சனி, 15 நவம்பர், 2014

அப்பாவுக்காக . . .      நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் . . . பி.பி. ஸ்ரீநிவாஸின் குரல் காற்றில் மிட்டாயைப் போல கரைந்து வந்தது.

ஏண்டா! எவ்வளவு தைரியம் இருந்தா வீட்ல சொல்லாம படத்துக்கு  போவ . . .’

மழை கூரையின் மேல் தடதட வென்று விழுந்துக் கொண்டிருந்தது.

அப்பா வேணாம்பா . . .!’

ஐயோ! விட்டுடுங்க! அவன் எங்கிட்ட சொல்லிட்டு தான் போனான்

      மழைச்சாரல் உள்ளே வராமல் இருப்பதற்காக வாசலில் தடுப்பாய் சாய்த்து வைக்கப்பட்டிருந்த தகரத்தையும் மீறி வீட்டின் மண் தரை நனைந்து போயிருந்தது.

ஆயியும் மவனும் சேர்ந்துகிட்டு என்னை ஏமாத்துறீங்களா?’

அப்பா! அம்மாவ அடிக்காதீங்கப்பா! இனி நான் இப்படி போக மாட்டேன்!’

கண்களின் ஈரத்தினூடே யாரோ நிற்பது மசமசப்பாய் தெரிந்தது.

சங்கர் நின்றுக் கொண்டிருந்தான். ஆஸ்திரேலியாவில் இருக்கும் மகன். இவன் எப்போது இங்கே வந்தான்!

பொன்னையாவுக்கு குழப்பமாய் இருந்தது.

இறந்த காலத்திலிருந்து நிகழ்காலத்திற்குள் நினைவுகளைக் கொண்டுவர பிரயர்த்தனம் தேவையாய் இருந்தது.

சங்கர் சற்றே சதைப்போட்டிருந்தான்.

அடுத்த நொடி குழப்பம் மறந்து போய் சந்தோஷமானார்.

சங்கரு... எப்பாய்யா வந்தீங்க! அப்பாவ பாக்கணும்னு இப்பயாவது தோணுச்சா?”

பேசுவதற்குள் மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கியது அவருக்கு.

சங்கர் வந்து இரண்டு நாள் ஆகியிருந்தன. அவர் அவனை வரவேற்பது இது மூன்றாவது முறை.

     சங்கருக்கு கண்கள் கலங்கின. படுக்கையை ஒட்டியிருந்த நாற்காலியில் அமர்ந்து அப்பாவின் மெல்லிய கைகளை பிடித்துக் கொண்டான். தோல் சொர சொரவென்று நீர்பசையின்றி இருந்தது. கறுப்புத் தோலின் சுறுக்கங்களினூடே எலும்பின் வடிவம் சன்னமாய் தெரிந்தது. அம்னீஷியா வந்த பின் உடல் நன்றாய் மெலிந்து போயிருந்தது.

     ஒரு காலத்தில் இரவும் பகலும் ஓடியாடி வேலை செய்த அப்பா இவரில்லை என்று தோன்றியது. அப்போதெல்லாம் அப்பா வெள்ளை வேட்டி சட்டையைத் தான் அணிவார். நெற்றியில் பளிச்சென்று ஒரு திருநீறு கீற்று இருக்கும்.

     அப்பா எப்போதும் தன் உடைகளை தானே துவைத்துக் கொள்வார்.  அவர் தன் துணிகளைத் துவைப்பதில் ஒரு நேர்த்தி இருக்கும். காலை எழுந்த உடன் கட்டி சோப்பு போட்டு தேய்த்து துணிகளை ஊற வைத்துவிடுவார். பத்து மணி வாக்கில் குளியலறையில் கால்களை குத்த வைத்து அமர்ந்து, சட்டைகாலரில் ஆரம்பித்து, மெல்ல மெல்ல இணுக்கு விடாமல் ஒரு குழந்தையை தேய்ப்பது போல மென்மையாய் தேய்த்து, இரண்டு முறை அரை வாளி நீரில் அலசி, பிழிந்து, சுருக்கம் போக உதறி அதை நிழலில் உலர்த்துவார். ஏனோ உடைகளை வெயிலில் உலர்த்துவதில் அவருக்கு பிடித்தமில்லை.

     காய்ந்த பின் சுறுக்கங்களை விரல்களால் நீவி மடித்து வைப்பார். அலமாரியில் வைக்கப்பட்டிருக்கும் அவரது வேட்டி சட்டைகள் தொட்டு பார்ப்பதற்கு குழந்தையின் கன்னம் போல மெத்தென்று இருக்கும். இப்போது பிள்ளையின் வசதிக்காக லுங்கிக்கு மாறியிருந்தார்.

