வெள்ளி, 9 மார்ச், 2018

வசந்தா மிஸ்

“என் மகள் Mathsல ரொம்ப வீக்” என்று தயக்கத்துடன் தொடங்கும் அம்மாக்களின் அழைப்புகள் என் கால்களைப் பிடித்திழுத்து பால்யத்தில் குப்புறத் தள்ளிவிடும்.

ஒருகாலத்தில் என் கணக்கும் அப்படி தான் ஆட்டம் கண்டு கொண்டிருந்தது. அன்றைக்கு என் படிப்பு 35 மதிப்பெண்களைக் குறி வைத்தே இருந்தது. அப்பொழுதெல்லாம் வகுப்பிற்கு வெளியே தரையில் உட்கார்ந்து பேடை மடியில் வைத்து பரீட்சை எழுதுவோம்.
12 X 44 X 6 X 0 =?
இது என் பரீட்சையில் ஒரு கேள்வி.
பென்சிலை மடியில்  வைத்துவிட்டு, பள்ளித் திடலில் குடை விரித்திருந்த மரத்தைப் பார்த்தபடி கொஞ்சம் நேரம் யோசித்தேன். பின்னர் நாக்கைத் துருத்தியபடி குனிந்து,
12 X 44= 528,
520 X 6= 3120
செய்த Transfer Errorஐக் கவனிக்காமல் மேலும் தொடர்ந்தேன்.
3120 X 0 = ம்ம்ம் . . .
இவ்வளவு பெரிய நம்பரை ஜீரோவால் பெருக்கினால் ஜீரோ என்பதை நம்ப மனமின்றி, எண்காருணிய அடிப்படையில் 3120வையே விடையாகப் போட்டு, அந்தக் கணக்கிற்கு, பூஜ்ஜியம் மதிப்பெண்களைப் பெற்றேன். அந்த அளவிற்கான பொது அறிவே அன்றைக்கு எனக்கு இருந்தது.

இப்படியாகத் தட்டுத் தடுமாறி ஒன்பதாம் வகுப்பில் நுழைந்த போது, செந்தூரத்தால் நீளமாய் ஒற்றை நாமமிட்டு, தளர்வான பின்னலுடன்  வஸந்தா மிஸ் வகுப்பாசிரியராய் வந்தார். கணக்கே வராத எனக்கு,  ஏனோ முதல் பார்வையிலேயே அவரைப் பிடித்துவிட்டது. அந்த பிடித்தல் அதிகமாகி பின்நாட்களில், ‘த’வின் வாலைக் கூடுதலான ஒரு வளைவுடன் இழுத்து விடும் அவரின் ஸ்டைலை நானும் முயற்சித்து தமிழாசிரியரிடம் திட்டு வாங்கினேன்.

கணக்குப் பாடத்தின் முதல் நாள் . . .
கணக்கைச் சொல்லிக் கொடுத்து விட்டு, யாராவது ஒரு மாணவர், கணக்கை போர்டில் செய்து காட்டுங்கள் என்று அவர் சொல்ல, ஏதோ ஒரு உந்துதலில் சட்டென கையைத் தூக்கி, கரும்பலகைக்கு அருகில் சென்றேன். அங்கு சென்று நின்ற போது தான் தன்நிலையை அடைந்தேன். அங்கிருந்து பார்க்கையில் வகுப்பே வித்தியாசமாகத் தெரிந்தது. அதுவரை புரிந்தது போலத் தோன்றிய கணக்கு அந்நியமாகியிருந்தது. எதையோ எழுதிவிட்டு, ‘உனக்கு எதுக்கு இந்த வேலை?’ என்று கேட்ட பெண்ணின் பக்கத்திலிருந்த என் இடத்தில் அமர்ந்தேன். உலகம் மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பியது. தவறாகிப் போன கணக்கையும் மீறி, ஆசிரியரிடம் என்னை அடையாளப்படுத்திக் கொண்டது மகிழ்ச்சியாய் இருந்தது.
எல்லோரிடமும் சகஜமாய் பழகிய வசந்தா மிஸ்ஸின் வீட்டு விலாசத்தை வாங்கி, அந்தத் தீபாவளிக்கு, ரோஜாப்பூக்கள் கொண்ட ஒரு வாழ்த்து அட்டை கூட அனுப்பி வைத்தேன்.
தீபாவளி முடிந்து வகுப்பிற்கு வந்த அவர், அந்த அட்டையைக் கையில் எடுத்துக் கொண்டு என்னிடம் வந்தார். புன்னகைத்தபடி அவர் நீட்டிய வாழ்த்து அட்டையை எட்டிப் பார்த்தால், அதில் என் தோழியின் பெயரை எழுதி வைத்திருந்தேன். அவருக்கும் என் தோழிக்கும் ஒரே நேரத்தில் வாழ்த்தை எழுதி, விலாசம் மாற்றி அனுப்பி வைத்திருக்கிறேன்! அதைச் சொல்ல மீண்டும் அவரிடம் புன்னகை.

