ஞாயிறு, 31 மார்ச், 2013

தோற்றுப் போகும் தேவதைகள்

சொல்லு தீபு! வணக்கம்!”

வணக்கம் . . .”

என் பெயர் தீப்தி குமரன்

என் பேரு தீப்தி குமதன்!”

பேரு இல்லடி, பெயர்!”

பெயர்

என் பெயர் தீப்தி குமதன், ஏம்மா மை நேம் ஈஸ் தீப்தின்னு சொல்லிடறேனே!”

அதெல்லாம் சொல்லக் கூடாது!”

ஏம்மா?”

அப்படி சொன்னா ப்ரைஸ் கொடுக்க மாட்டாங்க! சரி அடுத்தத சொல்லு!”

நான் பாலர் வகுப்பில் படிக்கிறேன்!”

பாலர் வகுப்புன்னா என்னம்மா?”

நீ படிக்கிறியே அது தான்! கேள்வி கேட்காம சொல்லு! நான் பாலர் வகுப்பில்

அம்மா எனக்கு அந்த சிப்ஸ் கொஞ்சம் கொடேன்!”

நீ முதல்ல ஒழுங்கா சொல்லு!”

ஏன் வசந்தி, குழந்த தான் கேட்குதே! கொடேன், சாப்பிட்டுட்டு சொல்லட்டும்!”

நீங்க சும்மா இருங்க! இப்ப கொடுத்தா சாப்பிறதுல கவனம் போயிடும்! இதை சீக்கிரம் படிச்சு முடிக்கணும். அடுத்த வாரம் போட்டி!”

நாலு வயசு குழந்தைக்கெல்லாமா போட்டி வைக்கிறாங்க?”

இது ஏழு வயசுக்குக் கீழேயான பிரிவு!”

அப்ப ஆறு வயசு பிள்ளைங்க கூட போட்டிக்கு அனுப்பறியா!”

இதுக்கும் அதுக்கும் ரெண்டு வயசு தானேங்க வித்யாசம்!”

குழந்தைய போட்டு படுத்தாதே!”

மூணு வயசுலேயே அதது என்னென்னமோ பண்ணுது! டீவிய பாருங்க! போன வாரம் சூப்பர் சிங்கர்ல என்னம்மா பாடுச்சு தெரியுமா ஒரு குழந்தை! அதுமூணு வயசுலேயே பாட்டு கத்துக்க ஆரம்பிச்சுதாம்! இது ரொம்ப லேட்!”

“ 'தாளம்ல க்ளாஸ்க்கு கேட்டுட்டு வந்திருக்கேன். அடுத்த மாசம் தான் சேர்த்துக்க முடியும்ன்னு சொல்லிட்டாங்க!”

என்ன க்ளாஸ்?”

டேன்ஸூம், பாட்டும்! ரெண்டும் ஒரே நாள்ல, டேன்ஸ் முடிச்சுட்டு ஒரு மணி நேரம் ப்ரேக் அப்புறம் பாட்டு

இதுக்காக லிட்டில் இந்தியா போய்வரப்போறியா?”

குழந்தைக்காக இது கூட பண்ணலைன்னா எப்படிங்க?”

குழந்தைன்றத ஞாபகம் வச்சிக்கோ!”

உங்கள எதுக்கும் டிஸ்டர்ப் பண்ணமாட்டேன்! கவலைப்படாதீங்க!”

நீ சொல்லுடா! யாரைக் கேட்கிறாய் வரி?”

யாரை கேத்கிறாய் வதி?”

என்னோடு வயலுக்கு . . .”

என்னோவயல்க்கு . . .”

வந்தாயா ?”

வந்தியா!”

இல்லம்மா! வந்தா தா தா சொல்லு!”

தா தா . . .”

கரெக்ட்! வந்தாயா சொல்லு!”

குமரனுக்கு கவலையாய் இருந்த்து!

போட்டி நடக்கவிருக்கும் அந்த ஹால் களைகட்டிக் கொண்டிருந்தது. பெற்றோர்கள் தத்தம் பிள்ளைகளை கண்ணகியாகவோ, தேவர்களாகவோ, உபதேவதைகளாகவோ உருமாற்றிக் கொண்டிருந்தார்கள்.
குதித்துக் கொண்டிருந்த பாஞ்சாலியை அம்மா அடக்கிக் கொண்டிருந்தார். உடலில் நீல சாயம் தீட்டப்பட்டுக்கொண்டிருந்த கிருஷ்ணர் சிணுங்கினார். ஆஞ்சனேயர் மெக் டொனால்ட்டிலிருந்து வாங்கிய பிரெஞ்ச் ஃப்ரைஸை சாப்பிட்டுக் கொண்டிருந்தார். திருவள்ளுவர் பொய்த் தலைமுடிக்குள் கைவிட்டு சொறிந்துக் கொண்டிருந்தார். நாரதர் தூக்க கலக்கத்தில் அம்மா மீது சாய்ந்துக் கொண்டிருந்தார்.

தீப்திக்கு வீரபாண்டிய கட்டபொம்மன் வேடத்தை அணிவித்துக் கொண்டிருந்தாள் வசந்தி.

அம்மா, இந்த ட்ரெஸ் குத்துதும்மா!”

