செவ்வாய், 22 ஆகஸ்ட், 2017

டிஷ்யூ விற்பவர்

எம். ஆர். டி நிலையத்திற்கு அருகில் இருக்கும் கடைத்தொகுதி அது. அங்கே இருந்த கடை ஒன்றில் சட்டைகளைப் பார்த்தபடி நின்றுக் கொண்டிருந்தேன். அப்போது அந்தப் பக்கமாக ஒரு வயதான பெண்மணி.... baju kurung அணிந்திருந்தார். என் அம்மாவின் வயதிருக்கும். நடையில் முதுமை தெரிந்தது.
என்னைத் தாண்டும் போது, கையிலிருந்த டிஷ்யூக்களை நீட்டி, இளைத்த குரலில் த்ரீ ஃபார் ஒன் டாலர், த்ரீ பார் ஒன் டாலர் என்றார். அவ்வார்த்தைகள் அவருக்கே இன்னும் பழக்கமாகியிருக்கவில்லை என்பதை அவர் குரலில் இருந்த தடுமாற்றம் உணர்த்தியது. மனதுள் பாறையாய் இறங்கியது அவரது இரைஞ்சல்.
வாங்க நினைத்த பொருளைப் பற்றி சுத்தமாய் மறந்து திகைத்து நின்ற சில நொடிகளில், நான் டிஷ்யூவை வாங்கப் போவதில்லை என்று முடிவு செய்தவர் போல தள்ளாட்டத்துடன், வேறு பக்கம் செல்லத் துவங்கினார்.
சில கணங்கள் அவரது நம்பிக்கை அலைகழிய காரணமாய் இருந்து விட்டேன் என்ற குற்றவுணர்வு நெருக்க, அவரைத் தொடர்ந்து சென்று, என்னால் இயன்ற வெள்ளிகளைக் கொடுத்தேன்.
நடுங்கும் கரங்கள் நீட்டிய டிஷ்யூ பேக்கட்களை மென்மையாய் மறுத்து எதிர் பக்கம் நடக்கத் துவங்கினேன். அவரது தேங்க்யூ என்னைத் துரத்தி வந்தது. அதைக் எதிர் நோக்க அஞ்சியோ என்னவோ, என் நடை துரிதப்பட்டிருந்தது.