டியூஷன் எடுப்பதற்காக எங்கள் விடுதிக்கு அவர் வந்த போது, எங்க மிஸ் என்று எனக்குப் பெருமையாக இருந்தது. வெள்ளைத் தாட்கள் வைத்து அப்பா தைத்துத் தந்த லாங் சைஸ் ரஃப் நோட்டில் மார்ஜின் வரைந்து வைத்து, அவர் வருகைக்காகக் காத்திருக்கத் தொடங்கினேன். மார்ஜின் வரைந்து வைத்திருந்ததற்காகவே, என் நோட்டை வாங்கி அதில் தான் கணக்கைப் போட்டு சொல்லித் தருவார் அவர். இது மற்ற மாணவிகளுக்குத் அதிருப்தியைக் கொடுத்தாலும், எனக்கு அவருடனான நெருக்கத்தை அதிகப்படுத்தியது. அவர் கொடுக்கும் சவாலான கேள்விகளுக்கு என்னைத் தயார் படுத்திக் கொள்ள அதிக நேரம் பயிற்சி செய்தேன். மூலையில் யாரோ கசக்கிப் போட்டத் தாளில் கணக்குக் கேள்வி இருக்க, எடுத்து அதை சால்வ் செய்து அவரிடம் காட்டி சரியா என்று கேட்டேன். இப்படியாக, மெல்ல மெல்ல அவருக்கு விருப்பமான மாணவியானேன். பத்தாவது பொதுப் பரீட்சையின் போது, கணக்குப் பரீட்சைக்கு முன்தினம், எனக்கு நல்ல ஜூரம்.
‘அதெல்லாம் கவலைப்படாதே! இத்தனை நாள் செய்த பயிற்சி வீணாகப் போகாது, நீ நன்றாகச் செய்வாய்!’ என்று சொல்லி அனுப்பினார்.

‘நீ கணக்கில 100 மார்க் எடுத்திட்ட தெரியுமா?’ என்று சொல்லி, மதிப்பெண் தாளை வாங்க நுழைந்த என்னை வரவேற்றவரும் அவர் தான். அன்று தான் அவரைக் கடைசியாகப் பார்த்தது.

பின்னர் பள்ளி மாறிவிட்டேன். அவ்வப்போது அவரை நினைத்துக் கொள்வேன். சென்று பார்க்க வேண்டும் என்று தோன்றும். பள்ளி இருந்தது தி.நகர் என்பதால் சென்னைப் போகும் போதெல்லாம் அந்தப் பக்கம் போகவும் செய்வேன். ஆனாலும் ஏதோவொரு தயக்கத்தில் பள்ளியை வெளியிலிருந்து பார்த்துவிட்டு திரும்பிவிடுவேன். இரண்டு வருடங்களுக்கு முன், சென்னை சென்றிருந்த நேரம், பள்ளி, பழைய மாணவிகளுக்கு பொதுவாய் ஒரு informal அழைப்பு விடுக்க, நானும் சென்றேன். உள்ளே நுழைந்தவுடன் எனது முன்னாள் ஆங்கில ஆசிரியரான பாகீரதி மிஸ் கண்ணில் பட்டார். வசந்தா மிஸ் திருச்சி பக்கம் சென்றுவிட்டதாகவும், தற்போது அவருடன் தொடர்பில் இல்லை என்றும் சொன்னார். ஏமாற்றத்துடன் திரும்பினேன்.

‘எனக்குக் கணக்கு வராது!’ என்று சொல்லிக் கொண்டு வரும் மாணவர்களைப் பார்க்கும் போது எனக்குள் வசந்தா மிஸ் வந்து அமர்ந்துவிடுகிறார். உடனே நான் கணக்கு மருத்துவராய் மாறி விடுகிறேன். அந்த மாணவருக்கு கணக்குப் பாடத்தில் எங்குப்  பிரச்சனை துவங்குகிறது என்பதை முதல் வகுப்பில் ஆராய்ந்து, அதைப் போக்கும் வழிகளை அவருக்கேற்ப உருவாக்குகிறேன். மீண்டும் மீண்டும் பயிற்சி கொடுத்து, கணக்கைப் பார்க்கும் போதெல்லாம் துப்பறியும் நிபுணர்களாய் மாறக் கற்று கொடுக்கிறேன். சிதறிக் கிடக்கும் தடயங்களை வைத்து விடை கண்டுபிடிக்கும் வேலையை ரசனையுடன் அவர்கள் செய்வதைப் பார்த்து திருப்தி கொள்கிறேன். என்றேனும் ஒரு நாள் வசந்தா மிஸ்ஸை சந்தித்து, அவர் தான் இதற்குக் காரணம் என்று சொல்லியே ஆகவேண்டும். முடியுமா என்று தான் தெரியவில்லை!

3 கருத்துகள்:

ஸ்ரீராம். சொன்னது…

ஒரு ஆசிரியர் பள்ளியில் மட்டும்தான் ஆசிரியராய் இருக்க வேண்டுமா என்ன? என்னும் கற்றுக் கொடுத்துக்கொண்டே இருக்கிறாரே...

ஹேமா (HVL) சொன்னது…

நீங்கள் சொல்வது சரிதான்!

Bhanumathy Venkateswaran சொன்னது…

Arumai!