டேய் குட்டி! கொஞ்ச நேரம்டா! நீங்க மேல போயி அதோ இருக்கு பாருங்க மைக், அதுல அழகா பேசிட்டு வாங்க! எல்லாத்தையும் கழட்டிட்டு ஜாலியா கே.எப்.சி போகலாம்!”

இதுக்குள்ள காலை விடு!”

அம்மா இந்த செயினெல்லாம் வேண்டாம்மா! வெயிட்டா இருக்கு!”

உனக்கு எது தான் வேணும்னு சொல்லேன்! நல்லது எதுவுமே வேண்டாம். இதுல மட்டும் அப்பாவக் கொண்டிருக்க! வாழ்க்கையில மேல போகணும்ன்ற எண்ணமே கெடையாது!”

அம்மா! இந்த தொப்பி அரிக்குதும்மா!”

கொஞ்ச நேரம் சும்மாயிருக்கியா! சும்மா 'நையி நையி'ன்னுகிட்டு! இந்தா இத கையில போடு!”

அதோ பார் அந்த அண்ணன் வாலையெல்லாம் வச்சிகிட்டு உட்கார்ந்திருக்கிறான்! அவன் ஏதாவது சொல்றானா பார்த்தியா!”

சரி! சரி! அழாதே! ஐ லைனர் கரைஞ்சிடப்போகுது! பிறகு முகத்தை கழுவிட்டு முதல்லேருந்து ஆரம்பிக்கணும்!”

கூட்டம் அதிகமாகிக் கொண்டிருந்து.

கிட்டத்தட்ட எழுபது பேர் போட்டி போடறாங்களாம்! தெரியுமா!” என்றாள் பக்கத்திலிருந்த பெண். வசந்திக்கு பயமாயிருந்தது. இந்தப் பெண் மேலே ஏறி ஒழுங்காய் பேச வேண்டுமே! ஆஞ்சனேயருக்கு வடைமாலை சாத்துவதாய் வேண்டிக் கொண்டாள்.

தீப்தி பக்கத்திலிருந்த ராமருடன் விளையாடிக் கொண்டிருந்தாள்.

“தீபு சைலெண்டா உட்காரு இல்லைன்னா எல்லாம் கீழ விழுந்திடும்!”

“ 'ட்ரெஸ்சிங்'க்கு நாற்பது மார்க்காம்! நடிப்புக்கு நாற்பது மார்க்காம்! பேசறதுக்கு இருபது மார்க்காம்!” என்றாள் ராமரின் தாய், வசந்தியிடம்.

கிட்டத்தட்ட அனைத்து பிள்ளைகளுக்கும் அம்மாக்கள் வேஷம் கட்டிக் கொண்டிருக்க, அப்பாக்கள் உதவி செய்துக் கொண்டிருந்தார்கள். ஒரு தந்தை சிரத்தையாய் தன் பிள்ளைக்கு பஞ்சகட்சம் கட்டிக் கொண்டிருந்தார். வசந்திக்கு தன் கணவரின் மீது கோபமாய் வந்தது.

அதென்ன ஞாயிற்று கிழமைன்னு பார்க்காம இன்னிக்கு கூட வேலை! சரி போட்டி ஆரம்பிக்கும் போதாவது வந்து சேர்ந்தால் சரி!’

குமரன் வந்து சேர்ந்த போது ஹால் நிரம்பி வழிந்தது.

ஏம்மா! இத்தினி பேரு கூடவா போட்டி!”

ஆமாங்க! எழுவது பேர், அதுல ஆறு பேருக்கு ப்ரைஸ்!”

இதெல்லாம் தேவையில்லாத வேலை வசந்தி! குழந்தைய இன்னிக்கு கூட தூங்கவிடாம, காலைல ஆறு மணிக்கெல்லாம் எழுப்பி, ஜீராங் ஈஸ்டிலிருந்து டேம்பனிஸ் வரைக்கும் கூட்டிட்டு வந்து, மணி இப்ப பன்னிரெண்டு ஆகப்போகுது! இன்னும் ஆரம்பிக்கல!”

இல்லைங்க! இதோ இப்ப ஆரம்பிக்க போறாங்களாம்! 'ஜட்ஜீ'க்காக வெயிட் பண்ணிகிட்டிருக்காங்க!”

“அம்மா! எனக்கு பர்கர்”

“இப்ப சாப்பிட்டா மேக்கப் அழிஞ்சிடும்! வாயைத் திற இந்த ஜீஸை ஊத்தறேன்!”

சற்று நேரத்தில் ஆரம்பித்த போது, முதலில் கதை சொல்லும் போட்டி என்றார்கள்.

சற்றே பெரிய குழந்தைகளுக்கான போட்டி அது.

ஒவ்வொரு குழந்தையும் ஏற்ற இறக்கத்தோடு கதை சொல்லிக் கொண்டிருந்தது. கிழவனைப் போல, கடவுளைப்போல என்று குரலை மாற்றி பேசி, பாடி, ஆடி அசத்திக் கொண்டிருந்தார்கள். அவர்கள் பேச்சும், நடிப்பும் ஆச்சரியப்பட தக்கதாய் இருந்தது. பெரியவர்களால் செய்யமுடியாத்தைக் கூட அனாயாசமாய் செய்துக் கொண்டிருந்தார்கள்.