இறந்து போனவளின் கடைசி மணித்துளிகள்

‘இனியொரு முறை இந்தப் பக்கம் வரக்கூடாது’ என்று அம்மா வீட்டை விட்டு வெளியேறும் போது அவள் நினைத்துக் கொண்டாள்.
‘எல்லோர் குடும்பத்திலும் இருக்கும் பிரச்சனை தான், குழந்தை கொஞ்சம் பெரிதாகி கேள்விகள் கேட்கத் துவங்கினால் சரியாகிப் போகும், பிள்ளைக்கு அடிபணியாத மனிதர்களே இல்லை’ என்றெல்லாம் சொல்லி அழைத்து வந்து விட்டுச் சென்ற சகோதரனை யாரும் சீண்டக்கூட இல்லை.
அவன் மீது கோபம் இருந்தாலும், தன் வீட்டு மனிதனுக்குக் கிடைக்காத மரியாதை சதைக்குள் புதைந்திருந்து அசையும் முள்ளாய் வலியைக் கொடுத்தது.
அடுத்து வந்த நாட்களில், இவளின் இருத்தலை வலிந்து புறக்கணித்த குடும்பத்தினர்களை அவளும் பொருட்படுத்தாமல் இருக்க முடிவு செய்து கொண்டாள். கால்களுக்கிடையே சுற்றி வரும் இரண்டு வயது பிள்ளையை மட்டுமே பற்று கோலாய்க் கொண்டு, வாழ்வை அவனிருக்கும் திசையில் நகர்த்தத் துவங்கினாள்.
அன்று மாமனார் வீட்டிற்குள் வந்த போதே, குடித்து விட்டு வந்திருக்கிறார் என்று புரிந்தது. கூட வந்த இருவரின் உடல் மொழிகளும் அவளுடைய உள்ளுணர்வினைச் சலனப்படுத்தியபடி இருந்தன. அவர்கள் போகும் வரை தன் அறைக்குள்ளேயே இருக்க முடிவு செய்து கொண்டாள் அவள்.
சிணுங்கத் துவங்கியிருந்த மகனுக்காக அறையிலிருந்து வெளியேறி சமையலறைக்குள் சென்றாள். பிசைந்த சாதத்தில் உப்பு இருக்கிறதா என்று சரிபார்த்துக் கொண்டிருந்த போது, ‘கொடு நான் ஊட்டுகிறேன்’ என்று சொன்ன மாமியாரை அவளால் மறுக்க இயலவில்லை. அருகில் நின்றிருந்த மகனைத் தூக்கி அழுந்த முத்தம் கொடுத்தாள்.
அறைக்குள் சென்று மகன் இறைத்திருந்த பொருட்களை அடுக்கி வைக்கத் துவங்கினாள். சில நொடிகளில் முதுகிற்குப் பின்னால் கதவைத் திறக்கும் சத்தம் கேட்க, சட்டெனத் திரும்பினாள்.
‘இப்படி பேசாமயே இருந்தா சரியாயிடுமா? என்று கரகரத்த குரலில் கேட்டபடி அறைக்குள் நுழைந்த மாமனாரைப் பார்த்ததும், கையிலிருந்த ஹெலிகாப்டரைப் போட்டுவிட்டு தன்னிச்சையாக பின்னோக்கி நகரத் துவங்கினாள். அவரைத் தொடர்ந்து வந்த இருவரும், கதவருகே நின்று கொண்டார்கள்.
‘எப்படியாவது எங்க வீட்டில கொடுத்திடுவாங்க’ என்று துவங்கி அவள் சொன்ன சமாதானங்கள் முன்னேறியபடி இருந்த மாமனாரின் காலடியில் நசுங்கிக் கொண்டிருந்தன. இது வழக்கமாய் நடக்கும் நிகழ்வாய் முடியப் போவதில்லை என்று அவளுடைய உள்மனம் பதறத் துவங்கியது. அந்த நேரம் கூட வந்திருந்த இருவரும் கட்டிலின் மேலிருந்த, அவள் பிறந்தகத்திலிருந்து கொண்டு வந்திருந்த தலையணைகளை ஆளுக்கு ஒன்றாய் எடுத்துக் கொண்டார்கள்.
அவள் அவர்களைப் பார்த்தபடியே கட்டிலுக்கும் சுவரிற்கும் நடுவே இருந்த இடைவெளியில் நுழைந்தாள். மூவரைத் தன்னால் சமாளிக்க முடியமா என்ற சந்தேகம் அவளுள் எழுந்தபடி இருந்தது. வெளியே மாமியாரிடம் உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்த மகன் நினைவிற்கு வந்தான். அலறிக் கொண்டே தன் உடலை எழுப்ப முயற்சிக்கும் அவனுடைய பிம்பம் கண் முன் தோன்றியது. எப்படியும் இவர்களிடமிருந்து தப்பித்துவிட வேண்டும் என்ற உறுதியுடன் முதுகில் முட்டிய சுவரின் மேல் தன் முழு பலத்தும் கொடுத்து கைகளால் மாமனாரைப் பிடித்துத் தள்ளத் துவங்கினாள்.
அவர்களால் மிகச் சுலபமாய் அவளைத் தரையில் வீழ்த்தி விட முடிந்தது. இடைவெளி குறுகலாக இருந்த்தால், அவளைக் கட்டிலுக்கு அந்தப் பக்கமாய் மூவரும் சேர்ந்து இழுத்துப் போட்டார்கள். இனியும் தாங்க முடியாது, இங்கிருந்து இப்போதே வெளியேறி, தன்னுடைய மகனை அழைத்துக் கொண்டு இவர்களின் கண்ணில் படாமல் ஏங்கேனும் சென்று விட வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்த அவளது முகத்தைத் தலையணை மறைத்தது.
தலையணையை ஒருவன் அழுத்தத் துவங்கிய கணம், மற்றொருவனும் அவனுடன் சேர்ந்து கொண்டான். இன்னும் ஒரேமுறை மகனை முத்தமிடத் துடித்த எண்ணங்களுடன் கைகளையும் கால்களையும் காற்றில் வீசிக் கொண்டிருந்தாள் அவள்.
சமீபத்தில் இறந்து போய், செய்தித்தாள்களில் இடம் பெற்றிருந்தவளின் கடைசி மணித்துளிகள் இப்படியாகவும் இருந்திருக்கலாம்.

பார்வை

( கொடுக்கப்பட்ட முதல் வரிக்காக  எழுதிய கதை.  இக்கதை பிப்ரவரி (2017)  கதைக்களத்தில் இரண்டாம் பரிசு பெற்றது. சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகத்திற்கு நன்றி) 

