வயசான காலத்துல பேர புள்ளங்க கூட இருக்கணும்னு தோணுதப்பு!’ என்று பள்ளிக்கூடப் பிள்ளைகளை விட்டு எழுதிப் போடுவாள்.

அப்போவெல்லாம் இப்ப இருக்கறாப்புல தொலைபேசி யெல்லாமா இருந்தது? எல்லாத்துக்கும் கடுதாசி தான். கடுதாசின்னா என்னன்னு கூட இப்போயிருக்கிற புள்ளைகளுக்கு தெரியாது.” என்று முணுமுணுத்துக் கொண்டார்.

     கடிதாசியைப் படிக்கும் போதெல்லாம்கெழவிக்கு வயசாயிடுச்சி. வேற என்ன வேல! ஏதோ மவன் காசு அனுப்பறானே, நிம்மதியா உட்கார்ந்து சாப்பிடுவோம்ன்னு இல்லாம, தொண்தொணங்குதுஎன்று சலித்துக் கொள்வார்.

வயசான காலத்துல தனியா இருக்கற கொடுமை இப்ப தானே தெரியுது!” என்று சத்தமாய் சொல்லிவிட்டு ஹாலில் மாட்டியிருந்த ஜெயத்தின் படத்தைப் பார்த்தார். ஜெயத்திற்கு, மாமியாரை இங்கே அழைத்துக் கொள்ள வேண்டும் என்று ஆசை.

வந்துவிடுமாறு கூப்பிட்டதற்கு, ‘உங்கப்பா பொறந்து, வளந்து, நல்லா வாழ்ந்த ஊரு இது. அவர் மூச்சுக் காத்து இங்கெனெ தான் பிரிஞ்சுது. ஊரு, ஒறவு எல்லாம் இங்கிட்டு தான் இருக்கு. என் கடெசி காலம் இங்கதாம்ப்பு.’ என்று பிடிவாதமாய் மறுத்து விட்டாள்.

வீம்புக்கார கெழவி!, கடேசி வரைக்கும் இங்கென எட்டிப் பார்க்காமயே போயிடுச்சி!’ கண்களில் அம்மாவிற்காக நீர் துளிர்த்தது.   

     இரவு முழுக்க அம்மாவின் நினைவாகவே இருந்தது அவருக்கு. கனவில், கிராமத்து வீட்டில் அம்மாவுக்கு உதவியாய் ஜெயம் சமைத்துப் போட, இவர் சுகமாய் சாப்பிட்டு, அம்மாவின் மடியில் படுத்து தூங்கினார். திடீரென்று அம்மா காணாமல் போய் பிள்ளைகள் வந்து அப்பா, எங்களோட பேசுங்கஎன்று வற்புறுத்தினார்கள். இவர் எவ்வளவு பேசினாலும் மேலும் மேலும் பேசும்படி வற்புறுத்தினார்கள். இவர் தாங்க முடியாமல் எழுந்து வெளியே செல்ல, பேரப் பிள்ளைகள் துரத்திக் கொண்டு வந்தார்கள். திடுக்கிட்டு எழுந்த போது மணி மூன்றைத் தொட்டிருந்தது. கண்களினோரம்  வழிந்திருந்த நீரைத் துடைத்துக் கொண்டார். இனி தூக்கம் அவ்வளவு தான்!

வயசாயிட்டா தூங்கறது கூட பெரிய பிரச்சனையாத் தான் இருக்குது!’

மனசு முழுக்க வேதனை இருந்தா தூக்கம் எப்படி வரும்?’.

     தனக்குள்ளேயே விவாதம் செய்துக் கொண்டு தள்ளாடியபடி வெளியே வந்தார். சில்லென்ற காற்று முகத்தில் மோதி புத்துணர்ச்சியைக் கொடுத்தது.

     காலைக் கடன்களை முடித்து விட்டு ஆறு மணிக்கு என்றுமில்லாத வழக்கமாக கதவைப் பூட்டிக் கொண்டு கிளம்பினார். தலை பாரமாய் இருந்தது. வீட்டிற்குள்ளேயே தனிமையில் பேசிக் கொண்டிருந்தால் பைத்தியம் பிடித்து விடும் என்று தோன்றியது. மெதுவாக நடந்து பக்கத்திலிருந்த பூங்காவிற்கு வந்தார்.

     பலர் அங்கே நடந்துக் கொண்டும், உடற்பயிற்சிகள் செய்துக் கொண்டும் இருந்தார்கள். நடைபயிற்சி முடித்த சிலர் கும்பலாய் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். அங்கே பக்கத்து ப்ளாக்கில் வசிக்கும் ரேணுவின் அப்பா, கருப்பையா உட்கார்ந்திருந்தார். கருவேலம்பட்டிக்காரர். கொஞ்சம் நாட்களுக்கு பெண்ணிற்கு துணையாக ஊரிலிருந்து வந்திருப்பவர்.

இவரைப் பார்த்ததும்

வாங்கய்யா!” என்று வரவேற்றார்.

இவரின் முகத்தைப் பார்த்ததும் அவருக்கு சங்கடமாய் இருந்திருக்க வேண்டும்.

என்னய்யா செய்யறது! எல்லோருக்கும் நடக்கறது தானே! அறுவது வயசுக்கு மேலே இருக்கிற ஒவ்வொரு நாளும் ஆண்டவன் கொடுக்கற பரிசு தானே!” என்றார்.

நம்ம கையில என்ன இருக்கு. வயசாயிட்டா, அதுவும் பேச்சுத் துணைக்கு  யாரும் இல்லைன்னா திண்டாட்டம் தான்!” என்றார் ராமசுப்பு.

நீங்க ஏன்யா அப்படி நெனக்கிறீங்க! நாங்கல்லாம் இல்லையா? எல்லாருக்கும் ஒவ்வொரு விதத்துல பிரச்சனை. பிரச்சனை இல்லாத மனுஷன் உலகத்துல உண்டாய்யா? ” என்றார் கருப்பையா.

     சற்று நேரம் பேசிவிட்டு கிளம்பிய போது, மனதிலிருந்த வார்த்தைகளுக்கு கிடைத்த விடுதலையால் மனம் சற்று தெளிந்திருந்தது. பிரச்சனையில் பாதி குறைந்தது போல இலகுவாயிருந்தது.

நல்ல மனுஷன்! எங்க பார்த்தாலும் கொஞ்ச நேரம் நின்னு பேசுவாரு. . . அவருக்கு பொண்டாட்டிய பிரிஞ்சியிருக்குற கஷ்டம். ம்ஹீம். . .” என்று தனக்குள் பேசியபடி, தினசரி வழக்கத்தைத் தொடங்க கோப்பிக் கடையை நோக்கி போனார் ராமசுப்பு தாத்தா.
(சிங்கப்பூர்  தமிழ் எழுத்தாளர் கழகம் நடத்திய முத்தமிழ் விழா 2011ல் மூன்றாம் பரிசு பெற்ற கதை)