அதற்குள், மேல் சட்டை அணிந்துக் கொள்ளாமல் ஏர்கான் குளிரில் அமர்ந்திருந்த ஆஞ்சனேயருக்கு பொறுமை போய்விட்டது.

அம்மா! வீட்டுக்கு போகலாம்மா!” என்று அழ ஆரம்பித்தான் அந்த சிறுவன்.

பாரதியார் அம்மாவின் மடியில் தூங்கிவிட்டிருந்தான்.

கர்ணன் சாக்லேட் கேட்டு அடம்பிடித்தான்.

கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் கழித்து மாறுவேடப் போட்டி ஆரம்பித்தது. அதற்குள் பிள்ளைகள் அனைவரும் சோர்ந்து போயிருந்தார்கள்.

தீபு! மேல ஏறினதும் பயப்படக் கூடாது! மஞ்சள் அரைத்து-வ நல்லா சொல்லனும்! நீ நல்லா சொன்னா தான் ப்ரைஸ் கொடுப்பாங்க! சரியா!”

தூக்க கலக்கத்தில் தலையை ஆட்டினாள் தீப்தி.

அடுத்து தீப்தி குமரன், வீர பாண்டிய கட்டபொம்மனாக வேடமேற்று வருகிறார்!”

தீப்திக்கு மேலே ஏறி கூட்டத்தைப் பார்த்தும் அம்மா சொல்லிக் கொடுத்ததெல்லாம் மறந்து போய்விட்டது.

கூட்டத்திற்குள்ளாக அம்மாவைத் தேடினாள். பயமாய் இருந்தது. அழுகையாக வந்தது.

சொல்லும்மா!” என்றாள் மைக்கைப் பிடித்திருந்த பெண்.

அதற்குள் அம்மாவைக் கண்டுபிடித்துவிட்டாள். அம்மா அங்கிருந்து ஜாடை செய்ய அவளைப் பார்த்துக் கொண்டே,

“மை நேம் ஈஸ் தீப்தி குமதன். பாலர் வகுப்பில் பதிக்கிறேன். நான் வீர பாந்திய கத்தபொம்மன்.
கித்தி, திரை, வரி, வத்தி..!
யாரைக் கேத்கிறாய் வதி . . .
என்னோடு வயல்க்கு வந்தியா . .
நாத்து த்தியா . . .
கலை பறிச்சியா . . .
இல்லை மஞ்சளறைத்துக் கொடுத்தியா . . .
மாமனா மச்சானா மானங்கெத்தவனே!” என்று அபிநயத்தோடு சொன்ன போது கூட்டம் கைதட்டியது.

வசந்திக்கு பெருமையாய் இருந்தது.

ஆனால் பரிசு பெற்ற பெயர்களை அறிவித்த போது தீப்தியின் பெயர் அதில் இல்லை. வசந்தி அழுதேவிட்டாள்.

“குழந்தை எவ்வளவு கஷ்டப்பட்டு சொன்னா! ஆனா ப்ரைஸ் கொடுக்கலையே!” என்றாள் குமரனிடம்.

“விடும்மா! இது போட்டி தானே! எல்லோரும் ப்ரைஸ் வாங்க முடியுமா!”

“இல்லைங்க! எவ்வளவு பேர் கை தட்டினாங்க! அவங்க முன்னவே யாருக்கு கொடுக்கணும்னு முடிவு செஞ்சுட்டாங்க போல இருக்கு!”

“அம்மா! எனக்கு ஏன் ப்ரைஸ் கொடுக்கல? மை நேம் ஈஸ் தீப்தின்னு சொன்னேனே அதுக்காகவா! சாரிம்மா மறந்து போச்சு! ஆனா மத்ததெல்லாம் கரெக்டா சொன்னேனே! கொஞ்சம் ப்ரைஸாவது கொடுக்கணும், இல்லையா!”

“சரி! விடு! குழந்தை டயர்டா இருக்கா பார்! வீட்டுக்கு போகலாம்!”

“இல்லீங்க! நான் போய் கேட்டுட்டு வரேன்!”

ஜட்ஜ் காபி குடித்தபடி கேட்டார்.

“உங்க பிள்ளை என்னவா நடிச்சுதும்மா?”

“வீரபாண்டிய கட்ட பொம்மன்!”

“ஓ! அதுவா வெரி க்யூட்! அழகா பேசுனா! ஆனா அடுத்தமுறை உச்சரிப்புல கொஞ்சம் கவனம் எடுத்துக்கோங்க! ‘ர’ ‘ற’ இதெல்லாம் கவனமா பாருங்க. இன்னும் 'ட' வெல்லாம் நல்லா உச்சரிக்கணும். கண்டிப்பா ப்ரைஸ் கிடைக்கும்!”

“பாருங்க! அடுத்த மாசம் யீஷீன்ல ஒரு போட்டி இருக்கு! கண்டிப்பா ப்ரைஸ் வாங்கிக் காட்டறேன்!” என்று கணவனிடம் சவால் விட்டபடி, சோர்ந்திருந்த குழந்தையின் கையை பற்றிக் கொண்டு, வீட்டிற்கு கிளம்பினாள் வசந்தி.