சாப்பிட்டியாப்பு!”

ஆச்சுப்பா!”

எப்படிப்பா போகுது வேலையெல்லாம்!”

ஐயோ தாத்தா! இதையே எத்தன முறை கேட்ப!” என்றான் அங்கே விளையாடிக் கொண்டிருந்த அண்ணன் மகன் சுதாகர்.

     பொன்னையாவின் கண்களில் குழப்பம் தெரிந்தது. முன்னர் கேட்டது நினைவின்றி, வெற்று நினைவுகளை ஆராய்ந்து பார்த்தார். இதைப் பார்த்த சங்கருக்கு வருத்தமாய் இருந்தது.      இப்படி கேட்பதால் அவருக்கு குழப்பமே ஏற்படும் என்பதை பாலா ஒப்புக் கொள்வதில்லை. ‘இவரை நீ கூட வச்சிருந்து பார்த்தா தான் தெரியும்!’  என்று வார்த்தைகளால் முகத்திலடித்து விடுவான்.

உனக்கு தெரியாது சங்கர்! அன்றைக்கு சோறும், மீன் சம்பாலும், அப்ப தான் சாப்பிட்டுட்டு உட்கார்ந்திருந்தார்.  அரை மணி தான் இருக்கும்! ராகவன் மாமா வந்து பேசிகிட்டு இருக்கார்.

பார் ராகவா! காலையிலேயிருந்து இன்னும் எனக்கு சாப்பாடே போடல! வயசாயிட்டா ரொம்ப நாள் உசிரோட இருக்கக் கூடாதுப்பா! பொண்டாட்டி எறந்துட்டா கூடவே நாமளும் போயிடனும் . . . முன்னல்லாம் பொண்டுகள் உடன் கட்டை ஏறுவாங்களே! அந்த மாதிரின்றார் சங்கர். எவ்வளவு சங்கடமாய் இருக்கு தெரியுமா? அன்னிக்கு எல்லாம் மாலா அழுதுகிட்டே இருந்தா!’

சங்கரால் புரிந்துக் கொள்ள முடிந்தது!

இப்போது அப்பாவின் முகம் கூம்பிப் போயிருந்தது.

எதுக்குமே லாயக்கி இல்லாமல் போயிட்டம்பா!” என்றார் அறையின் மூலையை வெறித்தபடி.

அதெல்லாம் ஒண்ணுமில்லப்பா!”

மனுஷனோட நினைவுகளுக்கு சாவு வந்துட்டா, பெறகு உயிர் இருந்தும் பிரயோசனமில்ல! எல்லாமே செத்துப் போயிடுது!”

அப்பா! நான் கூட தான் அப்பப்ப மறந்து போறேன்! அதுக்கெல்லாம் வருத்தப் பட்டா முடியுமா!”

நாம இருக்கறது யாருக்கும் தொல்லையா இருக்கக் கூடாதுப்பா!”

யாருக்கும் எந்த தொல்லையும் இல்லை. வந்துட்டேன்ல்ல! நான் பார்த்துக்கறேன். நீங்க தூங்குங்க!”

சோர்வுடன் கண்களை மூடிக் கொண்டார்.

உள்ளேயிருந்து கோழிக் குழம்பு வாசம் வந்தது.

மூடிய கண்களுக்குள் புடவைத் தலைப்பில் கைகளைத் துடைத்தபடி அவருடைய அம்மா வந்தாள்.

சாப்பிட வாப்பா! ‘ என்றாள். இவருக்கு பசித்தது. இருந்து கண்களைத் திறக்க சக்தியற்று அப்படியே கிடந்தார்.

அப்பா ஓய்வு எடுக்க விட்டு வெளியே வந்தான் சங்கர். 

     இவனை பள்ளிக் கூடத்திற்கு கையைப் பிடித்து அழைத்துப் போன அப்பாவை, தூங்கும் போது கிருஷ்ணன் கதை சொன்ன அப்பாவை, விடுமுறை நாட்களில் பட்டம் விட கற்றுக் கொடுத்த அப்பாவை, சைக்கிளில் உட்கார வைத்து சினிமாவிற்கு அழைத்துப் போன அப்பாவை நினைத்தபடி கோப்பி ஷாப்பில் உட்கார்ந்திருந்தான்.