எனக்கு இந்த ஊர் புதிதாக இருந்தது.  
இதுநாள் வரையில், என் மன வரைபடத்திலிருந்தது, ஓசைகளாலும் தொடுகைகளாலும் வாசத்தாலும் கட்டமைக்கப்பட்ட ஊர். இது அதற்கு முற்றிலும் சம்பந்தமில்லாத இடம்.
எல்லாவற்றையும் இன்றே பருகிவிடும் துடிப்போடு கண்களைப் பெரிதாய்  விரித்து, சுற்றிலும் பார்த்தவாறு நடந்தேன். பள்ளமும் மேடுமாக மட்டுமே இத்தனை நாட்கள் அறிமுகமாகியிருந்த சாலை, எல்லையில்லா வழிகளைக் காட்டி மலைப்பைத் தந்தது. சுற்றிலும் வட்ட, அல்லது வட்டத்திற்கு அருகிலிருக்கும் முகங்கள். மரங்களின் பச்சை மனதைத் தடவுவதாயிருந்தது. இதுவரை வெப்பத்தால் மட்டுமே உணர்ந்திருந்த சூரியன், நேரத்தைப் பொறுத்து மஞ்சள் அல்லது ஆரஞ்சாய் மாறக்கூடியது என்பதை மனதில் குறித்துக் கொண்டேன். இதையெல்லாம் நான் கற்றுக்கொள்ள படப்புத்தகம் வாங்கி வைத்திருக்கிறாள் அம்மா.
தாழம்பூ குங்குமம் மணக்கும் குளிர்ச்சியான அம்மா என் நினைவில் இருப்பது போல, அவளது முப்பரிமாண முகம் இன்னும் மனதில் பதியவில்லை. அப்பாவின் அறிவுசார்ந்த வாதத்தை, அவர் முகத்தில் தெரிந்த உணர்வுகளோடு சேர்த்து உள்வாங்க முடியாமல் தடுமாறினேன். மொத்தத்தில் இருண்ட என் முன்னாள் உலகின் கதகதப்பை, இப்புதிய ஊர் எனக்குக் கொடுக்கவில்லை.
என்னைப் பொறுத்தவரை, இவ்வுலகம் வண்ணக் குழம்புகளால் தீட்டப்பட்ட, மிகப்பெரிய புதிர் விளையாட்டு. வழியில் என்னைப் பார்த்து உதடு விரிய சிரித்தவர்கள் புதிர் விளையாட்டின் பகுதிகளாக என் மனதுள் உறைந்தார்கள். பேசினாலொழிய அவர்களை என்னால் அடையாளம் காண முடியாது.
இரைச்சலாய், நாற்றமாய், இதுவரை நெஞ்சில் படிந்து போயிருந்த ஈரச்சந்தையின் மூன்றாவது பரிமாணத்துள் நுழைந்து ரோஜா மலர்களை வாங்கிக் கொண்டேன்.
எம்.ஆர்.டி நிலையத்தைக் கண்களால் பார்க்க மகிழ்ச்சியாய் இருந்தது. அப்போது,
ஹாய், யூ லுக் ஹேண்ட்சம்!” என்ற குரலுக்குத் திரும்பி அதைச் சொன்ன பெண்ணின் குண்டு முகத்தைப் பார்த்தேன். அவளுடைய கண்கள் என் கவனத்தைக் கலைத்தது. பிற கண்கள் என் விழிகளை நோக்குவதை என்னால் இன்னும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. கண்களை மூடி, மூளையை நிரடி, அது ரோசலினின் குரல் என்று உணர்ந்து சந்தோஷித்தேன். புதிரின் ஓர் முடிச்சை அவிழ்க்க முடிந்த குதூகலத்துடன் அவளுடைய ஷேமத்தை விசாரித்தேன்.
கால்களைத் தாங்கிய தரை, தனது அடையாளத்தை உணர்த்தி என்னை விரைவு ரயிலினுள்ளே செலுத்தியது. ரயில் முழுக்க ரோசலின் போன்ற முகங்கள். இன்னுமொருமுறை அவளைப் பார்த்தால் நிச்சயம் அடையாளம் காணமுடியாது. மார்சிலிங்கில் இறங்கும் போது, ஒரு முறை கண்களை மூடி, போக வேண்டிய விலாசத்தை நினைவுபடுத்திக் கொண்டேன்.
ஒன்பதாவது மாடியிலிருந்த அந்த வீட்டினுள்ளே பெரிதாய் மாட்டப்பட்டிருந்த படம்…… அவனாய்  தான் இருக்க வேண்டும். யாரென விசாரித்து, “ப்ளீஸ் கம்!” என்று உள்ளே அழைத்த பணிப்பெண், என்னை அமரச் சொன்னாள்.

மாம்! நம் ஜோயியின் கண்களைப் பொருத்தியிருக்கிறார்களே! அந்த  ஆடவன் வந்திருக்கிறான்!” என்று அவள் ஆங்கிலத்தில் சொல்வது கேட்டது. சற்றே பரபரப்புடன் கூடிய காலடிகள் கூடத்தை நோக்கி வருவதை உணர்ந்தேன். என் மனம் இந்த அழகான உலகைக் காதலிக்கத் தொடங்கியது அந்த நொடியில் தான். எனக்கு பார்வையைக் கொடுத்த மகனின் தாயைச் சந்திக்க தயாராகத் துவங்கினேன்