ஞாயிறு, 10 மார்ச், 2013

தொடரும் பயணங்கள்


அடுக்ககத்திலிருந்து ஈரச்சந்தைக்கு நடந்துக் கொண்டிருந்த போது தான் அவருக்கு அது தோன்றியது. சரியாக சொல்ல வேண்டுமென்றால், பிரதான சாலையைக் கடக்க முற்படும் போது, அந்த பேருந்து வேகமாக குறுக்கிட்ட அந்த நொடியில் தான். பேருந்தின் அவசரத்திற்கு வழி விட்டு சற்று பின்னே ஒதுங்கினார்.
பத்து மணி வெயில், வழுக்கை விழுந்த அவர் தலையை குரூரமாக தடவிக்கொடுத்தது. “இந்த ஊரே இப்படித் தான்! அடிச்சா மழை அடி அடின்னு அடிக்கும், இல்ல வெயில் மண்டையைப் பொளக்கும். ஹீம்ம்ம். . . !” மெல்ல முணுமுணுத்தபடி காதோரம் வழிந்த வியர்வையைக் கைக்குட்டையால் அழுந்த துடைத்தார். கண்களை சுருக்கி இருபக்கமும் பார்த்தார். சாலை வெறுமையாய் இருக்க, கவனமாய் முன்னேறினார். வழியில் தெரிந்த சீன முகங்கள் அனைத்தும் ஒரே அச்சில் வார்க்கப் பட்டவையாக இருந்தன. எதிர்பட்ட தமிழ் முகங்களை கூர்ந்து நோக்கியபடி நடந்தார். விறைப்பாக நடந்தாலும், உற்று நோக்கும் போது லேசான வயோதிகத் தள்ளாட்டம் தெரிந்தது.
நான்கு மாதத்திற்கு முன்பு கருவேலம்பட்டியில் இருந்த அவரைப் பார்த்து ஏதேனுமொரு குடுகுடுப்பைக்காரன்
நல்ல காலம் பொறக்குது!
நல்ல காலம் பொரக்குது!
இந்த வீட்டு மகராசா கடல் தாண்ட போறாரு!’
என்று வைகறையில் வாக்கு சொல்லியிருந்தால் கூட, ‘போடா போக்கத்த பயலே!’ என்று சிரித்திருப்பார்.
அவருக்கு திருமணமான போது வயது பத்தொன்பது. ஜரிகையில் அழுக்கு படாதிருக்க தூக்கி கட்டப்பட்ட நீல பட்டுப் புடவையுடன், கழுத்தில் இரவல் காசு மாலையும், கைநிறைய கண்ணாடி வளையல்களும், தலைநிறைய எண்ணையுமாக வலது காலை எடுத்து வைத்த சுப்பம்மாளுக்கு வயது  பதிமூன்று. நேர்மையான தமிழ் வாத்தியாருக்கு வழக்கமாக கிடைக்கும் மதிப்பு ஊரில் இவருக்கும் தாராளமாய் கிடைத்தது.
வாத்தியாரே! ஒரு பத்து ரூபா இருந்தா குடுங்க. புள்ளைக்கு வகுத்தால போகுது. கூலி வந்ததும் திருப்பி கொடுத்திடுறேன்!” என்று யாரேனும் கேட்டுவிட்டால், அந்த நேரத்தில் பையில் பத்து ரூபாயும் இருந்துவிட்டால் அவ்வளவு தான்.
மனைவியிடம்பையில வச்சுகிட்டே எப்படி இல்லன்னு சொல்லுறது சுப்பு ?” என்று கேட்பார். அந்த வாராக்கடனை வசூலிப்பது சுப்பம்மாளின் சாமர்த்தியம். இதற்கு பயந்தே சில்லரைகளைத் தவிர வேறு எதையும் அவரிடம் அவள் அனுமதிப்பதில்லை.