     அவன் ஆஸ்திரேலியாவில் நல்ல வேலையிலிருந்தான். சிறுவயது முதலே அவனுக்கு வெளிநாட்டு படிப்பின் மீது, வேலையின் மீது ஒரு மோகம் இருந்தது. ஏன் அதன் மேல் ஒரு வெறி என்று கூட சொல்லலாம்! அப்பாவிற்கு பிள்ளையை வெளிநாடு அனுப்புவதில் அவ்வளவாய் விருப்பமில்லை. இருந்தாலும் அவனுடைய விருப்பத்தில் தலையிடாமல் கௌரவமாய் ஒதுங்கிக் கொண்டார்.

     அங்கே இரண்டு வருடம் படித்து முடித்து, இப்போது தான் வேலையில் சேர்ந்திருந்தான். திருமணம் முடிந்தபின் குடும்பத்தோடு அங்கேயே தங்கிவிடும் எண்ணம் இருந்தது. இப்போதிருக்கும் நிலையில் அப்பாவை அங்கே அழைத்துச் சென்று வைத்துக் கொள்ள முடியாது! அழைத்துச் சென்றாலும் அவரால் சமாளிக்க முடியுமா என்று சந்தேகமாய் இருந்தது.

     தனக்கென்று எதுவும் வைத்துக் கொள்ளாமல், தன்னால் இயன்றதை பிள்ளைகளுக்கு செய்து, தங்களை வளர்த்த அப்பாவை இந்த நிலையில் பார்ப்பது அவனுக்கு வேதனையைக் கொடுத்தது.

     அப்பா, வேலை முடிந்து திரும்பி வரும் போது சாப்பிட ஏதோவொன்று இல்லாமல் வீட்டிற்குள் நுழைந்ததில்லை! இவனும், அப்பா      உள்ளே நுழையும் போது கையில் என்ன வாங்கி வருகிறார் என்பதை தான் முதலில் பார்த்திருக்கிறான். இவனுக்கும் பாலாவிற்கும் யார்  முதலில் அவர் கையிலிருக்கும் பொட்டலங்களை வாங்குவது என்ற போட்டி நடக்கும்.  பரோட்டாவோ, மீ கொரீங்கோ, மட்டன் வறுவலோ ஏதோவொன்று பொட்டலத்திற்குள் இருக்கும். பிள்ளைகள் இருவரும் சாப்பிடுவதைப் பார்த்து திருப்தியடையும் அப்பாவாகவே இருந்தார் அவர். அவர்கள் வாயில் ஒட்டியிருக்கும் உணவுத் துணுக்குகளைத் தன் மேல் துண்டினால் மெல்ல துடைத்துவிடுவார்.

     அவருக்கு நீர்விட்ட சாதமும் பச்சைமிளகாயும் போதும். கேட்டால் இதுதான்யா உடலுக்கு நல்லது என்பார். அவரது சம்பளத்தில் இவர்களுக்குச் செய்தது எவ்வளவு பெரிய விஷயம் என்று இப்போது அவனுக்குப் புரிந்தது.

     இப்போது அப்பாவிற்கு ஏதேனும் வாங்கிப் போக வேண்டும் என்று தோன்றியது. ஒரு பிரியாணி பொட்டலத்தை வாங்கிக் கொண்டான். அஜீரணக் கோளாறு ஏற்படுமோ என்று ஒரு கணம் யோசித்தான்! பின் பரவாயில்லை என்று அதை எடுத்துக் கொண்டு வீட்டிற்குச் சென்றான். 

அறைக்குள் நுழைந்த போது, ஜன்னலை வெறித்துக் கொண்டிருந்த அப்பாவின் பார்வை சட்டென்று இவன் கையிலிருந்த பொட்டலத்திற்கு தாவியது.

வாப்பா சங்கர்! எப்ப வந்த?” கண்கள் பொட்டலத்தின் மீதே இருந்தன.

அவருக்கு விளக்கிச் சொல்ல பிரயர்த்தனப்படாமல்

இப்பதாம்பா!” என்றான் சங்கர்.

என்னப்பா வாங்கிட்டு வந்த?’ என்றார் குழந்தையின் ஆர்வத்தோடு. பொட்டலத்தைப் பிரித்து, சாதத்தை  விரல்களால் நன்கு பிசைந்து கொடுக்க ஆசையோடு சாப்பிட்டார். கொஞ்சம் சாப்பிட்டானதும் போதும் என்று சைகை காட்டினார். தண்ணீரைக் குடித்தபின் அவர் வாயை துவாலையால் துடைத்து விட்டான் சங்கர்.  சாப்பிட்டு முடித்த திருப்தி அவர் முகத்தில் தெரிந்தது.