இந்த ஐம்பத்து மூன்று வருடங்களில், ஆஸ்திக்கு ஒரு பிள்ளை, ஆசைக்கு ஒரு பெண், கொல்லி, கழனி, மாணாக்கர், மனைவி மக்கள், திண்ணைப் பேச்சு, அல்லிக் குளம், ஆட்டுக் குட்டி என்று அதிக மாற்றங்கள் இல்லாமல் சீராய் சென்றுக் கொண்டிருந்த வாழ்க்கையில், திடீர் திருப்பம்.
பெண் ரேணு, கணவரோடு வசிக்கும் சிங்கப்பூரில் இருந்து அவருக்கு வந்தது அழைப்பு. ரேணுவிற்கு கணினி துறையில் நல்ல சம்பளத்துடன் வேலை கிடைத்திருந்தது. ஒரே பெயர்த்தி வர்ஷாவை பார்த்துக்கொள்ள யாரும் இல்லாததாலும், சுப்பம்மாளுக்கு பாஸ்போர்ட், விசா எடுக்க நேரமெடுக்கும் என்பதாலும், அவருக்கு வந்த அவசர அழைப்பு அது. காத்திருந்த இம்சைகள் தெரியாமல் சந்தோஷமாய் ஒப்புக் கொண்டார்.
ஊரில் இருந்த குப்பன், சுப்பன் எல்லாம் வெளிநாட்டிற்கு பிள்ளைகளின் தயவால் சென்று வந்த போது, இவரால் பயணப்பட முடிந்த அதிக பட்ச தூரம், பிள்ளை பொறியாளராய் வேலை செய்த சென்னையாக மட்டுமே இருந்தது. அதற்காக இவர் என்றும் கவலைப்பட்டதில்லை. ஆனாலும் சிங்கப்பூர் அழைப்பு வந்தபோது அகமகிழ்ந்து தான் போனார்.
ய்யே சுப்பூ ! எம்பொண்ணு என்னை சிங்கப்பூருக்கு கூப்பிட்டிருக்காடி. சித்த அந்த பஞ்சாங்கத்த கொண்டா, நல்ல நாள் பார்க்கலாம்!”  என்று மனைவியை அதட்டியதில் கர்வம் தொனித்தது. பெட்டி கட்டும் போது பெருமிதமாய் இருந்தது. மேலத் தெரு ரங்கய்யாவின் அறிவுரைப்படி மூன்று ஜோடி பான்ட் சட்டைகளை, மரத்தடி தையல்காரனிடம் தைத்துக் கொண்டார். மற்றவர்கள் பார்த்த பார்வையில் பொறாமை தொனித்ததாய், சுப்பம்மாள் சுற்றிப் போட்டாள்.
மீனம்பாக்கத்தை பிரம்மிப்பாய் கடந்து, அதிபிரம்மிப்பில் சாங்கியை அடைந்தார். விமானத்தில், உரித்து வாயில் போட்டுக் கொண்ட மிட்டாயின் தாள் பத்திரமாக அவர் கையில் இருந்தது. அதை எங்கே போடுவது என்று யோசித்தார். சிங்கப்பூரில் குப்பை போட்டால் அபராதம் என்றும், இதற்காகவே ஊர் முழுவதும் கேமரா பொருத்தப் பட்டிருப்பதாகவும், இவருக்கு முன்னால் அங்கே சென்று வந்த ரங்கய்யா எச்சரித்திருந்தார். அதிசுத்தமாய் இருந்த விமான நிலையத்தின் குப்பைத் தொட்டி எது என்று அவருக்குப் புரியவில்லை. வீட்டுக்கு போய் ரேணுவ கேட்டா போச்சு!’ என்று எண்ணியபடி அதை பத்திரமாக பையிலேயே போட்டுக் கொண்டார்.
விமான நிலையத்தில் அங்கங்கே தெரிந்த தமிழெழுத்துகள் அவருக்கு புல்லரிப்பை ஏற்படுத்தின. அவர் பெட்டியுடன் மருமகனைப் பின் தொடர்ந்து சாங்கியை விட்டு வெளியே வந்த போது சிங்கை, ஊர் திரையரங்கில் பார்த்த படம் போலவே அச்சு பிசகாமல் இருந்தது. சாலை மிகச் சுத்தமாய் இருந்தது. டாக்ஸி கன்னங்கருப்பு சாலைகளில் வழுக்கியபடி, பல நெடுங்கட்டிடங்களைக் கடந்து யீசூனை வந்தடைந்த போது மலைத்துப் போயிருந்தார்.
மகள் வேலையில் சேரும் வரை சுற்றிப் பார்த்த சிங்கப்பூரும், இந்திரலோகத்திற்கு இணையாகவே இருந்தது. ‘நார்த் பாயின்ட்பிரம்மிப்பை ஏற்படுத்தியது. முதல் முறை மின்படியில் கால் வைக்க பயமாய் இருந்தது. அது நீங்கியதும், குதூகலம் ஏற்பட்டது. ‘சுப்பம்மாவ இங்க கூட்டி வரணும். கெளவி அசந்து போயிடுவா!’ என்று எண்ணிக் கொண்டார். வர்ஷாவின் மழலை வார்த்தைகள் அவரை மெய்மறக்கச் செய்தன. இது தான் சொர்க்கம் என்று தோன்றியது.