ஒரு முறை நாசி லெமாக் சாப்பிடணும்ப்பா. நம்ம வீட்டுக்கு கீழ ஒரு மலாய் கடை இருக்குமே, ஞாபகம் இருக்கா! இலையில வச்சு கட்டிக் கொடுப்பானே!” என்றார்.

சரிப்பாஎன்றான் சங்கர்.

தலையணையில் சாய்ந்தபடி, கால்களை நன்றாய் நீட்டிக் கொண்டார்.

ஏம்பா! அத்தைய நேத்து அதிகமா ஏசிட்டேன், கோபமா இருப்பாளா? அவளப் போயி பார்த்துட்டு வருவோமா?”

இருபது வருடங்களுக்கு முன் நடந்த நிகழ்ச்சி நினைவுக்கு வந்திருக்க வேண்டும்! அத்தை இறந்து இரண்டு வருடங்களாகி விட்டது! நீண்ட காலத்துக்கு முந்தைய நினைவுகள் மறக்காமல் இருக்க, அண்மைய நினைவுகள் தொலைந்து போவது ஆச்சரியமாக இருந்தது.

சரிப்பாஎன்றான்.

இதையெல்லாம் வேண்டுமென்றே செய்வதாக அண்ணி மாலா நினைத்துக் கொள்கிறார்.

கழிவறைக்கு போகணும்னா ஒழுங்கா போகணுமில்லையா! இல்லை இவரையாவது கூப்பிடலாமா! ரெண்டுமில்லாம வாசலிலேயே அசுத்தம் பண்ணி வச்சுட்டார்! ஒருமெய்ட்எடுத்துட்டாக் கூட பரவாயில்ல! அதுக்கும் வர வருமானம் பத்தாது! என்ன செய்யறது!’ என்றாள் அவள்.

அண்ணியின் பொறுமை எல்லையை மீறிக் கொண்டிருக்கிறது என்று தோன்றியது. அவளையும் குறைச் சொல்ல முடியாது. சலிப்பாய் பேசினாலும் வேலைகளைச் செய்துக் கொண்டு தான் இருக்கிறாள்.

இதெல்லாம் தெரிந்து செய்யவில்லை!” என்றார் மருத்துவர்.

இந்த வியாதியே இப்படித்தான். பழசெல்லாம் தேதியோட பளிச்சுன்னு ஞாபகம் இருக்கும். இப்ப நடக்கறடெல்லாம் சுத்தமா மறந்து போயிடும். இது இவங்களுக்கு இரண்டாவது குழந்தைப் பருவம் மாதிரி! கூட இருக்கறவங்க தான் பத்திரமா பொறுமையோட பார்த்துக்கணும்என்றார்.

     அப்பா மருத்துவருக்குப் பக்கத்தில் வைக்கப்பட்டிருந்த கடிகாரத்தை பார்த்தபடி, ஏதோ யோசனையில் அமர்ந்திருந்தார். டாக்சியில் செல்லும் போது அப்பாவின் கண்கள் கலங்கியிருந்தன. சன்னலுக்கு வெளியே மழையில் நனைந்திருந்த சாலைகளைப் பார்த்தபடி வந்தார். அவ்வப்போது எச்சிலை விழுங்கிக் கொண்டார்.

     டாக்சியை விட்டு இறங்கும் போது என்ன நினைத்தாரோ, என்ன புரிந்துக் கொண்டாரோ, “என்னால யாருக்கும் எந்த பிரச்சனையும் வேண்டாம்! ஏம்ப்பா என்னை ஏதாவது இல்லத்துல சேர்த்துடேன்!” என்றார். அவர் குரல் நடுங்கியதில் வார்த்தைகள் தெளிவின்றி கேட்டது.

     ஒருமுறை தீபாவளி கொண்டாட்டத்தின் போது அப்பாவுடன் இவன் லிட்டில் இந்தியா சென்றிருந்தான். மின்விளக்குகளின் வெளிச்சத்தில் விதவிதமான பொருட்களை விற்ற கடைகளையும், மனிதர்களையும் பிரம்மிப்புடன் பார்த்துக் கொண்டே வந்தான். அப்பாவின் கையை பத்திரமாய் பிடித்துக் கொண்டே வந்தவன் எப்படியோ கையைத் தவறவிட்டிருந்தான். 