எல்லாம் ஒரு வாரம் தான். பெண், வீட்டிலிருந்த வரை ஒன்றும் தெரியவில்லை. பிறகு தான் ஆரம்பமானது னி...மை. ஊரில் பத்து மனிதர்களுக்கு நடுவே இருந்து பழக்கப்பட்டவர், இங்கே பெயர்த்தியோடு தனியே! பகல் முழுவதும் யாருமற்ற வீடு நிசப்தமாய் அவரை விழுங்கியது. பக்கத்து வீட்டு மலாய் பெண்மணியின் விசாரிப்புகளிலிருந்த ஆங்கிலம் அவருக்கு முற்றும் புதிதாய் இருந்தது. வெளியே பார்த்த ஓரிரு தமிழர்களும் அவசரத்திலிருந்தனர். அவரைத் தவிர அனைவருக்கும் நிறைய வேலைகள் இருப்பதாய் தோன்றியது.
மூன்று வயது சிறுமியைக் கொஞ்சும் போது இருந்த சுகம், அவளுக்கு பொறுப்பாக, தனித்து விடப்பட்ட போது இல்லை. பல் தேய்ப்பதில், குளிப்பதில் என்று தொடங்கி எல்லாவற்றிற்கும் அடம் பிடிக்கும் அவளைச் சமாளிப்பது அவருக்கு சிரமமாய் போயிற்று. அதுவும் நான்கு பேரிடம் வேலை வாங்கியே பழக்கப்பட்ட அவருக்கு பெரும்பாடாய் இருந்தது. கோபத்தில் இரண்டு வைக்கலாம் என்று கூட தோன்றியது.
இந்த ஒரு பிள்ளைக்கே உசுரு போகுதே, ரெண்டை எப்படித் தான் வளர்த்து ஆளாக்கினாளோ!’ என்று பெருமூச்சு கிளம்பியது. இத்தனை வருடங்களும், பிள்ளைகளின் வளர்ப்பில் அதிகம் ஒட்டாமல், வாத்தியாராய் கட்டளைகள் மட்டுமே போட்டுவந்ததை நினைத்து வெட்கம் ஏற்பட்டது.
கழனி, கொல்லிக்கு சாப்பாடு எடுத்து போவது முதல், பிள்ளைகளை சமாளிப்பது வரை எல்லாம் சுப்பம்மா தான். திடீர் விருந்தினர்கள் வந்துவிட்டால், ‘சுப்பம்மா ரெண்டு காபி கொண்டு வா!’ என்பதோடு இவர் வேலை முடிந்து விடும். இல்லாத பாலுக்கு தோட்டத்து வழியாக அடுத்த வீட்டிற்கோ, தெருமுக்கு வீட்டிற்கோ சென்று கைமாத்து வாங்கி வருவது அவள் தான்! எப்படியோ அவர் கேட்ட காபி வந்து விடும். தான் ரொம்பவும் அநியாயம் செய்துவிட்டதாக இப்போது அவருக்குத் தோன்றியது. மனைவிக்கு இன்னும் உதவிகள் செய்திருக்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டார்.
தனித்து விடப்பட்ட அவருக்கு ஒரு போன் செய்ய கூட மற்றவர்களை எதிர்பார்க்க வேண்டியதாய் இருந்தது. மகள் தொலைபேசி அட்டையைப் பயன்படுத்தும் முறையை விளக்கிய போது, அவரால் சுலபமாக கிரகித்துக் கொள்ள முடியவில்லை. ‘வயதாகிவிட்டதில்லையா!என்று சமாதானப் படுத்திக் கொண்டார். உண்மை தான்! அவருக்கு இப்போது வைத்த பொருட்ளை தேடுவதிலேயே பாதி நேரம் கழிந்து விடுகிறது. முதல் குரலிலேயே தேடிக் கொடுக்கும் சுப்பம்மா பக்கத்தில் இல்லாதது பெரிய குறையாகத் தெரிந்தது. மனைவியைப் பார்க்க வேண்டும் என்ற தவிப்பு ஏற்பட்டது.
இதென்ன நினைச்ச உடனே சென்னையிலிருந்து பஸ் பிடிச்சி போறாப்பலயா! நம்ம மகளும் மருமகனும் ப்ளைட் ஏத்திவிட்டாலல்லவா ஆச்சி!’
அவருக்கு மிகவும் சங்கடமாய் இருந்தது. சிறு வயதில் தன் தந்தையின் முன் விடுமுறையில் ஊருக்குச் செல்ல வேண்டி கைகட்டி நின்ற ஞாபகம் வந்தது. அது போல வேறு எவரிடமும் இன்று வரை அவர் கைகட்டி நின்றதில்லை. இப்போது அந்த நிலைக்கு தள்ளப்பட்டது போல உணர்ந்தார். மெல்ல சமாதானப் படுத்திக்கொண்டார்.
நாம பாட்டுக்கு கிளம்பி போயிட்டா, இதுக நெலம என்ன ஆகும். கொஞ்சம் நாள் போகட்டும், ஒரு பணிப்பெண்ணை எடுத்துகிட்டு நம்மை அனுப்பிடுவாங்க!’

நாட்கள் மாதங்களாகி நகர்ந்ததே தவிர, யாரும் இதைப்பற்றி யோசித்ததாய் தெரியவில்லை. எப்படி பேச்செடுப்பது என்று இவருக்கும் புரியவில்லை. இந்த நிலையில் தான் அந்த யோசனை சாலையை கடக்கும் போது அவருக்கு தொன்றியது.
பேசாம சுப்பம்மாவயும் இங்க வரச் சொல்லிட்டா என்ன? பொண்ணும் கஷ்டப்பட்டு சமச்சி வச்சிட்டு வேலைக்குப் போறா. அவ வந்தா சமையலுக்கு சமையலும் ஆச்சி. நீ முந்தியா, நான் முந்தியான்னு இருக்கற கடைசி காலத்தில பக்கத்துல இருந்த மாதிரியும் ஆச்சி!’
இவ்வளவு நாளாக ஊருக்கு உடனே திரும்பி விடுவோம் என்ற எண்ணம் இருந்ததால் அவருக்கு இது தோன்றவில்லை. தோன்றியதும் கொஞ்சம் நிம்மதி ஏற்பட்டது. இப்போது அவரால் நடையை உற்சாகமாக எட்டிப்போட முடிந்தது. வெயில் அவருக்கு ஒரு பொருட்டாக தெரியவில்லை. மூன்று வெள்ளி நாற்பது காசு என்று விலை சொன்ன சீனரிடம்
ஒன்லி த்ரீ டாலர்ஸ் ல்லா. ஆல்வேஸ் பை இயர் ல்லா!”
கிவ் சம் கறி லீவ்ஸ்என்று தெரிந்த ஆங்கிலத்தில் பேரம் பேசினார்.
     இவனுக என்னா ஆங்கிலம் பேசறானுங்க ! ஒன்னும் புரியல. படிச்ச நமக்கே இப்படி இருக்கு! சுப்பம்மா வந்தா தனியா வர சரிப்பட்டு வராது. . . நாமளும் கூட வந்தாத்தேன் ஆகும்!’ என்று நரைத்த மீசைக்குள் புன்னகைத்துக் கொண்டார்.
எதிரே தள்ளுவண்டியில் இருந்த சீனக் குழந்தை அவரை எட்டிப் பார்த்து சிரித்தது. கிட்டே போய் இரண்டு கைகளையும் தட்ட, அது மேலும் சிரித்தது. அதன் தாய் இவரைப் பார்த்து புன்னகைத்து விட்டு நகர்ந்தாள்.
 உண்மையிலேயே இவருக்கு இந்த ஆங்கிலம் புரிந்துக்கொள்ள சற்று சிரமமாகத் தான் இருந்தது. ஒரு முறைலீஃப்ப்பை இவர்இலைஎன்று புரிந்துக் கொள்ள, அதுமின்தூக்கிஎன்று பிறகு தெரிந்தது. அதே போல தான்காப்பா’. அதுகார் பார்க்காம்.
ஆத்தா, நமக்கெல்லாம் இது சரி படாது!’ என்று எண்ணிக் கொண்டார்.
 வர்ஷாவைப்ளே க்ரூப்ப்பிலிருந்து வீட்டிற்கு அழைத்து வந்த போது மணி ஒன்றைத் தொட்டிருந்தது.
 சாப்பித மாத்தேன் போ, தாத்தா!” என்றவளை தொலைக் காட்சியின் முன் உட்கார வைத்து வாயில் திணிப்பதற்குள் பாடாய் படுத்திவிட்டாள்.
சுப்பம்மாளுக்கு இதெல்லாம் ஒரு வேலையே இல்ல, அவ வரட்டும்! உனக்கு அவ தான் சரி!’ வர்ஷாவை கதை சொல்லி தூங்க வைத்தபோது மறுபடி தனிமை வந்து பிடித்துக் கொண்டது. இது போன்ற நேரங்களில் ஜன்னலைத் துடைப்பது, மகள் சமைக்க காய்கறி வெட்டி வைப்பது போன்ற வேலைகளை இழுத்துப் போட்டுக் கொண்டு வெறுமையை விரட்டினார். மற்றபடி நூலகத்திலிருந்து எடுத்து வந்த புத்தகங்கள் அவருக்கு கைகொடுத்தன.
இந்த ஊரில் அவருக்கு மிகவும் பிடித்த இடம் நூலகம் தான். வர்ஷா பள்ளிக்கு சென்றதும் பொதுவாக அவர் நூலகம் சென்று விடுவார். அங்கே இருந்த பலவகையான தமிழ்ப் புத்தகங்கள் அவருக்கு பிரம்மிப்பைக் கொடுத்தன. அரிதான புத்தகங்கள் கூட மிகச் சாதாரணமாய் கிடைத்தன. அமைதியான சூழலில் தேவைப்பட்ட புத்தகத்தை எடுத்து படிப்பது அவருக்கு மிகவும் பிடித்துப் போயிருந்தது.
புத்தகத்தை எடுத்துக் கொண்டு உட்கார, கொஞ்ச நேரத்தில் கண்களைச் சொருகியது. அதை மூடி வைத்தார். இப்போது தூங்கினால் இராத்தூக்கம் அவ்வளவு தான். ஊரில், இது போன்ற மதிய நேரங்களில், மனைவி காலடியில் அமர்ந்து ஊர் கதைகள் பேச, அரைத் தூக்கத்தில்உம்கொட்டி பழகிப்போயிருந்தது. மனைவி வரும் வரை பொழுதை ஓட்டித் தான் ஆக வேண்டும்! இப்போது மனைவிக்கு கடிதம் எழுதுவோமா என்று யோசித்தார். இரண்டு பக்கங்கள் எழுதி முடித்த போது மணி ஐந்தைத் தொட்டிருந்தது. வர்ஷாவுக்கு பால் கலக்கி கொடுத்து, இரவு சமையலுக்கு ஆயத்தங்களைச் செய்யும் போது ரேணு வந்தாள்.
சுப்பம்மாவ கூப்பிட்டு வரத பத்தி இப்ப பேசுவோமா?’ புது யோசனையைச் செயல்படுத்தும் ஆர்வம் அவரை உந்தித் தள்ளியது.
என்னப்பா!, இன்னிக்கி வர்ஷா அடம் பிடிக்காம சாப்பிட்டாளா? வர்ஷா செல்லம் இன்னிக்கி ஸ்கூல்ல என்ன படிச்சீங்க?” குழந்தையை கொஞ்சியபடி சமையலைத் துவக்கினாள் ரேணு.
பாவம்! இவளும் தான் என்ன செய்வா? வேலைய விட்டு வந்ததும் சமையல், குழந்தையின்னு!’
மனம் மகளுக்காக பச்சாதாபப்பட்டது.
கொஞ்ச நேரம் கழித்து பேசுவோம்!’
தன் ஆர்வத்தைச் சற்று தள்ளிப்போட்டார்.
சப்பாத்திக்கு மாவு பிசைந்தபடி நாற்காலியில் உட்கார்ந்தாள் ரேணு.
அப்பா! அண்ணன் இன்னிக்கு மெயில் அனுப்பியிருந்தது. அம்மாவ கொஞ்ச நாள் அவங்க வீட்டுக்கு கூட்டிட்டு போகுதாம். அண்ணி வேலைக்கு போகலாம்னு இருக்காங்கலாம்!” ரேணு சொல்லிக் கொண்டிருந்த போதே இவருக்குகப்பென்று துக்கம் நெஞ்சை அடைத்து.
வீட்டையும் கண்ணனையும் கொஞ்சம் நாள் பார்த்துக்க இவங்களை அழைச்சிட்டு போறானாம்! நைட்டுக்கு போன் பேசுவோம்.”