     அந்த நிமிடம் அவ்வளவு பெரிய இடத்தில், உயரமான மனிதர்களுக்கிடையே மூச்சு முட்டுவது போல இருந்தது. சற்றுமுன் வண்ணமயமாய் தோன்றிய கடைகள் அப்போது இவனை விழுங்கக் காத்திருக்கும் பிரம்மாண்ட அரக்கர்கள் போல தோன்றின. இனி அப்பாவைப் பார்க்கவே முடியாதோ என்ற பயம் இவனை பிடித்துக் கொண்டது.

வென்று அழத் தொடங்கிய போது, எங்கிருந்தோ விரைந்து வந்த அப்பா அவனை தூக்கி வைத்துக் கொண்டு,

தம்பி இதோ இருக்கேம்பா அப்பா! எங்கேயும் போகலை!’ என்றார். பயத்தில் அவர் கழுத்தை கெட்டியாய் கட்டிக்கொண்டான் சங்கர். அதன் பின் வீடு வந்து சேரும் வரை அவனை கீழே இறக்கியே விடவில்லை, அப்பா.

இப்போது அப்பா அந்த நிலையில் இருப்பதாய் தோன்றியது!

உடல் குறுகி, தலைக் குனிந்து, நடுங்கும் விரல்களை இறுக்க மூடிக் கொண்டு நிற்கும் அவரைப் பார்க்கும் போது, தவறு செய்துவிட்ட சிறுவனைப் போல இருந்தார்.

மனம் சட்டென்று கனத்துப் போனது!

நான் இருக்கேம்ப்பா உங்ககூட! தைரியமா இருங்க!” என்றபடி அவர் கைகளைப் பிடித்துக் கொண்டான்.

     அவர் கை இன்னமும் நடுங்கிக் கொண்டிருந்தது. அப்பாவின் பயங்களைப் போக்கி ஒரு குழந்தையைத் தேற்றுவது போல தேற்ற வேண்டும் என்று தோன்றியது. அவனுக்கு தன்னைத் தோளில் சுமந்து சென்ற பழைய அப்பாவைப் பார்க்க வேண்டும் போல இருந்தது.

     இரவெல்லாம் தூக்கம் வரவில்லை, சங்கருக்கு. அப்பாவை நன்றாக பார்த்துக் கொள்வது என்பது தன்னால் மட்டுமே தனித்து செய்யக் கூடிய செயல் இல்லை என்று புரிந்தது. இங்கேயே வந்துவிட்டால் கூட, வேலைக்கு போகும் நேரமெல்லாம் அவரை எங்கே விடுவது!

எண்ணங்கள் மனதில் ஓட, புரண்டு புரண்டு படுத்தான். பின் எழுந்து சன்னல் அருகே சென்று நின்றுக் கொண்டான். வெளியே நிலா தனிமையில் உலா வந்துக் கொண்டிருந்தது.

     மிகவும் யோசித்த பின், முதலில் ஒரு திருமணம் செய்துக் கொள்ள வேண்டும். பின் அப்பாவைப் பார்த்துக் கொள்ள என்று மட்டுமே ஒரு பணிப்பெண்ணை எடுத்துக் கொள்ள வேண்டும். பிறகு முடிந்தவரை அப்பாவுடனேயே பொழுதைப்போக்க வேண்டும் என்று முடிவு செய்துக்கொண்டான். அதன் பின் தான் தூக்கம் வந்தது அவனுக்கு.

மறுநாள் காலை,

அப்பா! நான் இனி உங்ககூடவே இருக்கப் போறேன்!”

அப்ப உன்னோட வேலை?”

இங்க அதைவிட நல்ல வேலை கிடைக்கும்ப்பா!”

நெசமாவாய்யா!”

அப்பாவின் கண்கள் சந்தோஷத்தில் பனித்தன.

உண்மையா! இனி நீங்க எதுக்கும் பயப்பட வேணாம்! நீங்க என்னை பார்த்துகிட்டதுக்கும் மேல, உங்கள நான் பார்த்துப்பேன்!”

அப்பாவிற்கு எவ்வளவு புரிந்தது என்று தெரியவில்லை! ஆனால் அவர் சிரித்த சிரிப்பில் ஒரு நிம்மதி தெரிந்தது.

இந்த நிம்மதியை விட வெளிநாட்டு வேலை ஒன்றும் பெரிதில்லை என்று நினைத்துக் கொண்டான் சங்கர்.

(முத்தமிழ் விழா 2012ல் இரண்டாம் பரிசு பெற்ற கதை)