இவரால் எதுவும் பேசமுடியவில்லை. ஆண்பிள்ளைகள் அழக் கூடாது என்ற அவரின் உள்ளக் கட்டுப் பாட்டையும் மீறி, கண்களின் விளிம்பை நீர் நிறைத்தது. அதை மறைக்க சமையலறைக்குள் வந்து ஒரு கோப்பை நீர் அருந்தினார்.
இவங்க முடிவு எடுத்துட்டாங்களா, இல்லை நம்ம ஏதாவது கேட்பாங்களா?’ என்ற கேள்வி எழுந்தது.
மகள் சொன்னதைப் பார்த்தால் முடிவு எடுத்துவிட்டாற் போல தான் தோன்றியது.
முன்னெல்லாம் சின்ன விஷயத்துக்கும் அப்பா என்ன செய்யலாம்னு தான் கேட்பாங்க. இப்போ பெரியவுங்களா ஆயிட்டாங்கல்ல?!’ ஆற்றாமை மேலும் கண்களில் நீரை வரவழைத்தது.

சற்று நேரம் கீழே சென்று வருவதாக சொல்லி விட்டு, வழக்கமாய் பார்க்கும்ரேகா .பி.எஸ்ஸைத் துறந்து, பூங்காவிற்கு சென்று அமர்ந்தார். காற்று அவரை சற்று ஆசுவாசப்படுத்தியது. தலை பாரமாக இருந்தது. சற்று நேரம் கண்களை மூடினார். சாலையில் பேருந்து செல்லும் இரைச்சல் சத்தமாய் கேட்டு பின் தேய்ந்தது. மரத்தின் மேலிருந்த பறவை ஒன்று படபடவென்று சிறகை அடித்துக் கொண்டது. சிறுவர்கள் உற்சாகமாய் சறுக்குப் பலகையில் ஏறியும், சறுக்கியும் விளையாடிக் கொண்டிருந்தனர். அவர்களின் உற்சாகம் அவர் கவனத்தைத் தன் பால் ஈர்த்தது. அவர்களை அழைத்து வந்த பணிப்பெண்கள் சற்று தள்ளி நின்றபடி பேசிக் கொண்டிருந்தனர். சற்றுநேரம் அவர்களையே வெறுமையாய் பார்த்துக் கொண்டிருந்த
அவருக்கு இப்படி தோன்றியது
நாம சட்டுன்னு விட்டுட்டு போனா இவங்களும் என்ன தான் செய்வாங்க?’
பாவம்! அவங்க வாழ்கை அப்படி. அவசரத்துல எதையோ கிடைச்சத கொட்டிகிட்டு ஓடறாங்க. கொஞ்ச நாளைக்கு நம்மால ஆனதைச் செய்வோம். பிறகு பார்ப்போம்!’
அனிச்சையாய் கண்ணீர் வழிந்தது.
கவலைகளைக் காது கொடுத்து கேட்கும் தோழியாய், தேவைகளை உணர்ந்து செய்யும் தாதியாய், தன் கடமைகளைத் தவறாது செய்து வரும் மனைவி, இப்போது அவருள் விசுவரூபம் எடுத்திருந்தாள்.
ஆனா ஒன்னு, இந்த முறை கிளம்பினோம்னா அவ்வளவுதேன்! பையன் வீடோ, பொண்ணு வீடோ ! சுப்புவோட ஒன்னாத்தேன் போகணும், ஒன்னாத்தேன் வரணும்!’
கண்ணீரை கைகுட்டையால் ஒத்தியபடி
கடவுளே! ஆயுச மட்டும் இன்னும் கொஞ்ச நாளக்கி கொடு!’ என்று மானசீகமாய் வேண்டிக் கொண்டார்.
(என் முதல் கதை -  சிங்கப்பூர் எழுத்தாளர் கழகம் நடத்திய முத்தமிழ் விழா  2010ல் ஊக்கப் பரிசு பெற்றது)